புதன், 24 ஜூன், 2020

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை.. செல்போன் லஞ்சமாக கேட்டு நடந்த கொலைகள்! ....

சில நாட்களுக்கு முன்பாக செல்போன் லஞ்சமாக கேட்டிருந்தார்கள் என்று தெரியவருகிறது அதை அவர்கள் தர மறுத்ததால் இந்த கொலைகள் நடந்திருப்பதாக தெரியவருகிறது . இது மிகவும் பாரதூரமான குற்றமாகும் .வெறுமனே பணத்தை நிவாரணமாக கொடுத்து சமாளித்து விட முடியாது . திட்டமிட்ட கொலைகளை புரிந்த குற்றவாளிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை தரக்கூடாது   என்று மக்கள் கொந்தளித்து போயுள்ளனர் .
வினவு ::தூ த்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தனது அதிகாரத்தைக் கேள்வி கேட்ட தந்தை – மகன் இருவரை சட்டவிரோதமாகக் கடத்தி அடித்து, போலீசு படுகொலை செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் நீதிகேட்டு பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை ஒட்டி, சம்பந்தப்பட்ட போலீசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது போலீசு. கொரோனா ஊரடங்கில் போலீசின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வணிகர்கள்தான். அந்த பாதிப்பு இங்கே இரண்டு பேரின் கொலையாக முடிந்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். ஜெயராஜும் அவரது மகன் மகன் பென்னிக்சும் அந்தப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த 19-ம் தேதி கடை மூடுவது தொடர்பாக கடையில் இருந்த ஜெயராஜிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் போலீசு உதவி ஆய்வாளர் ரகுகணேஷ். இதனை ஒட்டி மறுநாள் 20-ம் தேதி ஜெயராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு.



பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ்.
வழக்கம் போல என்ன வழக்கிற்காக கைது செய்கிறோம் என்பது போன்ற எந்த விவரத்தையும் சொல்லாமல், அவரது மனைவி செல்வராணிக்கும் எழுத்துரீதியான குறிப்புகள்  எதையும் கொடுக்காமல் இழுத்துச் சென்றிருக்கிறது போலீசு. இதனையொட்டி, ஜெயராஜை சந்திக்க போலீசு நிலையத்திற்கு அவரது மகன் பென்னிக்ஸ் சென்றுள்ளார். அங்கு 60 வயதான ஜெயராஜை பென்னிக்சின் கண் முன்னேயே உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் நிலையத்தைச் சேர்ந்த பிற போலீசும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை பென்னிக்ஸ் தட்டிக் கேட்டுள்ளார்.
தனது நிலையத்திற்குள் தனது அதிகாரத்தையே கேள்விகேட்ட பென்னிக்சை அங்கேயே வைத்துக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது போலீசு. பல மணிநேரம் கட்டி வைத்து அடித்ததோடு அல்லாமல், அவரது ஆசனவாய் உள்ளே லத்தியால் குத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் ஜெயராஜ், பென்னிக்சின் மீது வழக்கம் போல ஒரு பொய் வழக்கைப் பதிவு செய்து, அதனடிப்படையில் இருவரையும் கைது செய்வதற்கான ஆவணங்களைத் தயாரித்துள்ளது போலீசு. பின்னர் அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது போலீசு. இருவருக்கும் ரிமாண்டு பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறையில் 21-ம் தேதி அடைத்துள்ளது கிரிமினல் போலீசு.
சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு அருகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், துணைச் சிறைச்சாலையும், பேரூரணி மாவட்ட சிறைச்சாலையும் இருக்கையில், 90 கிமிட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளைச்சிறையில் அவர்கள் இருவரையும் கொண்டு போய் அடைத்துள்ளது. கடுமையாக அடித்துத் துன்புறுத்தி அவர்களை அரை உயிரோடு கொண்டு போய் எவ்வித கேள்வியும் இல்லாமல் தமது சட்டவிரோத தாக்குதல்களை மறைக்கத் தகுந்த இடமாக அதைத் தேர்ந்தெடுத்திருக்கிறது போலீசு.
சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்சை அவரது நண்பர்கள் சந்தித்துள்ளனர். அப்போது போலீசு லத்தியால் குத்தியதைத் தொடர்ந்து தமது ஆசனவாயில் இரத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக பென்னிக்ஸ் தெரிவித்துள்ளார். சிறையில் 22-ம் தேதி இரவு 7:30 மணியளவில் நெஞ்சு வலியால் பென்னிக்ஸ் மயங்கி விழுந்தார் என்று கூறி பென்னிக்ஸை கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளது போலீசு. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பென்னீக்ஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அதே சமயத்தில் பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் அதே நாளில் இறந்து போயிருக்கிறார். இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பொது மக்கள் வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வணிகர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து இதற்குக் காரணமான போலீசு அதிகாரிகளை கொலை வழக்கின் கீழ் கைதுச் செய்து சிறையிலடைக்குமாறு போராடி வருகின்றனர். வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மக்கள் வீதிக்கு வந்ததையொட்டி அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

அத்துமீறி மிருகத்தனமாக நடந்து கொள்ளும் போலீசை அமர்ந்து தின்று கொழுக்கும் விதமாக வளர்ப்பதற்காகவே வழக்கமாக வழங்கப்படும் ‘தண்டனையான’ ஆயுதப்ப்படைக்கு மாற்றல் என்று கண்கட்டி நாடகம் காட்டியது போலீசு. விடாப்பிடியான மக்கள் போராட்டம், தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழியின் தலையீடு ஆகியவற்றை ஒட்டி, படுகொலை செய்த போலீசு துணை ஆய்வாளர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது போலீசு. ஆனால் இந்த பணியிடை நீக்கம் ஒரு தண்டனையா? இதே போன்று பொதுமக்கள் இரண்டு பேர்களைக் கொன்றால் கொலை செய்தவர்களுக்கு ஊர் மாற்றம் என்பதை மட்டும் தண்டனையாக கொடுப்பார்களா?
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலையானது, அதிகாரவர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போடப்பட்ட பொய் வழக்குக்கான முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பெற முடியவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார், சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர். கே. பாலக்கிருஸ்ணன்.







போலீசின் பொய் வழக்குகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் கூட்டுக் களவானியாய் நீதித்துறை.
ரிமாண்ட் செய்யும் போது கைது செய்யப்பட்டவரின் உடலில் உள்ள காயங்கள் குறித்துக் கேட்டு அவர்களை சிறைக்கு அனுப்புவதா, மருத்துவமனைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யவேண்டிய குற்றவியல் நீதிபதி அதையும் கேட்கவில்லை. தன் மீது பதியப்பட்ட வழக்குக் குறித்த விவரம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா என்பதையும் கேட்டுப் பதிவு செய்யவேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் போலீசு காட்டிய இடத்தில் நீதிபதி கையெழுத்து போட்டிருக்கிறார் என்றே தெரிகிறது. இந்த நீதிபதி குற்றவாளி இல்லையா ?
கிரிமினல் போலீசு கோவில்பட்டி கிளை சிறையை தேர்ந்தெடுத்ததன் நோக்கத்தை கிளைச் சிறை அதிகாரிகளும் நிரூபித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்கும் முன்னர், அவர்களுக்கு காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து பரிசோதித்து மருத்துவமனையில் சேர்த்திருக்க வேண்டும். சாத்தான்குளம் போலீசுக்கு ஆதரவாக நடந்திருக்கிறது கோவில்பட்டி சிறை நிர்வாகம்.
பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படுகொலை போலீசு, நீதித்துறை, சிறைத்துறை என அதிகார வர்க்கக் கூட்டை அம்பலப்படுத்தியிருக்கிறது. கொரோனா ஊரடங்கை மீறி வீதிக்கு வந்த மக்கள் போராட்டத்தால் மட்டுமே இந்தப் படுகொலைகளுக்கு முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிரிமினல் போலீசு கும்பலின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கூட்டுக் களவாணியாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள், நீதிபதி என அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென்பதை நடைமுறைப்படுத்த ஃப்ளாய்டு கொலைக்கு எதிராக மொத்த அமெரிக்காவும் திரண்டெழுந்ததைப் போல தமிழகமே கொதித்தெழ வேண்டும். ஆனால் இங்கே அப்படி ஒரு பாவனை கூட இல்லை. அந்த  அளவுக்கு நமது சமூகம் அடிமைத்தனத்தில் ஊறிப்போயிருக்கிறதா? போலீசாரோடு வாதம் நடத்தியதற்காக இரண்டு வணிகர்கள் போலிசால் கொலை செய்யப்பட்டது உலகில் எங்காவது நடக்குமா?
இந்தப் பிரச்சினையை தானே முன்வந்து ஒரு வழக்காக மதுரை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருந்தாலும், கொலை செய்த போலீசார் தண்டிக்கப்படுவார்களா? அப்படி ஒரு தண்டனை வேண்டுமென்றால் அமெரிக்கா போல மக்கள் வீதிக்கு வராமல் சாத்தியமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக