சனி, 14 மார்ச், 2020

திண்டுக்கல் விழா:.. கொரோனாவை பரப்ப ஒரு விழா எடுக்கும் எடப்பாடி பன்னீர் கேங்கின் அறியாமை

திண்டுக்கல் விழா: கொரானோ பரவ தமிழக அரசே வாய்ப்பு தரலாமா?மின்னம்பலம் :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசே கொரோனா பரவலுக்கு பிளாட்ஃபார்ம் போட்டுக் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய
அரசு அனுமதியளித்திருப்பதை ஒட்டி தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நாளை (மார்ச் 14) திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க இருக்கிறது. இந்த விழா, திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சி கிராமத்தில் நடக்கிறது.

கொரானோ வைரஸ் தாக்கம் கேரளாவில் கடுமையாக இருக்கும் நிலையில், கேரள எல்லையில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, இந்த விழா பாதுகாப்புக்காக, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் வருகிறார்கள்.
“திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்துதான் பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் வரவழைக்கப்படுகின்றனர். இதில் தேனி, குமரி மாவட்டங்கள் கேரளா எல்லையில் உள்ளன. கேரள மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் இருந்தும் பாதுகாப்புக்காக போலீஸார் வரவழைக்கப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க கேரளாவில் பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. கூடுமான வரை 100 பேருக்கு மேல் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னையில் கூட இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யும்படி மாநகராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில், சென்னை காமராஜர் அரங்கம் மற்றும் மியூசிக் அகாடமியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்புக்கு போலீஸாரைக் கொண்டுவந்து இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டம் கூட்டி நிகழ்ச்சி நடத்தலாமா? கொரானோ வைரஸ் பரவும் நிலையில் கேரளா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்கள் கடும் எச்சரிக்கைகள் விட்டிருக்கும்போது, தமிழக அரசே இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டலாமா? அதுவும் மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் கூட்டலாமா? இதை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நடத்தினால் என்ன? இல்லையென்றால் இன்னும் சில நாட்கள் சென்று நடத்தலாமே?” என்று போலீஸ் தரப்பில் இருந்தே மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரானோ எச்சரிக்கைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா கூட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றுதான் மக்களும் அதிகாரிகளும் விரும்புகிறார்கள்.
வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக