திங்கள், 20 ஜூலை, 2020

பிரதமர் ராஜீவ் காந்தி இயக்கங்களை சந்திக்க விரும்பினார் .. இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 9

தர்மலிங்கம் எம்பி - ஆலாலசுந்தரம் எம்பி
திரு. அ அமிர்தலிங்கம்  :
நாடு கடத்தல் உத்தரவு:
 இதைத் தொடர்ந்து போராளி இயக்கங்களின் தலைவர்களைப் பிரதமர் ராஜீவ் காந்தி பார்க்க விரும்பினார். அவர்கள் செல்லத் தயங்கினர். இந்திய அரசுக்கும், சில இயக்கங்களுக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்பட்டது. போராளி இயக்கங்களோடு தொடர்புடைய மூன்று தலைவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டனர். அந்த செய்தி டெல்லியில் எனக்குக் கிடைத்தவுடன் திரு. பார்த்தசாரதியோடும் திரு.
ரொமேஷ்பண்டாரியோடும் தொடர்பு கொண்டும் நாடு கடத்தலை நிறுத்துமாறு வேண்டினேன். தமிழ் நாட்டு அரசாங்கம் கேட்டால் பலன் கிடைக்கலாம் என்று அவர்கள் கூறியதன் பேரில் சென்னைக்குத் தொடர்பு கொண்டு முயற்சித்தேன். அடுத்தநாள் ஆகஸ்ட் 25 ந்திகதி நானும் திரு.பார்த்தசாரதியும் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைச் சந்தித்தபோது நாடு கட்டத்தலை நிறுத்தி இயக்கங்களோடு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்துமாறு வேண்டினேன்.
ஏற்கனவே அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் விரைவில் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். நாம் இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் நாடு கடத்தலுக்கு நாமும் உடந்தையாக இருந்ததாகச் சிலர் அப்பட்டமாகக் குற்றம் சுமத்தவும் தயங்கவில்லை. நாம் எவ்வளவு பிரயாசப் பட்டோம் என்பது திரு. பார்த்தசாரதி அவர்களுக்கு நன்குத் தெரியும். திம்பு மாநாட்டில் ஆறு தமிழ் இயக்கங்களும் ஒற்றுமையாக இருந்த நிலைமாறி மீண்டும் வேற்றுமைகள் தலை தூக்கத் தொடங்கின.
தர்மலிங்கம்-ஆலாலசுந்தரம் படுகொலை:


செப்டம்பர் 2ந்திகதி மாலை சென்னையில் இருந்த ஓர் இயக்கத்தினருக்கு, அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று யாழ்பாணத்திலிருந்து கிடைத்தது. திரு. யோகேஸ்வரன் மூலம் இந்தச் செய்தி எமக்கெல்லாம் தெரியவந்தது. திரு. தர்மலிங்கமும், திரு. ஆலாலசுந்தரமும் யாரோ சிலரால் கடத்தி செல்லப்பட்டுவிட்டனர் என்பது அந்த செய்தி ஆகும். அடுத்த நாள் காலையில் இலங்கை வானொலியில், இலங்கையிலிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கடத்திச் செல்லப் பட்டதாகவும், திரு. தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் வீதியில் வீசப்பட்டுக் கிடந்ததாகவும், ஏனையோர் எக்கதியாயினர் என்று தெரியவில்லை என்றும் அறிவிக்கப் பட்டது.

இதற்கு சில மாதங்களுக்குமுன் அனுராதபுரத்தில் சில சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நெடுந்தீவிலிருந்து வள்ளத்தில் வந்த 47 தமிழ் மக்கள் இலங் கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டும், பலர் குற்றுயிராகப் படுகாயப் படுத்தப்பட்டும் விடப்பட்டபோது இரவும் பகலும் உழைத்து, மரண விசாரணையின் பின் உடல்களை உரிய இடங்களுக்கு அனுப்பவும், காயமடைந்தோரைக் கவனிக்கவும் ஆலாலசுந்தரம் செய்த சேவைக்கு நன்றி தெரிவித்து தீவுப்பகுதி மக்கள் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

1972 ஆம் ஆண்டு முதல் சிறைப்பட்ட தமிழ் இளைஞர் வீடுகளுக்கெல்லாம் தேடிச் சென்று உதவி புரிந்தவர் திரு.தர்மலிங்கம். இவர்களுக்குக் கிடைத்த பரிசு, எம்மவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டு வீதியில் வீசப்படுதல் கட்சி மாறி ஆட்சியில் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றவர்கள் உல்லாசமாக வாழ அன்று முதல் இன்று வரை நின்ற நிலை வழுவாத உத்தமர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த லட்சணத்தில் நாமெல்லாம் அங்கு வாழாது தமிழ் நாடு சென்றதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சகாக்களை யாராவது பார்த்தாலே விசாரணை. இந்நிலையில் நிராயுத பாணிகளாக நிற்கும் நாம் அங்கு ஓர் மூலையில் முடங்கிக் கிடந்து தமிழ்நாட்டிலிருந்து ஆற்றிய அத்தனை பணிகளையும் ஆற்றி இருக்க முடியுமா?

ஆயுதபாணிகள் ஆயிரம்பேர் தம்மைப் பாதுகாக்க இருப்போரே தம் பாதுகாப்புக்காகப் பெரும்பகுதி நாள் தமிழ் நாட்டிலிருக்கையில், நிராயுதபாணிகளான நாம், சகாக்கள் படுகொலை செய்யப்பட்ட நாம், அங்கிருக்கும் ஏனையோர் இயங்க விடாது தடுக்கப்பட்டதைக் கண்ட நாம், அதே கதியை ஏற்று, மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை மறந்து, இந்திய அரசோடு, தமிழ்நாட்டு அரசோடு. இங்குள்ள தலைவர்களோடு, உலக நாடுகளோடு, எமது மக்கள் படும் துயரை எடுத்துக் கூறி பரிகாரம் காணத் தவறினால் மக்கள் எம்மை மன்னிப்பார்களா? எது தவறு? அறிவு படைத்தோர் அறிவர்.


ஒப்பந்த வரலாறு .. 1
 ஒப்பந்த வரலாறு 2  
 ஒப்பந்த வரலாறு 3
 ஒப்பந்த வரலாறு 4 

ஒப்பந்த வரலாறு 5

ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7
ஒப்பந்த வரலாறு 8


பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக