புதன், 6 மே, 2020

தலித் எழில்மலை காலமானார்... முன்னாள் மத்திய அமைச்சர்


நக்கீரன் : முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை (வயது 74) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
அமர தலித் எழில்மலைக்கு முனிரத்தினம் என்ற மனைவியும், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 1999- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாமக சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானவர் தலித் எழில்மலை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தலித் எழில்மலை 2001- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

vikatan.com - பிரேம் குமார் எஸ்.கே.< முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த நிலையில், இன்று காலையில் மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான இரும்பேடு கிராமத்துக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது. அங்கு, அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்படவுள்ளது.
யார் இந்த தலித் எழில்மலை?
சாதி ஒழிப்பு அரசியலில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்த தலித் எழில்மலை, 1945-ம் ஆண்டு, அப்போது இருந்த சென்னை மாகாணப் பகுதியான செங்கல்பட்டில் பிறந்தார். 1967 -ம் ஆண்டு, இந்திய தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த இரா.எழில்மலை, ‘தலித் மக்கள் முன்னணி’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.
இவர், முனிரத்தினம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என மொத்தம் 4 பிள்ளைகள்.




தலித் எழில்மலை
பொதுச் சேவையில் அதிக ஆர்வம்கொண்ட தலித் எழில்மலை, 1970 -ம் ஆண்டு, இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர், 1971 -ல் நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரிலும் பங்கேற்றார். இந்திய ராணுவத்தில் தனது சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவரிடம், கே.சைனிக் சேவா பதக்கம் பெற்றார்.


ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பொதுச் சேவை செய்யவே விரும்பினார். அதனால் அவர் அரசியலைத் தேர்தெடுத்தார். பா.ம.க-வில் தன்னை இணைத்துக்கொண்ட தலித் எழில்மலை, பொதுச் செயலாளராகவும் ஆனார். பா.ம.க-வின் முக்கியத் தலைவர்களில் தலித் எழில்மலையும் ஒருவராக இருந்தார். 1999 -ம் ஆண்டு, சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய பா.ஜ.க அரசின் சுகாதாரத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார். பா.ம.க சார்பில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மத்திய அமைச்சர் இவர்.





பின்னர், 2001-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை, அவர் அ.தி.மு.க சார்ப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆம், பா.ம.க விலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் சேர்ந்தார். ராணுவ வீரராக வாழ்க்கையைத் தொடங்கிய எழில்மலை, பின்னர் மத்திய அமைச்சராகப் பதிவி வகிக்கும் அளவுக்கு பொது வாழ்வில் வளர்ந்தார். என்றாலும், அதன் பின்னர் தீவிர அரசியிலில் இருந்து விலகியே இருந்துவந்தார்.



``அம்பேத்கரின் கருத்துகள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அயோத்திதாச பண்டிதரின் கருத்துகள் தமிழ் மண்ணில் பரவிட உதவியவர். இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட பிரசாரப் பணிகளிலும், தென்மாவட்டக் கலவரங்களையடுத்து வட மாவட்டங்களில் தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலும் தீவிரமாகப் பங்கேற்றவர். பொடா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற போராட்டத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தவர். பா.ம.க-விலும், அ.தி.முக-விலும் சேர்ந்து செயல்பட்டாலும், எப்போதும் ஒரு அம்பேத்கரியவாதியாகவே செயல்பட்டவர்.





மத்திய அமைச்சரானபோதும், மாறாமல் அவர் அணிந்த அடர்நீலச் சட்டையும் எடுப்பான முறுக்குமீசையும் ஜெய்பீம் என்னும் கர்ஜனைக் குரலும்தான் அவருக்கு நிலையான அடையாளங்கள்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழில்மலை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக