வியாழன், 14 மே, 2020

16.4 லட்சம் கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி!

16.4 லட்சம் கோடி எங்கே?  காங்கிரஸ் கேள்வி!மின்னம்பலம் : நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏழை மக்களுக்கு ஒன்றும் அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு ஒன்றை அறிவித்தார். ஆத்மநிர்பார் பாரத் அப்யான் (தன்னிறைவு இந்தியா) என்ற இத்திட்டம், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. அதாவது கடந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 200 லட்சம் கோடியில் 10 சதவிகிதம்.
இதற்கான திட்டங்களை நேற்று (மே 13) அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம், பிஎஃப்பின் ஒரு பகுதியை அரசே செலுத்தும், டிடிஎஸ் பிடித்தம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் இதில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் எதுவுமில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் காணொலி காட்சி மூலம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “சிறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் 3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே சென்றது” என்று கேள்வி எழுப்பினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சுமாரான தொகுப்பைத் தவிர மத்திய அரசின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளதாகக் குறிப்பிட்ட சிதம்பரம், “லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் நடந்து சென்றனர். பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். அவர்களுக்கு நிதியமைச்சர் கூறியதில் எதுவும் இல்லை. தினமும் உழைப்பவர்களுக்கு இது கொடூரமான அடியாகும்” என்று குற்றம்சாட்டினார்.
மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குப் பணப் பரிமாற்றத்தின் மூலம் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை என்றும், 13 கோடி குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சிதம்பரம், “ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 வழங்கினால் அரசுக்கு ரூ.65,000 கோடி மட்டுமே செலவாகும். மக்கள் தொகையில் 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தை வைப்பதே அரசாங்கம் செய்ய வேண்டிய முதல் விஷயம்” என்றார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குச் சில ஆதரவு அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். 45 லட்சம் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கைகள் வளைக்கப்பட்டுள்ளன என்பதே எனது கருத்து. 6.3 கோடி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை எந்த உதவியும் இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள சிதம்பரம்,
“இந்த அரசாங்கம் தனது சொந்த அறியாமை மற்றும் பயத்தின் கைதியாக உள்ளது. அரசு என்றால் அதிக செலவு செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தயாராக இல்லை. அதிகம் கடன் வாங்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தயாராக இல்லை. அதிக கடன் வாங்கவும் அதிக செலவு செய்யவும் மாநிலங்களை அனுமதிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தயாராக இல்லை” என்றும் குற்றம்சாட்டினார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக