வெள்ளி, 8 மே, 2020

Mass Pshycology in Digital Marketingல் இணைய திமுகவினர்... Karthikeyan Fastura

Karthikeyan Fastura :   Mass Pshycology in Digital Marketingல் இணைய திமுகவினர் சிலர் சொதப்பி வருகின்றனர் என்று எழுதியிருந்தேன். எப்படி என்று கூறுங்கள் என்று சில நண்பர்கள் கேட்டு இருந்தார்கள். உங்களுக்கு என்ன தெரியும்
அதைப்பற்றி என்று சிலர் வினவி இருந்தார்கள்.
PWC-SDC என்ற பன்னாட்டு நிறுவனத்தில் நான் வேலை பார்த்த பிரிவு Digital Transfermation. அதில் என்னுடைய வேலை என்பது ஒரு ஐடியாவிற்கு உருவம் கொடுப்பது. அதன் பிறகு நான் சொந்தமாக ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பித்த பிறகு பெரிய கனவுகள் இருந்ததால் இதைப் பற்றி படிப்பது எனக்கு அவசியமாக இருந்தது. இவையெல்லாம் சேர்ந்துதான் இந்தத் துறையில் மிக ஆழமான தேடலை செய்ய வைத்தது. இந்த தேடல் என்னை எல்லாவற்றிலும் மார்க்கெட்டிங் இருப்பதை உணரவைத்தது. எங்கெல்லாம் அதில் குறைகள் இருந்ததோ எளிதாக எனக்கு புலப்பட வைத்தது. ஏழு வருடங்களுக்கு முன்பே முகநூலில் டேவிட் ஒகில்வி பற்றி எழுதியிருந்தேன். மார்க்கெட்டிங்கில் ஒவ்வொரு சொல்லும் மிக வலிமை வாய்ந்தது. அதில் ஒரு வரியை எழுதுவதற்கு ஒரு வாரம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு எழுத்தைக் கூட வீணாக பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிக் கொடுத்தவர் அவர்.

மாஸ் சைக்காலஜியை பொறுத்தவரை எதிரிகள் விடும் அம்புக்கு பதிலுக்கு பதில் அம்பு விடுவதல்லநல்ல Strategy. அவ்வாறு செய்வது அவர்கள் விட்ட அம்பிற்கு பலியாவது போல. பிறகு என்னதான் செய்வது என்றால் அம்பினை ஏந்தாமல் விலகிக் கொள்வதே விவேகம். அரசியலில் அம்பு பொது மக்களின் பிரச்சனையை நோக்கி இருக்கவேண்டும்.
அதைத்தான் மக்கள் விரும்புவார்கள். நீங்கள் விடும் அம்பு அந்தப் பிரச்சினையை வீழ்த்துகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. மக்களுக்காக அந்த பிரச்சனையை நோக்கி யார் அம்பு விடுகிறார்களோ அவர்கள் தான் மக்களை கவர்கிறார்கள். கடந்த காலங்களில் திமுக அதுபோல பலமுறை மக்களுக்காக நின்று யுத்தம் செய்திருக்கிறது. ஆட்சியில் இருந்தபோது எதிரிகளுக்கு தெரிந்து விழித்துக் கொள்ளக்கூடாது என்று இருட்டில் அம்புவிட்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
இப்பொழுது திமுக செய்ய வேண்டியது அன்றைக்கு யாருக்கும் தெரியாமல் அம்பு விட்டு வென்ற கதைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதுதான். நண்பர் M.m. Abdulla ஒரு முகநூல் குழுவின் இணையகூட்டத்தில் பொது மக்களின் கேள்விக்கு பதில் அளிப்பதாக கலந்து கொண்டார். அதில் எங்கேயும் கட்சி சார்பாக பேசாமல் திராவிடம் என்பது எப்படி வளர்ந்து தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் தொழில் புரட்சியையும் பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்தியது என்று விரிவாக பேசினார். திமுக என்ற கட்சியை முன்னிலைப் படுத்தாமல் திராவிடத்தை முன்னிலைப்படுத்தி அதில் திமுகவின் பங்காக ஆற்றிய விஷயங்களை கலந்து கூறும்போது மக்களுக்கு திமுகவின் மீது சித்தாந்த ரீதியாக ஒரு பற்றுதல் உருவாகிறது. இதுதான் சிறந்த செயல்.
அதை செய்யாமல் எதிரிகளின் சூழ்ச்சியில் விழுந்து பழைய கதைகளை கிளறி தமிழ் இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்று மறைந்த தலைவரை அவமதிக்கும் வேலைகளில் இறங்கி கட்சியின் செல்வாக்குக்கு ஆப்பபடித்து வருகின்றனர்.
"அவர் பிராண்ட் இஸ் க்ரீஸைஸ்" படத்தில் சாண்ட்ரா-புல்லக் வேலை செய்து வரும் கட்சித் தலைவரின் பெயரை கெடுக்க சாண்ட்ராவின் எதிரி டீம் நிறைய வேலை செய்யும். ஒரு ஆளை ஏற்பாடு செய்து அந்தத் தலைவரை கோபம் மூட்ட அவர் தலையில் முட்டையை உடைக்க வைத்து அதன்மூலம் பொதுமக்கள் முன்னிலையில் அவரை கோபப்பட வைத்து கெட்ட பெயர் உருவாக்குவார்கள். பின்னர் சான்ட்ரா அதை சரி செய்வார். அதேபோல சாண்ட்ராவும் மற்ற கட்சித் தலைவர்களின் பெயர்களை கெடுக்க சில வேலைகள் செய்வார். அது இவரது கட்சித் தலைவருக்கு ஓட்டு சதவீதத்தை கூட்டும்.
சமீபத்தில் திமுக " ஒன்றிணைவோம் வா" என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நல்ல முயற்சி. ஆனால் அது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துமே ஒழிய மக்களை அல்லது ஒத்த கருத்துடைய இளைஞர்களை ஈர்ப்பது கடினம். ஒன்றிணைவோம் என்ற சொல் ஒரு மையத்தை நோக்கி ஈர்க்க சொல்கிறது. அது பல சித்தாந்த குழப்பங்களை விளைவிக்கும். தனக்கு சம்பந்தமில்லை என்று கடந்து செல்ல வைக்கும். பெருந்திரளான மக்களை நம்மை நோக்கி வரச்செய்வது என்பது கடினமான நம்பகமற்ற முயற்சி. நாம் அவர்களிடம் சென்று சேர வேண்டும். அதுதான் அவசியம், சாத்தியமானது, குழப்பமில்லாதது மற்றும் நம்பிக்கையை வளர்ப்பது. "அறம் செய்வோம்" அல்லது " கரம் கொடுப்போம்" என்று அவர்களை நோக்கி நீங்கள் செல்வதாக பிரச்சாரத்தின் தலைப்பு இருந்திருக்க வேண்டும்.
அதேபோல இந்த பிரச்சாரத்தின் லோகோ வடிவம் சிறப்பானதாக இல்லை. கண்களை சுருக்கி பார்க்கும்போது அந்த லோகோ நாமம் சூட்டிய சூரியன் கோபமாக பார்ப்பது போல இருக்கிறது. இவ்வாறு பல பார்வைகளை கொடுப்பதாக ஒரு லோகோ இந்த பிரச்சாரத்திற்கு இருக்கக்கூடாது. மிக எளிமையாக மக்களை இணைப்பது போன்ற வடிவத்தில் இருந்திருக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான பிரச்சனைகளில் சண்டையிட வேண்டிய இடத்தில் சண்டை செய்யவேண்டும். சண்டைக்கு மதிப்பில்லாத போது சில சமயம் சேட்டை செய்ய வேண்டும். சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி செய்த ஒரு சேட்டையை மிகவும் ரசித்தேன். வெளிமாநிலங்களில் பணிபுரிந்த மக்கள் தங்கள் ஊர் திரும்புவதற்கு ஆகும் போக்குவரத்து கட்டணத்தை அரசு செலுத்தாத போது கர்நாடக காங்கிரஸ் கட்சி முன்வந்து ஒரு கோடி ரூபாயை போக்குவரத்து கட்டணமாக அரசுக்கு கொடுப்பதாக அறிவித்தது. அரசு கையை பிசைந்து கொண்டு அம்பலப்பட்டு நின்றது. இந்த செய்தி மிகப்பெரிய அளவில் எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. இந்த சேட்டை தான் கொரில்லா மார்க்கெட்டிங். பெரிதாக செலவே இல்லாமல் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர முடியும்.
கலைஞர் இருந்த வரையில் இதுபோன்ற சேட்டைகள் மிக அதிகமாக செய்வதை பார்க்கலாம். அந்த சேட்டைகள் அனைத்தும் முடிவில் மக்களுக்கு சாதகமாக மாறும். இன்று அது போன்ற சேட்டைகளை நுணுக்கமாக திட்டமிடப்பட்டு விரிவாக செயல்படுத்தபட வேண்டும்.
1930களில் வெளிவந்த Mass psychology of fascism என்ற புத்தகம் எப்படி ஜெர்மனியில் கம்யூனிச சித்தாந்தத்தை உடைத்து பாசிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் வளர்த்தெடுத்து ஆட்சியைப் பிடித்தது என்று மிக விரிவாக எழுதியிருப்பார் அதன் ஆசிரியர் வில்லியம் ரீச். இன்று இந்தியாவில் எப்படி இரண்டாம் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது என்பதை பார்க்கும்போது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அவர்கள் படித்து செயல்படுத்தியது போல இருக்கும். பாசிசத்தால் ஜெர்மானிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் பாதிக்கப்படுகிறான் எனும்போது அவர்களின் திட்டங்களை வழிமுறைகளையும் எளிதாக உடைக்க முடியும். இந்தப் புத்தகம் தான் அவர்களின் ப்ளூ பிரிண்ட். அதைப் புரிந்து கொண்டு முன்கூட்டியே காய் நகர்த்தினால் போதும்.
இன்னும் பேசுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக