வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கொரோனா ஆலோசனை கூட்டத்திற்கு திமுக எம்.பி செந்தில்குமாருக்கு அனுமதி மறுப்பு .. வைரல் வீடியோ

மின்னம்பலம் : ஆலோசனை கூட்டத்தில் எம்.பி செந்தில்குமார் அனுமதிக்கப்படாதது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.    தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கலந்துகொள்ள வந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீசார், கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாகக் கூறினர்.

திமுக உட்பட எதிர்க்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிமுக அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடாமல் தொடர்ந்து புறக்கணிப்பதாகத் தெரிவித்த செந்தில்குமார், தன்னுடைய மாவட்டத்தில் நடக்கக்கூடிய கூட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மக்கள் பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்காக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அனுமதி கிடைக்காத நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திலோ அல்லது அக்கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பங்கேற்க அனுமதி கேட்கவில்லை. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அரசின் செலவில் - அரசு அதிகாரிகளுடன் அதுவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் மற்றும் கொரோனா மரணங்களைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத்தான் அனுமதிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்” எனக் கூறினார்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இது அடிப்படை உரிமை; அதை ஏதோ இவர்களுடைய சொந்த வீட்டில் சொந்தச் செலவில் தனிப்பட்ட முறையில் நடத்தும் நிகழ்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டு மறுக்கிறார் முதல்வர். மக்களின் பாதிப்பை, மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், பிறகு யாரிடம் முதலமைச்சர் கேட்க மாவட்டங்களுக்குப் போகிறார் என்று கேள்வி எழுப்பிய அவர்,

தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அரசு விழாக்களுக்கு அழைப்பதை அமைச்சர்களும், முதலமைச்சருமே கூட தவிர்ப்பது, ஆரோக்கியமான ஆட்சி முறைக்கு அழகல்ல. இதனை முதலமைச்சரும் - அ.தி.மு.க. அமைச்சர்களும் உடனடியாகக் கைவிட வேண்டும்; கைவிடாவிட்டால் மக்கள் மேலும் கடுமையாகத் தண்டிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களிடம் பேசும்போது இதற்கு பதிலளித்த முதல்வர், “அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் யாரையும் தடை செய்வது கிடையாது. யார் வேண்டுமானாலும் வரலாம். வரும்போது கொரோனா பரிசோதனை சான்றிதழ் எடுத்துவந்தால் மட்டும்தான் அனுமதிக்க முடியும். நானும் பரிசோதனை செய்துள்ளேன். ஏனெனில், இங்குள்ள அனைவரும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள். இவர்களுக்கு கொரோனா வந்தால் அந்த பணிகள் ஸ்தம்பித்துவிடும்” என்று விளக்கினார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக