செவ்வாய், 16 ஜூன், 2020

பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசின் கொள்கை. - இலங்கை இந்தியா ஒப்பந்தம் வந்த வரலாறு 3

பிரதமர் மொரார்ஜி தேசாய்
அமரர் திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ( தமிழர் விடுதலை கூட்டணி பொதுசெயலாளர் ,முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்)
 பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசின் கொள்கை.
 1977-ம் ஆண்டு இலங்கையில் ஜயவர்த்தனா அரசும் டெல்லியில் மொரார்ஜி தேசாய் அரசும் ஆட்சிக்கு வந்தன. இரண்டும் வலதுசாரி அரசுகள். இரு
பிரதமர்களுக்குமிடையில் கருத்தொற்றுமையும் நட்புறவும் நிலவியது. 1978-இல் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மொரார்ஜி
தேசாயை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பார்த்து இலங்கைத் தமிழரின் நிலை, 1977-ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கு எதிரான தாக்குதல்கள், நாம் தமிழ் ஈழம் கோருவதற்கான காரணங்கள் ஆகியவற்றை விளக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இதனால் 1979-ல் நானும் என் மனைவியும் தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கும் சென்ற போது அரச விருந்தினராக வரவேற்கப்பட்டோம். தமிழ் நாடு முழுவதும் எல்லா கட்சியினராலும் வரவேற்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் எம் நிலையை எடுத்து விளக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றோம்.
 புதுடெல்லி சென்று பிரதமர் மொரார்ஜி தேசாயையும் மற்றும் அமைச்சர்களையும் பார்த்துப் பேசினேன். அவர் அப்போது ஆச்சரியமான ஓர் யோசனையை வெளியிட்டார்.இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சனையில் தான் மத்தியஸ்தம் செய்யத் தயாராய் இருப்பதாகக் கூறினார்.
இந்தியாவின் தலையீட்டை வேண்டிநின்ற நாம் அதை ஏற்றுக் கொண்டோம். ஆனால் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த டெல்லி விஜயத்தை பயன்படுத்தி அப்போது பதவி இழந்து, மகன் சஞ்சய் காந்திக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, மிகுந்த துன்பத்தோடு இருந்த இந்திரா காந்தியை என் மனைவியும் நானும் சென்று பார்த்தோம். இச்சந்திப்புக்கு அப்போது இந்திரா காங்கிரஸ் உறுப்பினராக இருந்த திரு. நெடுமாறன் ஏற்பாடு செய்தார்.


ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த இச்சந்திப்பின் பலனாக இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி மாத்திரமல்ல ஜெயவர்த்தனா அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சார்புப் போக்குப் பற்றியும் திருமதி காந்தி சரியான விளக்கம் பெற்றார் என்று நம்புகிறேன்
. அன்று அவர் காட்டிய அனுதாபம் அவர் படுகொலை செய்யப்படும் வரை நிலைத்திருந்தது. ஜெயவர்த்தனா அரசின் இந்திய விரோதக் கொள்கையை மாத்திரம் அல்ல இந்திரா விரோதப்போக்கையும் நன்கு புரிந்து கொண்டார். இப்பிரயாணத்தின் பின் இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சராயிருந்த சிறில் மத்தியூ கொண்டு வந்த ஒத்திவைப்பும் பிரேரணையும் என் மனைவியையும், என்னையும் உச்சரிக்க முடியாத வார்த்தைகளால் திட்டியதும் இலங்கை அரசின் ஆத்திரத்தை வெளிப்படுத்தின.


ஒப்பந்த வரலாறு .. 1
 ஒப்பந்த வரலாறு 2  

 ஒப்பந்த வரலாறு 4 

ஒப்பந்த வரலாறு 5

ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7
ஒப்பந்த வரலாறு 8

ஒப்பந்த வரலாறு 9
ஒப்பந்த வரலாறு 10

பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக