புதன், 6 மே, 2020

தணிகாசலம் கைது - கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறியவர்


BBC : கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த க. தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார்.
இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு அரசில் உள்ள பலருக்கும் சவால் விடுத்தார் தணிகாசலம். இதையடுத்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகார்களை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்துவந்தது. இந்த நிலையில், புகார் தெரிவிக்கப்பட்ட அன்றே ஒரு வீடியோவை வெளியிட்ட தணிகாசலம் தான் மருந்து கண்டுபிடித்ததற்காக தன்னைக் கைதுசெய்வதென்றால் கைதுசெய்யட்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக