சனி, 14 மார்ச், 2020

பாம்பன் விவேகானந்தர் நினைவிடம்- கடல் அரிப்பினால் மூழ்கும் அபாயத்தில்


vivekanada-memorial-at-the-verge-of-sea-corrosionhindutamil.in :ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவிடம்> கடல் அரிப்பால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் தனது சொற்பொழிவு மூலம் இந்து மதத்தின் புகழை நிலைநிறுத்திவிட்டு சுவாமி விவேகானந்தர் இலங்கை வழியாக 26.1.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். அவருக்கு அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இச்சம்பவம் நடந்து நூற்றாண்டு கழித்து விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய குந்துகால் பகுதியில் 2009-ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய நாளை நினைவுகூரும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ராமேசுவரம் வரும் பக்தர்கள் விவேகானந்தர் நினைவிடத்துக்கு வந்து செல்கின்றனர். அங்குள்ள கண்காட்சிக் கூடத்தில் விவேகானந்தர் பாம்பன் கடற்கரையில் வந்திறங்கியபோது, அவரை சேதுபதி மன்னர் வரவேற்ற காட்சி, அங்கிருந்து ரதத்தில் விவேகானந்தர் பயணித்த காட்சி ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இங்கு விவேகானந்தர் வாசக சாலையும் அமைந்துள்ளது.
விவேகானந்தர் இல்லத்தின் மாடியில் இருக்கும் தொலை நோக்கி மூலம் அருகில் உள்ள குருசடை தீவு, கோரி தீவுகளையும் பார்க்க முடியும். மேலும் விவேகானந்தர் இல்லம் அருகே கடல்சார் அருங் காட்சியகமும் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நீர் விளையாட்டுக்கள் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் பாம்பன் குந்துகால் கடற்பகுதி தற்போது கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களில் இருந்த பனை, தென்னை மரங்கள் வேறோடு கடல் நீரில் சாய்ந்துள்ளன. இதே நிலை நீடித்தால், சில ஆண்டுகளில் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து நமது செய்தியாளரிடம் திருச்சியை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஆனந்த் கூறியதாவது,
குந்துகால் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. ராமேசுவரத்திலிருந்து இருந்து பேருந்து வசதியும் குறைவாக உள்ளது.
விவேகானந்தர் நினைவிடம் கடல் அரிப்பினால் தற்போது பாதிக்கத் துவங்கி உள்ளது. நினைவிடம் அருகே இருந்து மரங்கள் எல்லாம் கடல் அரிப்பினால் கடலுக்குள் சென்று விட்டன.
இந்நிலையே தொடர்ந்தால் விவேகானந்தர் நினைவிடமும் ஒரு நாள் கடலுக்குள் சென்று விடும். கடல் அரிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எஸ். முஹம்மது ராஃஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக