வியாழன், 14 மே, 2020

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு தினதந்தி : சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். கட்டுமான துறைக்கு சலுகை களையும் அறிவித்து இருக்கிறார். புதுடெல்லி, பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம்
அப்போது, கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (நேற்று) முதல் வெளியிடுவார் என்றும் அறிவித்தார். அதன்படி அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


சுயசார்பு இந்தியா

பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவித்து உள்ளார். ‘சுயசார்பு இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது.

உள்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள்தான் பின்னர் வளர்ச்சி அடைந்து பெரு நிறுவனங்களாக மாறி உள்ளன. உள்ளூர் நிறுவனங்களை உலக நிறுவனங்கள் ஆக்குவதே மத்திய அரசின் நோக்கம் ஆகும்.

ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக போய்ச் சேர்ந்து உள்ளது. மின்சார துறையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் மூலம் இந்தியா மின்மிகை நாடாக மாறி இருக்கிறது. தற்சார்பு நாடாக இந்தியாவை மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் ஆகும். இது உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்துவது ஆகாது.

தொழில்துறைக்கு ஊக்கம்

பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:-

* கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழைகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* 80 கோடி பேருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதேபோல் ஒவ்வொரு வீட்டுக்கும் 1 கிலோ பருப்பும் வழங்கப்படும்.

சுகாதார பணியாளர்களுக்கு காப்பீடு

* சுகாதார பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.

* ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு அவர்களுடைய கணக்குகளில் அடுத்த 3 மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்படும்.

* அடுத்த 3 மாதங்களுக்கு 8 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பளம் 182 ரூபாயில் இருந்து 202 ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம் 13 கோடியே 62 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

* ஏழ்மைநிலையில் உள்ள 3 கோடி மூத்த குடிமக்கள், விதவைகளுக்கு உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

நிலுவை தொகை ரூ.5 லட்சம் கோடி

* பிரதமர்-விவசாயிகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 8.7 கோடி பேர் பயன் பெறுகிறார்கள்.

* மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* மாநிலங்களுக்கான முன்பண வரையறையை ரிசர்வ் வங்கி 60 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.

* வரிசெலுத்துவோர் 14 லட்சம் பேருக்கு நிலுவையில் உள்ள ரூ.5 லட்சம் கோடி உடனடியாக வழங்கப்படும்.

* அவசரகால சுகாதார திட்டத்துக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிறு, குறு நிறுவனங்கள்

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான முதலீடு உச்சவரம்பு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி குறு நிறுவனத்துக்கான முதலீடு உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி ஆகவும், சிறு நிறுவனத்துக்கான முதலீடு உச்சவரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி ஆகவும், நடுத்தர நிறுவனத்துக்கான முதலீடு உச்சவரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் அதிகரிக்கப்படுகிறது.

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதன்மூலம் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இந்த திட்டம் அக்டோபர் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்படும்.

* நிறுவனங்கள் கடன் பாக்கியை 4 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். முதல் ஓராண்டு கடன் தவணை வசூலிக்கப்படமாட்டாது. கடனுக்கான உத்தரவாதத்தை அரசே வழங்கும்.

* அந்த நிறுவனங்களுக்கு துணை கடனுக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.

ஒப்பந்தப்புள்ளி

* வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் பெற அரசு உதவி செய்யும்.

* ரூ.100 கோடி வரை வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி வரை கடன் இருந்தால், கூடுதல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்திய நிறுவனங்களுக் கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் நியாயமற்ற போட்டி நிலவுவதால் ரூ.200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) சர்வதேச அளவில் விடப்படாது. இந்த நடவடிக்கை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

* இந்த நிறுவனங்களுக்கு ஆன்லைன் சந்தை (இ-மார்க்கெட்) வசதி ஏற்படுத்தப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கான சந்தா தொகையை அரசு செலுத்திய நிலையில், ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மேலும் 3 மாதங்களுக்கான சந்தா தொகையையும் அரசே செலுத்தும். 100 பேருக்கும் குறைவானவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மாதம் 15 ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் பெறுவோருக்கு இது பொருந்தும்.

* இதன்மூலம் 3.67 லட்சம் நிறுவனங்களுக்கும், 72 லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் ரூ.2,500 கோடி நிவாரணம் கிடைக்கும்.

* முதலாளி மற்றும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு அடுத்த 3 மாதங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன்மூலம் இரு தரப்பினருக்கும் ரூ.6,750 கோடி பயன் கிடைக்கும்.

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதாவது கால அவகாசம் ஜூலை 31-ந் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

* டி.டி.எஸ். வரி பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் வரி செலுத்துவோருக்கு ரூ.50 ஆயிரம் கோடி பலன் கிடைக்கும்.

ஒப்பந்ததாரர்களுக்கு சலுகை

* வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்காக ரூ.30 ஆயிரம் கோடியில் சிறப்பு நிதி உதவி திட்டம் தொடங்கப்படும்.

* குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் புதிய கடன் வழங்குவதற்காக வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு பகுதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.45 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

* மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும்.

* சாலை, ரெயில்வே, மத்திய பொதுப்பணித்துறை பணிகளில் ஒப்பந்ததாரர்களுக்கான வங்கி உத்தரவாதம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது.

கட்டுமான பணிகள்

* கொரோனா பாதிப்பால் கட்டுமான பணிகள் முடங்கி இருப்பதால் கடந்த மார்ச் 25-ந் தேதி அல்லது அதன்பிறகு முடிவடைய இருந்த கட்டுமான பணிகளை முடித்து கொடுக்க, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் இந்த காலஅவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கலாம்.

* புதிதாக பதிவு செய்யப்படும் கட்டுமான திட்டங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

* ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக