வெள்ளி, 8 மே, 2020

கரோனா .. நோய் எதிர்ப்பு சக்தியால் நோயிலிருந்து அவர்களே குணம் ஆகிவிடுகிறார்கள்?

.nakkheeran.in - எஸ்.பி. சேகர் : தமிழக அளவில் கரோனா நோய் பாதிப்பினால் அதிக அளவில் மக்கள் இறக்கவில்லை. மேலும் நோய் தொற்று உள்ளவர்கள் அவர்கள் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி காரணமாக நோயிலிருந்து அவர்களே குணம் ஆகிவிடுகிறார்கள்.
இதை மருத்துவ குழு உறுதி செய்துள்ளதை அடுத்து வரும் 17ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் காலி செய்யப்படவுள்ளன.  புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே தங்க வைத்து அப்பகுதியிலுள்ள சுகாதாரத்துறையினர் மூலம் சிகிச்சை அளிக்க உள்ளனர். கிராமத்தில் அதிகளவு நோய் அறிகுறி உள்ளவர்கள் இருந்தால் அவர்களை அந்தந்த ஊரில் உள்ள சமுதாயக்கூடத்திலும் பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டு 14 நாட்கள் மருந்து, உணவுகள் வழங்கப்பட உள்ளனர்.
இதை அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்,  கிராம சுகாதார செவிலியர்கள்,  ஊராட்சி செயலாளர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காணிப்பார்கள் நோய் தொற்று காரணமாக சளி, இருமல், மூச்சு இறைப்பு என நோயாளியின் தன்மை இருக்குமானால் அப்படிப்பட்டவர்களை மட்டும்அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படும் மற்றபடி நோய் தொற்று உள்ளவர்கள் வீடுகளிலும் அவரவர் ஊர்களிலேயே உள்ள முகாமில்  சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.


நோய்ப் பரவல் காரணமாக தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் அரசு மேற்கொண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு இது சம்பந்தமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தான் மாவட்ட அளவில் நோய் பரவல் எண்ணிக்கையை தெரிவிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகிறார்கள்.

கரோனா மருத்துவ பணியில் பணி செய்து வரும் மருத்துவத் துறையினருக்கு கரோனா பரவியிருப்பதால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதை கூட உயரதிகாரிகள் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.  காரணம் இந்த தகவல் வெளியே பரவினால் மக்கள் மத்தியில் அதிக அளவில் அச்சம் ஏற்படும் என்பதாலும் இப்படி பல்வேறு விதங்களில் நோய் அதிகரிப்பின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.  மேலும் நோய் பாதிப்பினால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பதால் அரசும் அதிகாரிகளும் டாஸ்மாக் கடை திறப்பு முதல் அடுத்து அனைத்து போக்குவரத்து துறைகளையும் வரும் 18ஆம் தேதி முதல் திறந்து விட அரசு முடிவு செய்துள்ளது.
 உலக அளவில் மக்களை வாட்டி வதைத்த கரோனா இந்திய அளவில்,  தமிழக அளவில் பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மக்களை பழைய வாழ்க்கை முறைக்கு அழைத்துச் செல்ல உள்ளன என்று தெரிகிறது.   சுமார் 50 நாட்கள் முடக்கப்பட்டிருந்த மக்களின் வாழ்க்கை திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.  கரோனாவுக்கு ஒரு குட்பை சொல்லப்போகிறது மத்திய,  மாநில அரசுகள் என்றும் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக