வெள்ளி, 8 மே, 2020

டாஸ்மாக் அரசின் ’கொள்கை முடிவல்ல..... இது ஒரு கொள்ளை முடிவு ’

சாவித்திரி கண்ணன் : ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இந்தியாவில்
கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமே 298 தான்!
தமிழகத்தில் பத்துக்கும் குறைவானவர்கள்தான் பாதிப்புக்கு ஆளாகியிருந்தனர்.
அப்போது மதுக்கடைகள் அடைக்கப்படும் என்பதால் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளவேண்டும் என்று குடிமகன்கள் முண்டியடித்து வாங்கினார்கள்!
அதன் விளைவாக கடைசி இரண்டு நாள் டாஸ்மாக் விற்பனை மட்டுமே 410 கோடி ரூபாய்! (முதல் படம்- மார்ச் ஊரடங்கிற்கு முன்பு எடுக்கப்பட்டது)
ஆனால்,அப்படி முண்டியடித்து நெரிசலில் வாங்கியதும் தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகமானதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்!
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 43 நாட்களில் கொரானா பாதிப்பு இந்தியாவில் 50,000 ,(தமிழக பாதிப்பு 5,000) என்பதாக அதிகரித்துள்ள நிலையில் அந்தந்த மாநில அரசுகள் டாஸ்மாக்கை திறக்க பச்சை கொடி காட்டியுள்ளது மத்திய அரசு!
298 க்கே அஞ்சியவர்கள் இன்று ஐம்பதாயிரமாக கொரனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மதுக் கடைகள் திறக்க அனுமதித்துள்ளார்கள் என்றால்…இந்த அரசுகளை எப்படி புரிந்து கொள்வது?

கல்விநிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,கோயில்கள்,வியாபாரத் தளங்கள் திறக்க வழி பிறக்காத நிலையில் மதுக் கடைகளுக்கு மட்டும் வழி திறக்கிறது.
டாஸ்மாக் ஊழியர் சங்கங்களே இதை எதிர்த்துள்ளன..!
பெண்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்!
(இன்று மதுரை செல்லூரில் பெண்கல் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு,போராடியதில் கடை செட்டரை மூடிவிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஓட்டம் எடுத்துள்ளனர் - இது தமிழகத்திற்கு முன்மாதிரியாகட்டும்!)
இது வரை கொரானா தடுப்பிற்காக பாடுபட்ட காவலர்கள் இனி டாஸ்மாக் மது விற்பனைக்கு பாதுகாப்பு கொடுத்து கொரானா பரவலுக்கு பாடுபட வேண்டியவர்களாகிவிட்டனர்…!
ஒவ்வொரு நாளும் கொரானா நோயாளிகளுக்கு உயிரை பணயம் வைத்து சிகிச்சையளித்து காப்பாற்றிய டாக்டர்களுக்கு இனி ஓய்வென்பதே இருக்க போவதில்லை…!
மற்ற கடைகள் நிறுவனங்கள் திறப்பது குறித்தெல்லாம் கடுமை காட்டி பேட்டி அளித்த சுகாதாரத் துறை செயலாளர் கொரானா பரவலை அதிகரிக்கும் மதுக் கடைகள் திறப்பு விஷயத்தில் மட்டும் மவுனம் காட்டுகிறார்!
நீதி மன்றத்தில் இது அரசின் ’’கொள்கை முடிவு’’ என்று அரசு விளக்கம் கொடுப்பதற்கு மாறாக இது ’’கொள்ளை முடிவு’’ என்று உண்மையை சொல்லிவிடுவது நன்று! கோர்டில் பொய் பேசக்கூடாது அல்லவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக