புதன், 6 மே, 2020

டாஸ்மாக் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்!

டாஸ்மாக் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்!மின்னம்பலம் : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடையில்லை, சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்கியது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் குறைந்தது. இந்நிலையில், நாளை ( மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்று அறிவித்தது. டாஸ்மாக் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகளையும் இன்று வெளியிட்டது.

இந்நிலையில் டாஸ்மாக் திறக்க தடை விதிக்க வேண்டும். கொரோனா முழுமையாக இல்லாத நிலை எட்டிய பிறகே டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், மதுக்கடைகளுக்கு முன்பு கூட்டம் கூடக் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலங்களில் கடைகளைத் திறந்ததும் மதுபிரியர்கள் கடைகள் முன்பு 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நின்று கூட வாங்கிச் செல்கின்றனர். அப்படியானால் தமிழகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோன்று 6 அடி இடைவெளியுடன் சமூக விலகலையும் பின்பற்ற முடியாது.
> ஊரடங்கு உத்தரவு 40 நாட்களுக்குத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் காலை 10 மணி முதல் 5 வரை கடைகள் திறப்பதன் மூலம், மக்கள் வேலைக்குச் செல்ல அரசு விரும்பவில்லை என்றே தெரிகிறது.
கடந்த ஒரு மாதமாக விபத்துகளும், குற்றச்சம்பவங்களும் குறைந்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதன் மூலம் மீண்டும் அவை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுபானம் அத்தியாவசிய தேவையில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மது வாங்கப் பணம் கேட்டு பெண்களைத் துன்புறுத்தவும் வாய்ப்பு ஏற்படும். எனவே டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.
இந்நிலையில், பாமக வழக்கறிஞர் கே.பாலு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், டாஸ்மாக் திறப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது, அதுபோன்று டாஸ்மாக் திறப்புக்கு எதிராக மேலும் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
இந்த மனுக்கள் இன்று (மே 6) நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்யநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் கொரோனா மேலும் பரவும் அபாயம் ஏற்படும். டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் ஹாட்ஸ்பாட்களாக மாறிவிடும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டார்கள் என்று காரணம் காட்டி உரிய ஆலோசனை இல்லாமல் தமிழகத்திலும் கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த 40 நாட்களில் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டவர்கள் மீண்டும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். தற்போது மதுக்கடைகள் திறப்பது சரியல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே மே 17ஆம் தேதி வரை மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், “அண்டை மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டதாலும், வருவாய் இழப்பாலும் கடைகளைத் திறக்க முடிவெடுக்கப்பட்டது. கடைகள் முன்பு பெருமளவில் கூட்டம் கூடாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், “டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா என்பது குறித்தும் கடைகளுக்கு முன்பு கூட்டம் கூடாமல் இருக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் இன்று மதியம் 2.30க்குள் அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
அதன்படி அரசுத் தரப்பில் இன்று பிற்பகல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இந்த வைரஸ் பாதிப்பு குறைய நாளாகும் என்பதால் மற்ற கடைகளைப் போல டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படுகின்றன.
அதேசமயத்தில் ஆன்லைனில் விற்பனை செய்து மதுவை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க முடியாது. டாஸ்மாக் கடைகளிலும் மொத்தமாக விற்பனை செய்யப்படமாட்டாது. தனி நபர்களுக்கே விற்பனை செய்யப்படும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாலையில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மாலை 5.30 மணியளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்குத் தடையில்லை. முறையான சமூக இடைவெளியைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். ஆன்லைனில் மது விற்க அனுமதியளிக்கப்படுகிறது. ஆன்லைனில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 2 பாட்டில்கள் தான் விற்க வேண்டும் என்று டாஸ்மாக் கடைகளை நிபந்தனையுடன் திறக்க அனுமதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக