வியாழன், 16 ஏப்ரல், 2020

பர்மாவில் பெரியார்.. பர்மா திராவிட முன்னேற்ற கழகம் .. வரலாறு

பாவலர் நாரா நாசியப்பம்  : பர்மாவில் பெரியார் ! இரங்கூன் வருகை!
⁠1954 ⁠அனைத்துலக புத்த சமய மாநாடு, பர்மாவின் தலைநகரான இரங்கூனில் நடக்கவிருந்தது. இம்மாநாட்டை பர்மிய அரசே முன்னின்று நடத்தியது, அப்போது பர்மாவின் தலைமை அமைச்சராக இருந்த ஊநூ, புத்தமதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர், உண்மையான சமய நம்பிக்கை உடையவர், சமய நெறிப்படி வாழ்க்கை நடத்தியவர். அவருடைய ஆர்வமும், பெருமுயற்சியும் தான் அனைத்துலக புத்த சமய மாநாட்டின் சிறப்புக்குக் காரணமாய் அமைந்தன.
⁠புதிதாக புத்தசமயத்தில் சேர்ந்த டாக்டர் அம்பேத்காரின் தலைமையில் இந்த மாநாடு நடந்தது.
⁠டாக்டர் அம்பேத்கார் புத்த சமயத்தில் புதிதாகச் சேர்ந்ததால், அதற்குப் புது வலிவும் பொலிவும் கூடியிருந்தது, எனவே மாநாட்டைக் கூட்டியவர்கள் பெருமைக்குரிய டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அதனைக் கூட்டுவதே சிறப்பென்று முடிவு செய்தார்கள்.
⁠தலைமை அமைச்சர் ஊநூவின் பேரார்வத்தின் காரணமாக மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. இரங்கூனை அடுத்த கபா ஏ என்ற இடத்தில் அமைதிக் கோபுரம் ஒன்று கட்டி அதன் அருகில் மாநாடு நடைபெறுவதற்காக மலைக்குகை போன்ற அமைப்புடைய ஒரு பெரிய கூடம் கட்டப்பட்டது.
⁠அந்தக் கூடத்தில் தான் உலக புத்தசமயத் தலைவர்கள் கூடினார்கள்.
⁠டாக்டர் அம்பேத்கார், இந்த மாநாட்டில் பெரியாரும் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அவருடைய விருப்பத்தை மாநாட்டுக் குழுவினர் ஒப்புக்கொண்டனர்.

⁠உடனே பெரியாருக்குத் தந்தி பறந்தது. உயிர் நண்பரும் தாழ்த்தப்பட்ட மக்களை முன்றேற்றுவதற்கென்றே வாழ்வை ஈடு வைத்தவருமான மற்றொரு தலைவர் அம்பேத்கார் அழைக்கிறார் என்றவுடன் பெரியாரும், தம் மற்ற வேலைகளையெல்லாம் புறத்தள்ளி விட்டு உடனே புறப்பட்டார்.
⁠இரண்டே நாளில் பயணத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்துகொண்டு அப்போதே புறப்படவிருந்த சோனாவதி என்ற கப்பலில் புறப்பட்டு விட்டார்.
⁠பெரியார் மாநாட்டுக்குப் புறப்பட்டு வரும் செய்தி அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
⁠இரங்கூனில் இருந்த தன்மானத் தோழர்களாகிய எங்களுக்கெல்லாம் இச்செய்தி பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
⁠வானொலியில் இச்செய்தியைக் கேட்ட நான் பெரியாரை இரங்கூனில் பார்க்கப் போகிறோம் என்ற அளவில் மகிழ்ச்சியுற்றேன், ஆனால் அதற்கப்பால் நான் எந்த நினைப்பும் கொள்ளவில்லை.
⁠அப்போது நான் இரங்கூனில் இயங்கி வந்த பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளராக இருந்தேன்.
⁠திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றிய தொடக்க காலம், பெரியார் திருமணத்தின் காரணமாக வெறுப்புற்ற திராவிடர் கழகத் தோழர்கள், தளபதி அண்ணாவின் தலைமையில் பிரிந்து உருவாக்கிய கழகம் திராவிட முன்னேற்றக் கழகம்'. அதன் ஒரு கிளையாக இயங்கி வந்தது பர்மா திராவிட முன்னேற்றக் கழகம்.
⁠பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐநூறு உறுப்பினர்கள் இருந்தார்கள். அக்கழகத்தின் தோழர்கள் நான் இரங்கூனில் இருந்த காலத்தில் என்னை அடிக்கடி சந்தித்து கழகப்பணியில் என் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டார்கள். புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய கட்டத்தில் என்னை வற்புறுத்தி ஒப்புதல் கேட்டுப் பொதுச் செயலாளர் பதவியை எனக்குக் கொடுத்தார்கள்.
⁠1954 ஆம் ஆண்டு பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த நான், பெரியார் பர்மாவுக்கு வருகிறார் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியடைய முடிந்ததே தவிர அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.
⁠செய்தி கேட்ட மறுநாள், பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், சிறந்த பேச்சாளருமான சேரன் என்னைத் தேடிவந்தார். ⁠"செய்தி கேட்டீங்களா?" என்றார்.
⁠ஆமென்றேன்.
⁠"என்ன ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?" என்றார்.
⁠"நாம் என்ன செய்வதற்கிருக்கிறது?" என்றேன்.
⁠"பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கலாமே!" என்றார்.
⁠"நாம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள்; திராவிடர் கழகம் அல்ல" என்றேன்.
⁠"ஆம், பெரியார் நம் தலைவர், அவர் முதன் முதலாக பர்மாவுக்கு வருகிறார், நாம் தானே வரவேற்புக் கொடுக்க வேண்டும்" என்றார்.
⁠"கண்ணீர்த்துளிகள்" என்ற பெயரால் பெரியாரால் அழைக்கப்பட்ட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்தான் தலைவர்.
⁠நண்பர் சேரன் சொன்னதை என்னால் மறுக்க முடியவில்லை."பெரியார் நம் தலைவர்", என்ற உண்மையை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.
⁠"சரி.பொதுக்குழுவை கூட்டுவோம், முடிவெடுப்போம்" என்று கூறி அன்றே பொதுக்குழு உறுப்பினர்கள் ஐம்பது பேருக்கும் அழைப்பு அனுப்பி மாலை ஓர் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம்.
⁠பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கவேண்டும் என்று ஆறு தோழர்கள் பேசினார்கள். இறுதியில் நான் தீர்மானத்தை முன் மொழிந்தேன்.
⁠நான்கு தோழர்கள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ⁠ஐம்பது பேரில் நாற்பத்தாறு பேர் ஒப்புக் கொண்டு விட்டார்கள். ஆனாலும், ஒப்பற்ற ஒரு தலைவருக்கு நாம் கொடுக்கும் வரவேற்பு ஒரு மனதாக இருக்கவேண்டும் என்று நான் எடுத்துக்கூறியதன் பேரில் அந்த நான்கு தோழர்களும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார்கள்.
⁠நாம் ஒருமனதாகத் தீர்மானித்து விட்டோம், ஆனால் நம் வரவேற்பைப் பெரியார் ஏற்றுக் கொள்வார்களா? இப்படி ஒருவர் ஐயப்பட்டார்.
⁠இந்த ஐயம் சரியானதே. ஏற்பாடுகளையும் செய்வோம், பெரியார் கப்பலை விட்டு இறங்குமுன் கப்பலிலேயே போய்ச் சந்திக்கலாம். அவர் ஒப்புக்கொண்டால் வரவேற்புக் கொடுத்துப் பல கூட்டங்கள் நடத்துவோம், இல்லாவிட்டால் அமைதியாகத் திரும்பிவிடுவோம்.
⁠இவ்வாறு முடிவெடுத்தோம்.
⁠நுழைமுகத்தில் கப்பல் வந்து கொண்டிருக்கிறது. இரங்கூன் ஆற்றில் நுழைந்து துறைமுகம் வர இன்னும் நான்கு மணி நேரம் ஆகும்.
⁠நான் காலை 5 மணிக்கு துறைமுகம் சென்றேன். துறைமுகம் வந்து சேரும் முன்பே கப்பலில் ஏறிச் சுங்க அதிகாரிகள் சோதனை போடுவது வழக்கம். அந்தச் சோதனைக்காக ஒரு மோட்டார் படகில் சுங்க அதிகாரிகள் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் விரைந்து சென்றேன். "நானும் உங்களுடன் வருகிறேன்" என்றேன்.
⁠"நீ எங்களோடு வரக்கூடாதே" என்றார்கள். ⁠"தெரியும், புத்த சமய மாநாட்டுக்காக எங்கள் தலைவர் இந்தக் கப்பலில் வருகிறார். முன்னாலேயே அவரைப் பார்த்து முன்னேற்பாடுகள் செய்யவேண்டும். தயவுசெய்து என்னை அழைத்துச் செல்லுங்கள்" என்றேன். மாநாடு என்றவுடன் அவர்கள் மகிழ்ச்சியோடு என்னைச் சேர்த்துக் கொண்டார்கள்.
⁠துறைமுகத்தில் வந்து சேர்வதற்கு நான்கு மணி நேரம் முன்னதாக, ஆற்று நுழைமுகத்தில் மெல்ல வந்து கொண்டிருந்த கப்பலில் சுங்க அதிகாரிகளுடன் நானும் கப்பலில் ஏறினேன். சற்றுநேரத்தில் குடியேற்ற அதிகாரிகளும் கப்பலில் ஏறிவிட்டார்கள். சுங்கஅதிகாரிகள் ஒருபுறம் குடியேற்ற அதிகாரிகள் ஒருபுறம் பயணிகளைச் சோதனையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நான் பெரியாரைத் தேடினேன். கப்பல் மேல்தட்டில் அதிகாரிகளின் சோதனைக்காகப் பெரியார் க்யூ வரிசையில் நின்று கொண்டிருந்தார், அவர் அருகில் மணியம்மையார். அடுத்து உதவியாளர் ராஜாராம்.
⁠நேரே பெரியாரிடம் சென்று "வணக்கம் அய்யா" என்று வணங்கினேன்.
⁠"நான்கு நாளாகக் கப்பலில் இருந்தபோது என்ன செய்தாய்? இப்போது இறங்கப் போகிறபோது வருகிறாயே, அதிகாரிகள் பார்த்தால் சினம் கொள்வார்கள். போ போ" என்றார் பெரியார்.
⁠அய்யா, நான் கரையிலிருந்து தான் வருகிறேன். அதிகாரிகளின் லாஞ்சில் தான் வந்தேன். ⁠நீங்கள் இரங்கூனுக்கு வருவதாக வானொலியில் செய்தி கேட்டோம் உங்களுக்கு வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இங்கே திராவிடர் கழகம் கிடையாது. திராவிடர் முன்னேற்றக் கழகம் தான் இருக்கிறது. நாங்கள் தான் உங்களுக்கு வரவேற்புக் கொடுக்கிறோம். நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? என்று அறிந்து கொள்ளவே முன்னதாக வந்தேன்".
⁠"நீ யார் என்று எனக்குத் தெரியாதே!"
⁠முருகு சுப்பிரமணியன் நடத்தும் பொன்னி இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவன். பெயர் நாச்சியப்பன்
⁠"கவிஞர் நாச்சியப்பனா? நீ எங்கே இந்த ஊரில்?"
⁠"அய்யா நான் வந்து நான்கு ஆண்டுகளாகிறது. இங்கு தான் ஒரு கப்பல் உணவுப் பொருள் ஒப்பந்தக்காரிடம் வேலை செய்கிறேன். இங்குள்ள திராவிடர் முன்னேற்றக் கழகத்திற்கு இந்த ஆண்டு நான்தான் பொதுச் செயலாளர்."
⁠"உங்களை வரவேற்பதற்கு எங்கள் உறுப்பினர்கள் ஐநூறுபேரும் உற்சாகமாக இருக்கிறார்கள்."
⁠"உங்கள் வரவேற்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ ஏற்பாடுசெய்" என்றார் பெரியார்.
⁠"என்ன தி.மு.க வா?" என்றார் மணியம்மையார்.
⁠"வந்த இடத்திலே தி க என்ன தி மு க என்ன? பசங்க ஆர்வமாக இருக்காங்க. தம்பி நீ ஏற்பாடு செய்?" என்றார் அன்புத் தந்தை பெரியார்.
⁠எனக்கு கரை கொள்ளாத மகிழ்ச்சி.
⁠"அய்யா, எத்தனை நாள் இருக்கப் போகிறீர்கள்?" ⁠"அம்பேத்காரைப் பார்த்த பிறகு தான் முடிவு செய்யவேண்டும்."
⁠"அய்யா எங்கே தங்கப் போகிறீர்கள்?"
⁠"அம்பேத்காரைப் பார்த்த பிறகு தான் தெரியும்"
⁠"சரி, தற்சமயம் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா?"
⁠"வருகிறேன்" என்றார் பெரியார்.
⁠எனக்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
⁠வந்தது வீண் போகவில்லை.
⁠பெரியார் தி மு க வரவேற்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டுவிட்டார். பெருந்தன்மைக்கு இலக்கணமாகி விட்டார்.
⁠இனி, கழகத் தோழர்கள் இடையே வெற்றிப் பெருமிதத்தோடு பேசமுடியும்.
⁠அதிகாரிகளின் சோதனைகள் - வழக்கமான சடங்குகள் ஆகியவற்றைப் பெரியார் பார்க்கட்டும் என விட்டுவிட்டு அதே கப்பலில் இரங்கூனுக்கு வந்த என் மனைவியிருக்கும் பகுதி எதுவென்று தேடிக்கொண்டு புறப்பட்டேன்.
⁠அங்கேயும் அதிகாரிகள் பயணிகளின் பயனச் சீட்டுகளைச் (Passports) சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.
⁠என் உறவினர் ஒருவரோடு வந்திருந்த மனைவியைச் சந்தித்தேன்.
⁠"கப்பலில் கூட்டிக்கொண்டு வந்தீர்கள், வீட்டுக்கும் நீங்களே கூட்டிக்கொண்டுவந்து விட்டுவிடுங்கள். நான் பெரியாரை அழைத்துக்கொண்டு செல்கிறேன்" என்று கூறி எங்களுக்காக வாடகைக்குப் பிடித்திருந்த வீட்டின் முகவரியை உறவினரிடம் கொடுத்தேன். மீண்டும் பெரியாரிடம் வந்து சேர்ந்தேன்.
⁠கப்பல் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. 10 மணியிருக்கலாம். ஏணிப்படியை இறக்கினார்கள், பயணிகள் ஒவ்வொருவராக இறங்கினார்கள், நான் பெரியாரை அழைத்துக் கொண்டு இறங்கினேன்.
⁠வலது கையில் தடியும் இடது கை என் தோள்மீதுமாக ஊன்றிக் கொண்டு பெரியார் படிப்படியாக மெதுவாகக் கப்பலை விட்டு இறங்கி வந்தார்.
⁠மணியம்மையும் தோழர் ராஜாராமும் பின்னால் தொடர்ந்துவந்தார்கள்.
⁠துறைமுகத்தில் எதிர்புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள்! மற்ற மூன்று புறத்திலும் ஆற்றின் மீது படகுகளில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள்! நான்கு புறமும் தோழர்கள்; மற்றும் ஆதரவாளர்கள்.
⁠பெரியார் தலை வெளியே தெரிந்தவுடன் வாழ்க முழக்கம் வானைப் பிளந்தது.
⁠பெரியார் வாழ்க!
⁠பெரியார் வாழ்க!
⁠பெரியார் வாழ்க!
⁠தொடர்ந்து தோழர்கள் முழங்கினார்கள்.
⁠பயணிகள், பயணிகளை வரவேற்கக் கப்பலடிக்கு வந்திருந்த உறவினர்கள், ராணுவ அதிகாரிகள், கப்பல்துறையினர், சுங்கத் துறையினர் எல்லாரும் பெரியாரையே நோக்கினார்கள். ⁠கருப்புச்சட்டையும், வெள்ளைத் தாடியும், சிவந்த மேனியும், நிமிர்ந்த பார்வையும் கொண்ட பொலிவு மிகுந்த அந்தத் தலைவரையே எல்லாரும் நோக்கினார்கள்.
⁠யார் இவர்?
⁠புத்த சமய மாநாட்டிற்காக வந்திருக்கும் இந்திய நாட்டுப் பொங்கி!
⁠புத்த பிக்குகளை பர்மிய மொழியில் பொங்கி (Poungyi) என்று அழைப்பார்கள்.
⁠அருகில் வந்தார்கள் வணங்கினார்கள்!
⁠காஞ்சி மடாதிபதிக்கு நமது குடியரசுத் தலைவர்களும், தலைமையமைச்சர்களும், நீதிபதிகளும், IAS அதிகாரிகளும், மேல் சாதியினரும் செய்கிற மரியாதையை அன்று பெரியாரைக் கண்ட அத்தனைபேரும் செய்ததை நான் கண்டேன்.
⁠அவரை ஒரு புத்தசமய பிக்குவாகக் கருதிய அவர்கள் அனைவரும் அவ்வாறு வணங்கி நின்றார்கள்.
⁠காவல் துறை அதிகாரிகளும், சுங்கத் துறையினரும், கப்பலடிக்குக் காவலுக்கு வந்திருந்த இராணுவ வீரர்களும் கூடப் பெரியாரைக் கண்டவுடன் கையெடுத்துக் கூப்பி வணங்கினார்கள்.
⁠சுங்கப்பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகள் பெரியாரின் பெட்டிகளைத் திறக்கவேண்டாம் என்று கூறியே எங்களைப் போகவழிவிட்டார்கள். எனவே, அந்த ஆய்வுக் கூடத்துக்குள் நுழைந்த ஐந்தாவது நொடி துறைமுகத்தின் வெளியில் வந்துவிட்டோம். ⁠ஒரு ஜீப்பை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு நேரே எங்கள் வாடகை வீட்டுக்குப் புறப்பட்டேன்.
⁠வீடுவந்தவுடன் கீழே இறங்கினேன், பெரியாரும் தோழர் ராஜாராமும் மணியம்மையாரும் இறங்கினார்கள். பெரியார் என் கையைப் பிடித்துக்கொண்டார். மெல்ல அழைத்துக்கொண்டு ஒடுங்கிய படிக்கட்டுப் பாதை வழியே மேலே ஏறினேன்.
⁠மூன்றாவது மாடி வந்தவுடன், பூட்டியிருந்த கதவைத் திறந்தேன்.
⁠கூட்டிமெழுகித் தூய்மையாக இருந்த அந்த வீட்டினுள் நுழைந்தவுடனே,
⁠"எங்களுக்காகவே இந்த வீட்டை ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?" என்று மணியம்மையார் கேட்டார்கள்.
⁠"இல்லை நாங்கள் குடியிருப்பதற்காக வாடகைக்குப் பிடித்த வீடு" என்றேன்.
⁠"எங்களைத் தங்க வைப்பதற்காக உங்கள் மனைவியை வேறு வீட்டிற்கு அனுப்பிவிட்டீர்களா?"
⁠"இல்லை என் மனைவியும் இதே கப்பலில் தான் வருகிறாள்.இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவாள்".
⁠"என்ன பிள்ளை நீ மனைவியை விட்டுவிட்டு எங்களைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாயே! போ போ! காரில் சென்று உடனே அழைத்துக்கொண்டு வா!" என்று பெரியார் சொல்லுமுன்னாலே என் மனைவி பெட்டி படுக்கை, முதலிய பதினைந்து மூட்டை முடிச்சுகளோடு வந்து இறங்கினாள். ⁠கூலிக்காரர்கள் எல்லாப் பொருள்களையும் இறக்கிவைத்தவுடன், "சென்னையிலிருந்து குடித்தனம் நடத்தவேண்டிய எல்லாச் சாமான்களுமே கொண்டு வந்துவிட்டாயா?" என்று மணியம்மையார் கேட்க,
⁠கால் முகம் கழுவி விட்டு, என் மனைவி அடுப்புப் பற்றவைத்தாள்.
⁠"என்ன செய்யப்போகிறாய்?" என்று அம்மையார் கேட்க,
⁠"சமைக்கப்போகிறேன்" என்று கூறிக்கொண்டே, காய்கறிகள், மளிகைச் சாமான்கள், அரிசி, பருப்பு எல்லாவற்றையும் மூட்டைகளிலிருந்து பிரித்தெடுத்தாள் என் மனைவி
⁠நான்கு நாட்களாகக் கப்பலில் வந்திருக்கிறாய். எங்களைப் போல் உனக்கும் அலுப்பாகத் தானே இருக்கும். இன்று சமைக்கவேண்டாம். எல்லோரும் ஓட்டலில் சாப்பாடு எடுத்துவரச்சொல்லிச் சாப்பிடலாம். நாளை நீ சமைத்து நாங்கள் சாப்பிடுகிறோம்" என்று மணியம்மையார் கூற, பெரியாரும் வற்புறுத்திச் சொன்ன பிறகு என் மனைவி சமைக்கும் வேலையை நிறுத்தினாள்.
⁠"வெந்நீர் மட்டும் போடுகிறேன், எல்லாரும் குளியுங்கள்" என்று அடுப்பைப் பற்றவைத்தாள்.
⁠"குளிப்பதா? நாளைப் பார்த்துக் கொள்ளலாம்" என்று பெரியார் கூற, மணியம்மையாரும், ராஜாராமும் என் மனைவியும் ஒருவர் பின் ஒருவராகக் குளித்தார்கள்.
⁠சிறிது நேரங்கழித்து பால்கனி வழியாகத் தெருப்பக்கம் எட்டிப் பார்த்தேன். ⁠எங்கள் வீட்டின் முன் பெருங்கூட்டம் நின்று கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு வரும் படிக்கட்டு வாயிலின் முன் இரண்டு கழகத் தோழர்கள் நின்று கூட்டம் உள்ளே நுழைந்துவிடாதபடி கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
⁠யார் எவர் என்று விசாரித்துக் குறிப்பிட்ட சிலரை மட்டும் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.
⁠மிக ஒழுங்குபடுத்தி, ஒரு தடவைக்கு இரண்டு மூன்று பேரை மட்டும் அனுப்பினார்கள், அவர்கள் பெரியாரைப் பார்த்துப் பேசித் திரும்பிய பின் அடுத்து இரண்டு அல்லது மூன்று பேரை அனுப்பினார்கள்.
⁠மற்ற கழகத் தோழர்கள் நடைபாதையில் நின்று கொண்டிருந்தார்கள்.
⁠மேலே வந்தவர்கள் பெரியாருக்கு வணக்கம் சொன்னார்கள். புத்தசமய மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இந்தியத்தலைவர் என்ற முறையில் பெரியாரை வரவேற்க வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்கள். பெரியாரின் வாழ்த்துரையைப் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள்.
⁠இரங்கூனில் இருந்த அத்தனை இந்தியச் சங்கத் தலைவர்களும், பெரியாரை வந்து சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற்றுச் சென்றார்கள்.
அப்படி வந்தவர்களின் பட்டியல்
⁠அகில பர்மா இந்தியன் காங்கிரஸ்
⁠அகில பர்மா தமிழர் சங்கம்
⁠அனைத்து பர்மா குஜராத்தி சங்கம்
⁠பர்மா மார்வாரி சங்கம்
⁠பர்மா முஸ்லிம் லீக்
⁠பெங்காளி சங்கம்
⁠ஜெயின் சங்கம்
⁠ஆந்திரர் சங்கம்
⁠மலையாளிகள் சங்கம்
⁠நாடார் சங்கம்
⁠சோழியா முஸ்லிம் சங்கம்
⁠ஒட்டல் தொழிலாளர் சங்கம்
⁠இரங்கூனில் இருந்த எல்லா இந்தியத் தலைவர்களும், பெரியாரை வந்துசந்தித்துச் சென்றார்கள்.
⁠முந்தியநாள் வரை யாருக்கும் தெரியாதிருந்த என் வீடு, ஒரே நாளில் இந்திய இனத் தலைவர்கள் அத்தனை பேரும் தேடிவந்து கூடும் இடமாக மாறிவிட்டது.
⁠மூன்றுமணி வரை பெரியார் வந்தவர்களிடமெல்லாம் முகமலர்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார். சற்று ஒய்வெடுத்தால் தேவலை என்று கூறவே, கீழே இருந்த கழகத் தோழர்களிடம், மேற்கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று கூறி, உணவு விடுதியிலிருந்து வந்த சாப்பாட்டை எடுத்து என் மனைவி பரிமாற அனைவரும் உணவு உண்டோம்.
⁠சுமார் இரண்டு மணிநேரம் தூங்கியபிறகு பெரியார் கண் விழித்தார்.
⁠என் மனைவி கொண்டு வந்திருந்த சீடை, முறுக்கு, அதிரசம், பிஸ்கட் ஆகியவற்றுடன் காப்பியருந்தினோம்.
⁠பெரியார் என்னை அருகில் அழைத்தார். ⁠எனக்கு இரத்த அழுத்தம் இருக்கிறது. மருத்துவர்கள் மாடிப்படி ஏறக்கூடாதென்று கூறியிருக்கிறார்கள். காலையில் நம் தோழர்கள் கொடுத்த வரவேற்பில் என்னை மறந்து உற்சாகமாக மூன்றுமாடி ஏறி வந்துவிட்டேன். எனக்குத் துன்பமே உண்டாகவில்லை. ஆனால் தொடர்ந்து நான் மாடியில் ஏறிவரமுடியாது.இங்கே இந்தப்பெண் (என் மனைவியைக் காட்டி) ஓடி ஓடி எங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்கிறாள். சிறிதுகூடக் குறைவைக்கவில்லை. இருந்தாலும் கீழ் வீடாக ஒன்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
⁠"உடனே ஏற்பாடு செய்கிறேன்" என்றேன்.
⁠கழகத் தோழர்கள் உதயணன், கன்னையா, மதியழகன், தமிழரசன் ஆகியோர் அங்கே இருந்தார்கள்.
⁠"அய்யாவுக்குக் கீழ் வீடாக ஒன்று ஏற்பாடு செய்யவேண்டுமே" என்றேன்.
⁠"உடனே ஏற்பாடு செய்து கொண்டுவருகிறோம்" என்று அவர்கள் புறப்பட்டார்கள்.
⁠வீடு ஏற்பாடு செய்யச் சென்ற தோழர்கள் இன்னும் திரும்பவில்லை.
நான்கு தோழர்கள் வந்தார்கள். "பெரியார் தங்குவதற்காக நாங்கள் வசதியான ஒரு வீடு பிடித்திருக்கிறோம். உடனே அவரை அங்கே அழைத்துச் செல்லலாம்" என்றார்கள்.
⁠பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கக் கூடாதென்று பொதுக்குழுவில் எதிர்ப்புத் தெரிவித்த அந்தத் தோழர்கள் இவ்வளவு ஆர்வமாகப் பெரியாருக்கு வீடு ஏற்பாடு செய்தது வியப்பாய் இருந்தது. ⁠"நான் வேறு தோழர்களிடம் வீடு ஏற்பாடு செய்ய அனுப்பியிருக்கிறேனே!" என்றேன்.
⁠"நாங்கள் வீடு பேசி ஒரு மாத வாடகையும் முன் பணமாகக் கொடுத்துவிட்டோம். உடனே அவரை அழைத்துச்செல்லவேண்டும்".
⁠"நான் உங்களை வீடு பார்க்கச் சொல்லவில்லை, பரவாயில்லை, வீடு எங்கே பார்த்திருக்கிறீர்கள்? வசதியான வீடா?" என்று கேட்டேன்.
⁠"மிக வசதியான வீடு," என்று கூறி முகவரியைச் சொன்னார்கள்;
⁠"கீழ் வீடு தானே?" என்று கேட்டேன்.
⁠"இல்லை, இரண்டாவது மாடி" என்றார்கள் அந்தத் தோழர்கள்.
⁠"பெரியார் மாடியில் ஏறிவர முடியாது. கீழ் வீடாக இருந்தால் தான் வசதி! இருக்கட்டும். போன தோழர்கள் வரட்டும். அவர்கள் ஏற்பாடு செய்துள்ள வீடு எப்படி என்று தெரிந்து கொண்டு, பிறகு முடிவெடுக்கலாம்" என்றேன்.
⁠சிறிது நேரத்தில் அந்த நண்பர்கள் வந்தார்கள்.
⁠"மவுந்தாலே வீதியில் ஒரு வீடு ஏற்பாடு செய்திருக்கிறோம். திரைப்படங்கள் வரவழைத்துப் போடுபவர், அவர் தம் அலுவலகக் கட்டிடத்தை நமக்குப் பதினைந்து நாட்கள் ஒதுக்கித் தர இசைந்திருக்கிறார்." என்றார்கள.
⁠"வாடகை எவ்வளவு?" என்று கேட்டேன் நான்.
⁠"வாடகை கிடையாது, அவர் பெரியாரிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர், தன் வீட்டில் பெரியார் தங்குவதைப் பெருமையாகக் கருதுகிறார்" என்றார்கள். ⁠"சரி, வீடு கீழ்வீடா?, மேல் மாடியா?" நான்,
⁠"கீழ்வீடு தான் கீழ்வீடாக இருக்க வேண்டும் என்று தானே வீடு தேடிப்புறப்பட்டோம்" என்றார்கள்,
⁠"சரி அங்கேயே போகலாம்!" என்றேன் நான்,
⁠நான்கு தோழர்களும் சீறினார்கள்,
⁠"நாங்கள் முன் பணம் கட்டிப் பிடித்த விடு என்னாவது" என்று கேட்டார்கள்.
⁠"இருக்கலாம். கீழ் வீடாக இல்லையே! வேண்டாம்" என்றேன் நான்.
⁠"இல்லை, நாங்கள் பெரியாரை அழைத்துச் செல்கிறோம்" என்றார்கள்.
⁠"கீழ் வீடாக ஒன்று கிடைத்திருக்கும் போது, நீங்கள் ஒரு மாடி வீட்டுக்குக் கூப்பிடுகிறீர்கள். இது முதியவரான பெரியாருக்குத் துன்பம் தருவதாக இருக்கும், முன் பணத்தைத் திருப்பி வாங்குங்கள். கிடைக்காவிட்டால், நான் தந்து விடுகிறேன். இப்போது வீண் தொல்லை கொடுக்காதீர்கள்" என்றேன் நான்.
⁠"ஒரு முஸ்லிம் வீட்டுக்குப் பெரியாரை அழைத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று அந்த நான்கு பேரும் முழங்கினார்கள்.
⁠திரைப்படத் தொழில் செய்யும் அந்த அன்பர் முஸ்லிம் என்பது அப்போது தான் எனக்குத் தெரியவந்தது. நான் அந்த நான்கு பேரை நோக்கிச் சொன்னேன்.
⁠பெரியார் மீது மரியாதை வைத்து, வாடகையே வேண்டாம் என்று கூறி நமக்காகத் தன் அலுவலக வேலைகளைக் கூட பொருட்படுத்தாமல் தன் வீட்டைத் தர ஒப்புக் கொண்டார். முஸ்லிம் என்பதற்காக அவர் அன்பைப் புறக்கணிக்க முடியாது. மாடிப்படியேறி வரமுடியவில்லை என்று பெரியார் கூறுவதனால்தான் நாம் வேறு இடம் ஏற்பாடு செய்கிறோம். இல்லாவிட்டால் என் வீட்டிலேயே தொடர்ந்து இருக்கலாம். தயவு செய்து குழப்பம் செய்யாதீர்கள்." என்று வேண்டிக் கேட்டுக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.
⁠வீடு தயாராக இருப்பதாக நண்பர்கள் கூறியதால் அன்று மாலையே பெரியாரை மவுந்தாலே வீதி வீட்டுக்கு அழைத்துச் சென்றோம்.
⁠எங்கள் வாக்கு வாதங்களெல்லாம் அன்று பெரியாருக்குத் தெரியாது.
⁠மறுநாள் புத்த சமய மாநாட்டுக்குச் சென்று வந்தார் பெரியார். மாநாட்டில் பெரியார் 15 மணித்துளிகள் தமிழில் பேசினார். அவர் பேசிய பேச்சின் கருத்தை டாக்டர் அம்பேத்கார் ஆங்கிலத்தில் பேசினார், புத்த சமயத்தின் புதுமைச் செயல்களைப் பாராட்டிப் பெரியார் பேசிய கருத்துக்களை மாநாட்டினர் கேட்டு மகிழ்ந்தனர். பர்மியப் பத்திரிகைகளில் செய்தி வந்தது.
⁠மாநாடு முடிந்தவுடனேயே பெரியார் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுப் போக விரும்பினார். ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு வாரம் தங்கி நாங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பேச ஒப்புக் கொண்டார்.
⁠முதலில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம் வழக்கமாக பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டங்கள் இராமகிருஷ்ணா மிஷன் நூலகத்தின் சொற்பொழிவுக் கூடத்தில் தான் நடைபெறும். ⁠பெரியார் பேசுவதற்காக ஏற்பாடு செய்த அந்த நாளில் வேறு கூட்டத்திற்கு அனுமதி வழங்கபட்டதால் வேறுஇடம் தேடிக் கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அகில பர்மா இந்தியன் காங்கிரஸ் இரங்கூனில் இந்தியப் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார்கள். அந்த உயர்நிலைப் பள்ளியில் ஒரு சொற் பொழிவுக் கூடம் இருந்தது. அதன் பெயர் கால்சா மண்டபம் அதையே பெரியார் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தோம்.
⁠இராமகிருஷ்ணா மிஷன் சொற்பொழிவுக் கூடத்தில் ஆயிரம் பேர் அமரலாம். இந்தியன் காங்கிரஸ் உயர்நிலை பள்ளிக்கூடத்து மண்டபத்தில் 500 பேர்தான் அமரமுடியும். ஒரே நாளில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததால் 500 பேர் வந்தாலே போதும் என்று நினைத்தோம்.
⁠பெரியார் என்னை அழைத்தார். "கூட்டம் எங்கே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? திறந்த வெளியிலா? ஏதேனும் மண்டபத்திலா?"
⁠"மண்டபத்தில் தான்!"
⁠"அப்படியானால் கட்டணம் வைக்கலாமே?
⁠இல்லை இந்த நாட்டுக்குப் புதிதாக வந்திருக்கிறீர்கள். கூட்டம் நிறைய வராது. கூட்டம் சேர வேண்டும் என்றால் கட்டணம் வைக்கக்கூடாது. கட்டணம் வைத்தால் கூட்டம் குறைந்து விடும் வேண்டாம்."
⁠"அப்படியானால் மிகக் குறைந்த கட்டணம் வைக்கலாம். ஒரு ரூபாய் வைத்தால் கூடப் போதும்."
⁠"இல்லை, கட்டணம் வேண்டாம். கூட்டம் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக வருகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு கருத்துப் பரவும்." ⁠"பணம் வேண்டுமென்றால் தனியாக நிதி வசூலித்துத் தருகிறேன். கூட்டத்திற்குக் கட்டணம் வைக்கத் தேவையில்லை" என்று நான் மறுத்து விட்டேன்.
⁠மேலும் என்னை வற்புறுத்தவில்லை பெரியார்.
⁠கால்சா மண்டபத்தில் கூட்டம் தொடங்கியது.
⁠தோழர் சேரன் தலைமையில் பெரியார் சிறப்புச் சொற்பொழிவு செய்வதாக விளம்பரம் செய்திருந்தோம்.
⁠தோழர் சேரன் தலைமையுரை தொடங்கினார். மண்டபத்தின் வாசல்பக்கம் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
⁠நான் . மேடையில் பெரியாருக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். மேடைக்கு வந்த ஒரு தோழர் என்னைத் தனியாக அழைத்தார்.
⁠"எந்த நேரமும் கலகம் உருவாகலாம், மண்டபத்தின் வாசலில் ஒரே ரகளையாக இருக்கிறது." என்றார்.
⁠"என்ன காரணம்?" என்றேன்.
⁠"உள்ளே நுழைய முயற்சி! உள்ளே கூட்டம் நிறைந்து விட்டது. வெளியில் நிற்பவர்கள் அனைவரும் உள்ளே வரமுயல்கிறார்கள்."
⁠"இவ்வளவு தானா? நான் ஏதோ மாற்றுக் கட்சிக்காரர்களின் கலக முயற்சியோ என்று பயந்துவிட்டேன். உடனே போலிஸ் உதவி கேட்டுப் போன் செய்யலாமா?" என்று கேட்டேன் நான்.
⁠"அவர்கள் வரும் வரை தாங்காது. கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது" என்றார் நண்பர்.
⁠"வெளியில் எத்தனை பேர் இருப்பார்கள்?" ⁠"இரண்டாயிரம் பேர் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம்"
⁠"அவ்வளவு கூட்டமா?"
⁠வியப்புடன் கேட்டேன். சட்டென்று எழுந்தேன்.
⁠ஒலிபெருக்கியை நோக்கி ஓடினேன். தலைமை உரையாற்றிக் கொண்டிருந்த தோழரைக் கையைப் பிடித்து இழுத்தேன்.
⁠ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டேன்.
⁠"தமிழ்ப் பெருமக்களே! மண்டப வாயிலில் கூடியிருக்கும் அன்பர்களே! உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்.
⁠நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களை நீங்களெல்லாம் காணவும், அவர் பேச்சைக் கேட்கவும் ஆசைப்படுகிறீர்கள் புரிகிறது. இந்த மண்டபத்தில் கூட்டம் நிறைந்து விட்டது. வெளியில் உள்ள நீங்கள் உள்ளே வந்து நிற்கக் கூட இடமில்லை. இந்நிலையில் உங்களையெல்லாம் நான் வேண்டிக் கொள்கிறேன். வீதிப் பிளாட்பாரத்தில் அப்படியே உட்கார்ந்து விடுங்கள் பெரியார் பேச்சை அமைதியாகக் கேளுங்கள். பெரியார் பேசி முடிந்தவுடன் மண்டபத்திற்கு வெளியே உங்கள் மத்தியிலே பெரியார் அவர்கள் பதினைந்து நிமிடம் வந்து நின்று காட்சி தருவார் ஆசை தீரப் பார்க்கலாம் அன்போடு பார்க்கலாம், யார் வேண்டுமானாலும் நெருங்கிப் பேசலாம்.
⁠ஆகவே பெருமக்களே! பெருமக்களே! அமைதியாக உட்காருங்கள் மண்டபத்திற்குள் வெளிக்காற்று வர வேண்டும். ஆகவே வாயிலை அடைத்துக் கொண்டு நிற்காமல் வழிவிட்டு ஒதுங்கி உட்காருங்கள். அன்போடு பணிவோடு உங்கள் அனைவரையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என் குரல் உயர உயர வெளியில் அமைதி நிலவியது, அத்தனை பேரும் உட்கார்ந்து விட்டார்கள்.
⁠கழகத் தோழர்கள் வியப்படைந்தார்கள். ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டுக் கூட்டம் நடத்த முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சிய அவர்கள் என் கட்டளைக்குப் பணிந்து இரண்டாயிரம் தமிழ்ப் பெருமக்கள் அமர்ந்துவிட்ட காட்சி கண்டு பெருமிதம் அடைந்தார்கள். கட்டுப்பாடு என்றால் அதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு என்றார்கள்.
⁠வெளியில் அமைதி ஏற்பட்டு விட்டது என்ற உடனே, தலைமையுரை ஆற்றிய தோழரைத் தொடர்ந்து பேசச் சொல்லிவிட்டு பெரியார் அருகில் போய் அமர்ந்தேன்.
⁠பெரியார் என் பக்கம் குனிந்தார்.
⁠"கூட்டத்தைச் சமாளிக்கத் தெரிந்து வைத்திருக்கிறாய். ஆனால் ஒரு தவறு செய்து விட்டாய், ஐந்து ரூபாய் டிக்கெட் வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் சுலபமாகக் கிடைத்திருக்கும்.கோட்டை விட்டு விட்டாய்" என்றார்.
⁠அதுதான் பெரியாருக்காக, நாங்கள் ஏற்பாடு செய்த முதல் கூட்டம். பெரியார் தன்மானக் கொள்கைகளை விளக்கித் தனக்கே உரிய பாணியில் மிக அருமையாகச் சொற்பொழிவாற்றினார். கட்சியரசியலையே தொடாமல் அன்று அவர் பேசியது தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தது. கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு. சாதி எதிர்ப்பு, போன்ற தன்மானக் கருத்துக்களையே இரண்டு மணிநேரம் பேசினார்.
⁠கூட்டம் முடிந்த பிறகு பெரியாரை ஒரு ஜீப்பில் நிற்க வைத்து வெளியில் இருந்த கூட்டத்தின் மத்தியில் பேச வைத்தோம். ⁠பர்மா வாழ் தமிழ் மக்கள் கட்டுப்பாடாகவும், ஒற்றுமையாகவும் தோழமை உணர்வோடும் வாழ வேண்டும். பர்மிய மக்களோடு சரிநிகர் சமானமாகப் பழக வேண்டும. பர்மிய நாட்டின் நலத்திற்கு ஊறு தராத வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பதினைந்து நொடிகள் பேசி அத்தனை பேரும் பெரியார் வாழ்க! என்று முழங்கி வாழ்த்த அங்கிருந்து புறப்பட்டார்.
⁠பெரியாரை மவுந்தாலே வீதியில் கொண்டு போய்ச் சேர்த்த பின் சிறிது நேரத்தில் நான் வீட்டுக்குப் புறப்பட்டேன்.
⁠யாழ்ப்பாணத் தமிழரான துரைப்பிள்ளை என்ற பெரியவரிடம் நான் வேலை பார்த்தேன். கப்பல்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிறுவனம் நடத்தி வந்தார் அவர். நான் அங்கு கணக்கர் வேலை பார்த்தேன்.
⁠கணக்கர் என்றால் மேசையில் உட்கார்ந்து கணக்கெழுதுவது அல்ல என் வேலை முழு நேர உழைப்பு. காலை 6 மணிக்கு மார்க்கெட்டுக்குச் செல்ல வேண்டும். கப்பலுக்கு வேண்டிய காய்கறிகள், மீன், இறைச்சி வகைகள், போன்றவற்றை 7 மணிக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். சில நாட்களில் ஒரு கப்பலில் மட்டுமே வேலையிருக்கும், சில நாட்களில் 5 அல்லது ஆறு கப்பல்களுக்குச் செல்ல வேண்டும். சில கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கும். சில கப்பல்கள் துறைமுகத்தில் இடம் கேட்டுக் காத்துக் கொண்டு ஆற்றின் நடுவில் நிற்கும், சில சமயம் ஆற்றில் நிற்க இடம் கிடைக்காமல் கடல் நுழைவாயிலிலேயே நிற்பதும் உண்டு. எங்கு கப்பல் நிற்கிறதோ அங்கு உணவுப் பொருள் போய்ச் சேர வேண்டும். அதுவும் 7 மணிக்குள் போய்ச் சேர வேண்டும். அத்தனையும் பார்க்க வேண்டியது என் பொறுப்பு.
⁠கப்பல்களுக்குப் போய்த் திரும்ப பத்துமணியாகி விடும். பிறகு, கப்பல் தலைவர்கள் கேட்ட பொருள்களில் சுங்க அலுவலக அனுமதி பெற்று வழங்க வேண்டிய பொருள்கள் இருக்கும். அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் சுங்கத்துறை அனுமதியுடன் தான் கப்பலுக்கு வழங்க வேண்டும். அவற்றைப் பங்கீட்டு முறையில் தான் வழங்குவார்கள்.
⁠கப்பலில் வேலை செய்யும் ஆட்கள், பயணிகள் இவர்களின் எண்ணிக்கைப் பட்டியலும், கப்பல் துறைமுகத்தில் நிற்க எண்ணியிருக்கும் நாட்கள் பற்றிய சான்றிதழும் கொடுத்து அப்பொருள்களைப் பெற வேண்டும்.
⁠அதற்குரிய ஆணையுடன் தான் கப்பலில் பொருள்களை ஏற்ற முடியும். 10.30 மணி முதல் 2 மணி வரை அந்த வேலைகளைக் கவனிக்க வேண்டும். 5 மணியளவில் வேலைகளை முடித்துக் கொண்டு, அதற்கு மேல் பெரியார் கூட்ட நிகழ்ச்சிகளில், நானும் கலந்து கொள்வேன், மற்ற தோழர்கள் ஒத்துழைப்பு பெரிதும் இருந்ததால் நான்கு ஐந்து மணி நேரம் மட்டும் நான் பெரியாருடன் இருப்பது போதுமானதாக இருந்தது.
⁠பெரியார் கூட்டங்களில் நான் சிறப்புப் பங்கெடுத்துச் செயல்படுவது பற்றி என் முதலாளி யறிந்தார்.
⁠என் முதலாளி துரைப்பிள்ளை மிகுந்த பக்தியுடையவர். சாதி சமய வேறுபாடில்லாமல் எல்லாத் தெய்வங்களையும் வணங்குபவர். பிள்ளையார் கோயிலுக்கும் போவார். அனுமார் கோவிலுக்கும் போவார். சர்ச்சுக்கும் போவார், மசூதிக்கும் செல்வார், வீட்டில் அவர் பூசையறையில் நூறு படங்கள் இருக்கும். அத்தனையும் துடைத்துப் பொட்டு வைத்துப் பூவைத்துப் பூசைசெய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் அலுவலக வாயிலில் இரண்டு நிமிடம் நின்று பிரார்த்தனை செய்து விட்டுத்தான் படி ஏறுவார்.
⁠அப்படிப்பட்ட அவர் என்னை அழைத்தார், "பெரியார் கூட்டங்களை நீதான் நடத்துகிறாயாமே?" என்று கேட்டார்.
⁠"ஆமாம்!"என்றேன்.
⁠என்னைக் கண்டிக்கப் போகிறாரோ, போகக் கூடாது என்று கட்டளையிடப் போகிறாரோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது.
⁠"உன்னை நான் தடுக்கப் போவதில்லை. உன் சுதந்திரத்தில் நான் தலையிடப் போவதில்லை, ஆனால், என் வேலைக்கு ஊறு நேராமல் பார்த்துக் கொள்" என்றார். அவர் பெருந்தன்மையை எண்ணி மன மகிழ்ந்தேன்.
⁠அவர் அனுமதியோடு மாலை 5 மணி முதல் பெரியார் உடன் செல்லும் வேலையில் ஈடுபட்டேன்.
⁠ஒருநாள் மாலை 5 மணிக்குப் பெரியாரைச் சந்திக்கப் போனேன்.
⁠இரங்கூன் நகரில் பெரிய வணிகர்களான 4 முஸ்லிம் பெரியோர்கள் அங்கே காத்துக் கொண்டிருந்தார்கள்.
⁠நான் சென்ற உடனே, அவர்கள் என்னை அணுகி "நாளை நபிகள் நாயகம் பிறந்தநாள், பெரியார் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு அனுமதி வாங்க வந்திருக்கிறோம்" என்றார்கள். ⁠"பெரியாரிடமே கேட்கலாமே!?" என்றேன்.
⁠"கேட்டு விட்டோம். உங்கள் ஒப்புதல் வேண்டும் என்கிறார் பெரியார். அதற்காகத்தான் மூன்று மணியிலிருந்து காத்திருக்கிறோம்."
⁠"நான் நேராகப் பெரியாரிடம் சென்றேன். அய்யா நீங்கள் நபிகள் நாயக விழாவில் எத்தனையோ முறை கலந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது மறுப்பதற்குக் காரணம் என்ன?" என்றேன்.
⁠"மறுக்கவில்லை. இரங்கூனில் இருக்கும் வரை. எந்த நிகழ்ச்சிக்கும் உன்னுடைய ஒப்புதல் இல்லாமல் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. இங்குள்ளவர்கள் எனக்குப் புதியவர்கள். உனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கும். ஆகவே, எதையும் உன் மூலமாகவே செய்வது பாதுகாப்பாய் இருக்கும் அல்லவா?" என்றார் பெரியார்.
⁠"எனக்கும் அவர்கள் தெரிந்தவர்கள் இல்லையே!" என்றேன் நான்.
⁠"நீ சொன்னால் நான் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்பேன், வேண்டாம் என்றால் விட்டுவிடுவோம்" என்றார் பெரியார்.
⁠"பெரிய மனிதர்கள் வந்திருக்கிறார்கள், நமக்கு ஒருநாள் கூட்டச்செலவு மிச்சம். நபிகள் விழாவிலும் பெரியார் தன்மானக் கருத்துக்களைத் தான் பேசப் போகிறார்" என்று முடிவெடுத்து, "ஐயா ஒப்புக் கொள்ளுங்கள்" என்றேன்.
⁠முஸ்லிம் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள். மறுநாள், மிகப் பெரிய கூட்டம் ஒன்று நடந்தது. பெரியார் வழக்கம்போல் நபிகள் நாயகத்தின் புதிய கருத்துக்களைப் பாராட்டி இந்து மதத்தில் உள்ள மூடப் பழக்கவழக்கங்களைச் சுட்டிக்காட்டிப் பேசி முடித்தார். கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
⁠"நான் கடவுள் நம்பிக்கை யற்றவன். நீங்கள் கடவுள் நம்பிக்கை யுடையவர்களாய் இருப்பதுபற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீங்கள் வணங்கும் கடவுள் யோக்கியமான கடவுளாய் இருக்கட்டும்.
⁠"யோக்கியமான கடவுளை வணங்குபவனிடம் தான் யோக்கியனாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற முடியும்"
⁠இந்த அளவில் தான் பெரியார் கடவுள் கொள்கைக்கு ஆதரவு கொடுத்தார். ஒரு கடவுள் கொள்கையுடைய முஸ்லிம்கள் கொண்டாடும் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் போதெல்லாம் இந்த அடிப்படையில் தான் அவருடைய பேச்சுக்கள் அமையும்.
⁠முஸ்லிம்களிடையே உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களையும், காலத்துக் கொவ்வாத பழக்கங்களையும் அவர் கண்டிக்கவும் பின் வாங்கியதில்லை.
⁠பெரியாரின் சொற்பொழிவு முழுவதும் சொல்லுக்குச் சொல் அப்படியே மறுநாள் 'தொண்டன்' நாளிதழில் வெளி வந்தது.
⁠"தொண்டன்" பர்மா வாழ் முஸ்லிம்களின் இலட்சிய இதழாக விளங்கியது. அதன் ஆசிரியர் இபுராகிம் புது நோக்குடையவர். பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரங்களுக் கெல்லாம் முழு ஆதரவு அளித்து வந்தவர். கழகச் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு ஆதரவு அளித்து வந்தார். ⁠"ரசிக ரஞ்சனி" என்று ஒரு தமிழ் நாளிதழ் இரங்கூனிலிருந்து வெளி வந்து கொண்டிருந்தது. தமிழ் மக்களின் பொதுவான பத்திரிகை என்று சொல்ல முடியாதபடி அது மதவெறி இதழாக வெளிவந்தது. அந்த இதழில், பெரியார் கலந்து கொண்ட மற்ற நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு சிறு குறிப்புக் கூட வெளிவரவில்லை.
⁠உலக புத்தசமய மாநாட்டில் பெரியார் கலந்து கொண்ட நிகழ்ச்சியைக் கூட அது வெளியிடவில்லை. ஆனால் நபிகள் நாயகம் பிறந்த நாள் கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சை அந்த இதழ், மதவெறி நோக்கோடு வெளியிட்டிருந்தது. மதவெறியைக் கிளப்பி இந்து முஸ்லிம் பகைமையை வளர்க்கும் நோக்குடன் அது செய்தியைத் திரித்து வெளியிட்டது.
⁠தலைப்பிலேயே கொட்டைஎழுத்துக்களில் முஸ்லிம்கள் கூட்டத்தில் இந்து மதத்தைத் தாக்கிப் பிரசங்கம் என்று போட்டிருந்தது.
⁠தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் ராமசாமி நாயக்கர் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் இந்துமதத்தைத் தாக்கிப் பேசினார். இதனால் இந்து மதத்தவர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
⁠இப்படியிருந்தது அதன் செய்திப் போக்கு.
⁠சாதி, மத வெறிகளைக் குழி தோண்டிப் புதைக்கத் தன்வாழ்வையே ஈடுபடுத்திக் கொண்ட அண்ணல் பெரியார் மதக் கலவரத்தை மூட்ட வந்திருக்கிறார் என்ற தோரணையில் அது வெளியிட்டிருந்தது.
⁠அந்தச் செய்தியின் பலனாகச் சில எதிர் விளைவுகள் ஏற்பட்டன. ⁠மறுநாள் இரங்கூன் ஆற்றின் எதிர்கரையில் உள்ள லான்மடோ என்ற சிற்றுாரில் உள்ள கழகத்தோழர்கள் பெரிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரியார் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.
⁠வழக்கம்போல் மாலை 5 மணிக்கு பெரியாரைப் பார்க்கச் சென்றேன், பெரியாருடன் ஆற்றின் அக்கரைக்குப் போக விசைப்படகு (Motor Launch) ஏற்பாடு செய்து வைத்திருந்தோம்.
⁠நான் பெரியாரைப் பார்த்தவுடனே, அவர் "இனிமேல் கூட்டம் எதுவும் நடத்த வேண்டாம்" என்றார். அன்றைய கூட்டத்திற்கும் வர மறுத்துவிட்டார். அக்கரைத் தோழர்கள் வருத்தத்துடன் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள்.
⁠"ஏன் வேண்டாம் என்கிறீர்கள்" என்று கேட்டேன்.
⁠"காலையில் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். புத்தமத மாநாட்டிற்காக உங்களை இந்த அரசு பெரிதும் மதித்து வரவேற்றிருக்கிறது. இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் வகையில் தங்கள் நடவடிக்கைகள் இருப்பதாகவே அரசு கருதுகிறது. ஆனால் விருந்தாளியாக வந்திருக்கும் தங்களை வெளிப்படையாகக் கண்டிக்க அரசு விரும்பவில்லை. ஆகவே என்னைத் தங்களிடம் அனுப்பி, தாங்கள் மேற்கொண்டு எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாதவாறு வேண்டிக் கொள்ளும்படி அரசு பணித்திருக்கிறது" என்று அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கூறினாராம்.
⁠பெரியார் இந்த நிகழ்ச்சியைக் கூறினார். ⁠"அய்யா,இன்று கழகத்தோழர்கள் பெருமுயற்சி செய்து இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். நீங்கள் வராவிட்டால் அவர்கள் ஆர்வமே போய் விடும். ஆகவே, ஏற்பாடாகிவிட்ட இந்தக் கூட்டத்துக்கு மட்டும் வாருங்கள், நாளைமுதல் வேறு கூட்டங்கள் ஏற்பாடு செய்யவில்லை" என்று நான் கூறினேன்.
⁠"இன்றைய கூட்டத்திலேயே கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த இன்ஸ்பெக்டர் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார். இன்று நான் கலந்து கொண்டு பேசி நாளைச் சென்னைக்குச் சென்றுவிடுவேன். அதன் எதிர் விளைவுகள் உங்களை யல்லவா பாதிக்கும். என்னால் இங்கு பிழைக்க வந்த நீங்கள் அவதிப்படுவதை நான் விரும்பவில்லை" என்று கண்டிப்பாக மறுத்து விட்டார்.
⁠பெரியார் கூட்டத்திற்கு வருவதில்லை என்று உறுதியாக இருந்தார்.
⁠வெளியே கழகத் தோழர்கள் - குறிப்பாக அக்கரைத் தோழர்கள் குமுறிக் கொண்டிருந்தார்கள்.
⁠நான் வெளியில் வந்தேன். தோழர்களைச் சந்தித்தேன். என்ன செய்யலாம் என்று சிந்தித்தோம்.
⁠அரசு தடை விதித்தால் ஓர் எச்சரிக்கைக் குறிப்பாவது அனுப்பியிருக்கும். இது ரசிகரஞ்சனிக்காரன் செய்த சூழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் வந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மிகப் பக்குவமாகப் பெரியாரிடம் பேசியிருக்கிறார். பெரியாரும் நம்மீது உள்ள அக்கறையால் மறுக்கிறார். பெரியாரை இது பொய் யென்று நம்ப வைப்பதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தோம். ⁠துறைமுகப் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஊராமா. அவரை எங்களுக்குத் தெரியும், அவரைப் போய்ப் பார்க்கிறோம் என்றார் ஒரு தோழர்.
⁠உடனே ஒரு வாடகை ஜீப்பில், நான்கு தோழர்கள் துறைமுகக் காவல் நிலையம் நோக்கிப் பறந்தார்கள்.
⁠கூட்டம் ஏற்பாடு செய்திருப்பதையும் பெரியார் வர மறுப்பதையும் விளக்கமாகக் கூறினார்கள் அவரே நேரில் வந்து பெரியாரிடம் பேச வேண்டும் என்று கூப்பிட்டார்கள்.
⁠ஊராமா, தமிழ் வணிகர் ஒருவரின் பர்மிய மனைவிக்குப் பிறந்தவர். பர்மியக் குடிமகனாக.இருந்தாலும் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர், எல்லாவற்றையும் விவரமாகக் கேட்டுக் கொண்டார். உடனே தோழர்களோடு பெரியார் தங்கியிருக்கும் இடத்திற்குப் புறப்பட்டு வந்தார்.
⁠தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பெரியாருக்கு பர்மிய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. இரகசியமாகக்கூட எதுவும் செய்யவில்லை என்று எடுத்துக் கூறினார். இந்து மதவெறி கொண்ட சிலர் அயம்பது ரூபாய் இலஞ்சங்கொடுத்து ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டரை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றே தாம் நினைப்பதாகக் கூறினார்.
⁠பெரியார் மேலும் பல கூட்டங்களில் பேசலாம் என்றும் அன்றைய கூட்டத்திற்கு தானே தலைமை வகித்து நடத்திக் கொடுப்பதாகவும், தான் எவ்விதக் கலகமும் ஏற்படாமல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு பெரியார் புறப்பட்டு வந்தார். ⁠அக்கரையில் அன்றைய கூட்டம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஊராமா தலைமையில் நடந்தது. நானும் சில தோழர்களும் பேசியபின் பெரியார் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
⁠இன்றைய மதவெறியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துப் பெரியாரைப் பேச அழைத்து வந்தோம். அவரோ பெருவாரியான மக்களை அழுத்தி வைத்திருக்கும் வருணா சிரம தருமத்தை வகுத்த மனுநீதியின் சூழ்ச்சிகளையும் வேத புராணங்களின் சூழ்ச்சிகளையும் விளக்கிப் பேசினார்.
⁠தொடர்ந்து கூட்டங்கள் நடந்தன. 'ரசிக ரஞ்சனி' கும்பல், தங்கள் சூழ்ச்சி பலிக்காததை எண்ணிப் புழுங்கியது.
⁠அந்தப் புழுக்கத்தின் காரணமாகத் தொடர்ந்து பெரியார் கூட்ட நிகழ்ச்சிகளை மதக் கலவரத்தைத் துாண்டும் பேச்சுக்களாக வருணித்துச் செய்திகளைத் திரித்து வெளியிட்டு வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக