சனி, 14 மார்ச், 2020

பாலியல் பலாத்காரம் .+ பெண்ணின் தந்தையை கொன்ற பாஜக எம்.எல்.ஏக்கு செங்காருக்கு 10 ஆண்டு சிறை


தினத்தந்தி : கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் அடைந்த வழக்கில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ,
 கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், குல்தீப்சிங் செங்கார். இவர், கடந்த 2017-ம் ஆண்டு, உன்னாவ் நகரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில், அவருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, கற்பழிக்கப்பட்ட அந்த பெண்ணின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு இறந்த வழக்கிலும் குல்தீப்சிங் செங்கார் குற்றம் சாட்டப்பட்டார். அந்த ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி, பெண்ணின் தந்தை தனது கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சசிபிரதாப் சிங் என்பவரிடம் ‘லிப்ட்’ கேட்டார்.

அதற்கு அவர் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சசிபிரதாப் சிங், தனது ஆட்களை அழைத்தார். அதையடுத்து, குல்தீப்சிங் செங்காரின் தம்பி அதுல்சிங் செங்கார், ஆதரவாளர்களுடன் வந்து, பெண்ணின் தந்தையை தாக்கினார். பிறகு அவரை போலீஸ் நிலையத்துக்கு கூட்டிச்சென்றார். அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலிலேயே அவர் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடனும், டாக்டருடனும் தொலைபேசியில் பேசி உத்தரவுகளை பிறப்பித்த செங்கார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருடைய தம்பி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை, கடந்த ஆண்டு டெல்லிக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில், செங்கார், அவருடைய தம்பி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி கோர்ட்டு கடந்த 4-ந்தேதி தீர்ப்பு அளித்தது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தண்டனை விவரங்களை டெல்லி மாவட்ட நீதிபதி தர்மே‌‌ஷ் சர்மா நேற்று வெளியிட்டார். குல்தீப்சிங் செங்காருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். அவருடைய தம்பி அதுல்சிங் செங்கார் உள்பட 6 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், செங்காரும், அவருடைய தம்பியும் மரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரை கொலை செய்ததற்காக, குற்றவாளிகள் மீது கருணை காட்ட முடியாது என்று நீதிபதி தர்மே‌‌ஷ் சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

கற்பழிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண், கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய வழக்கும் செங்கார் மீது நிலுவையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக