வியாழன், 14 மே, 2020

காங்கிரஸில் கே எஸ் அழகிரியை கவிழ்க்க கார்த்தி சிதம்பரம் .. பம்பரமாக

டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸில் அடுத்த கலாட்டா ஆரம்பம்!மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“கொரோனா ஊரடங்கு நேரத்தில் அரசியலுக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை என்பது ஊரறிந்த சங்கதியாக இருக்கிறது. அது கொரோனா அரசியலாக இருக்கட்டும், உட்கட்சி அரசியலாக இருக்கட்டும். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஊரடங்கின் தொடக்க நாட்களில் தனது கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் கிராம வீட்டில் இருந்தபடியே தினம் ஒரு வீடியோ மூலம் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். சில நாட்களுக்கு முன்புதான் சென்னை சென்று சத்தியமூர்த்தி பவனில் இருந்தபடி அடுத்தகட்ட அரசியலைத் தொடங்கியிருக்கிறார்.

இதே நேரம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள் ஊரடங்கு உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் தனது தொகுதியில் மட்டுமல்லாமல் சென்னை, திருவண்ணாமலை, மதுரை என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் கொரொனா நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவதுதான் வழக்கம். ஆனால், கார்த்தியோ இப்படி தமிழகம் முழுவதும் சுற்றி வருவதற்கு என்ன காரணம் என்று அவரது வட்டாரத்தில் விசாரித்தபோதுதான் ஊரடங்கு அரசியல் வெளியே வந்தது.

‘கார்த்தி சிதம்பரம் தரப்பில் இருந்து காங்கிரஸின் பல்வேறு மாவட்டத் தலைவர்களுக்கும் போன் போயிருக்கிறது. ‘உங்க மாவட்டத்துல சின்னவர் கொரோனா நிவாரணம் கொடுக்க விரும்புறாரு. பயனாளர்களை மட்டும் நீங்க ரெடி பண்ணுங்க. மத்த செலவெல்லாம் அவரே பார்த்துப்பாரு. பத்திரிகை நிருபர்களை கரெக்டா வரச் சொல்லிடுங்க. தமிழ்ப் பத்திரிகைகாரங்க வர்றாங்களோ இல்லியோ, இங்கிலீஷ் பத்திரிகைகாரங்க கண்டிப்பா வரணும்’ என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே பல மாவட்டத் தலைவர்கள் கார்த்தி சிதம்பரத்தை அழைத்து அவர் கையாலேயே நிவாரண உதவிகளை வழங்க வைத்திருக்கிறார்கள். அதென்ன ஆங்கிலப் பத்திரிகை நிருபர்கள் அவசியம் என்று கேட்டால், ‘இங்கிலீஷ் பத்திரிகைகள்ல வந்தால்தானே டெல்லிக்குக் கொண்டு போக முடியும்... கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது தொகுதியை மட்டும் பார்க்காமல் தமிழ்நாடு முழுதும் சுற்றி வந்து கார்த்தி சிதம்பரம் நிவாரண உதவிகளை வழங்குகிறார் என்ற ஆங்கிலப் பதிவுகள் தனது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை நோக்கிய பயணத்துக்கு உதவும் என்று கருதுகிறார் கார்த்தி சிதம்பரம்.

அதுமட்டுமல்ல... கே.எஸ்.அழகிரி பதவியேற்று ஒரு வருடங்கள் கடந்த பிறகும்கூட அவரால் இன்னும் மாவட்டத் தலைவர்களை இன்னும் தன் விருப்பத்துக்கேற்ற முறையில் மாற்றியமைக்க முடியவில்லை. ஏன், காலியாக இருக்கும் மாவட்டத் தலைவர்கள் பதவிக்குக் கூட இன்னும் புதிய நபர்கள் நியமிக்கப்படவில்லை. சிதம்பரத்தின் சிபாரிசால் மாநில தலைவரானவர் என்று கூறப்பட்ட அழகிரிக்கு மாவட்டத் தலைவர்களை மாற்றியமைக்க இன்னும் டெல்லி ஒப்புதல் கொடுக்காத நிலையில், இதுதான் நேரமென தலைவர் ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

கொரோனா ஊரடங்கு முடிந்ததுமோ, முடிவதற்குள்ளாகவோ தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்வது என்பதுதான் அவரது நோக்கம். ‘மூப்பனாரின் மகன் வாசன் தமிழக காங்கிரஸில் எத்தனையோ முக்கியத்துவம் பெற்ற நிலையில் சிதம்பரத்தின் மகன் ஏன் பெறக் கூடாது?’ என்பதே கார்த்தி ஆதரவாளர்களின் கேள்வி. இப்படியாக அடுத்த மாவட்டத்தை நோக்கிய கார்த்தியின் பயணம் தொடர்கிறது’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக