வியாழன், 16 ஏப்ரல், 2020

மும்பை போராட்டம்: பத்திரிகையாளர் கைது வீடியோ

மின்னம்பலம் :   ஏப்ரல் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் கூடிய விவகாரத்தில், மராட்டிய டிவி சேனலின் நிருபர் நேற்று (ஏப்ரல் 15) கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடன் சேர்த்து 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஏபிபி மஜா டிவி சேனலில், பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி தென்மத்திய ரயில்வேயின் உள் ரயில்வே ஆவணத்தை மேற்கோள் காட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கி மும்பையில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள் என்று செய்தி வெளியிட்டார். இதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாந்த்ராவில் குவிந்தனர்ஐபிசி மற்றும் தொற்றுநோய் சட்டம் 1897இன் கீழ் குல்கர்னியை கைது செய்த போலீஸார் அவரது செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளனர். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு மராத்திய செய்தி சேனல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது,

"பொது நலனுக்காகவும் சரியான ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலுமே செய்தி ஒளிபரப்பப்பட்டது. மேலும் மே 3 நள்ளிரவு வரை ரயில்கள் இருக்காது என்ற ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பையும் ஒளிபரப்பினோம்” என்றும் அந்த சேனல் கூறியுள்ளது. தவிர, "மாலை 3.45 மணியளவில் பாந்த்ரா வெஸ்ட் நிலையத்தில் கூடியிருந்த கூட்டத்தை எங்கள் செய்தியுடன் இணைக்க எந்தவிதமான வழியும் இல்லை” என்று சேனல் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர் குல்கர்னி நேற்று ஃபேஸ்புக் பதிவில், “ஒரு பொறுப்பான அதிகாரி காலையில் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார், சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை வீட்டுக்குத் திருப்பி அனுப்புவதை உறுதி செய்வதற்காக ரயில்வே மேற்கொண்டுள்ள முயற்சிகளை விவரிக்கும் அந்தக் கடிதம் எனக்கு அனுப்பப்பட்டதும் ரயில்வேயின் உத்தேச திட்டங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டோம். காலை 9 மணிக்கு, இந்தத் திட்டம் குறித்து நாங்கள் ஒரு செய்தியை ஒளிபரப்பினோம், ரயில்கள் எப்போது தொடங்கப்படும் என்று எங்கும் கூறவில்லை” என்கிறார் அவர்.
கைது செய்யப்பட்ட மற்றவர்களில் நவி மும்பை குடியிருப்பாளரும் உள்ளூர் தலைவருமான வினய் துபேயும் ஒருவர். புலம்பெயர்ந்தோரை வீதிகளில் இறங்கச் சொல்லும் வீடியோவை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட துபே கைது செய்யப்பட்டார்.
வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக