புதன், 6 மே, 2020

771 பேருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழகம்

அதிகபட்சமாக இன்று 771 பேருக்குப் பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழகம்!மின்னம்பலம் :
தமிழகத்தில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு சந்தை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் சூழலில் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 100, 200, 500 என்ற வரிசையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிகபட்சமாக 771 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் 3,320 ஆண்கள், 1,507 பெண்கள்,2 திருநங்கைகள் அடங்குவர்.

இதில் சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அரியலூரில் 188 பேருக்கும், கடலூரில் 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 31 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1516 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,275ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று 13, 413 பேருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,78,472 ஆக உள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக