சனி, 28 மார்ச், 2020

சஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய நீதித்துறை வெட்கித் தலைகுனிந்து ...

‘அந்த வீட்டை நான் பார்வையிட்ட போது அதன்
சிதிலங்களிடையே, என் கண்ணில் பட்டது எரிந்து சாம்பலாகியிருந்த நிலையிலிருந்த
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தொகுதி. கொஞ்சம் பிழைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அட்டையைப் புரட்டினேன். உள்ளே ‘இஸான் ஜாஃப்ரி என்ற பெயர் மிக அழகிய கையெழுத்தில் எழுதப்படிருந்த விதத்திலேயே அந்த நபர் மீது
விருப்பங்கொண்டேன். கல்லூரிப் பருவத்தில் என்சைக்ளோபீடியா முழுவதையும் வாங்குவது என்பது எனது பெரிய கனவாக இருந்தது’
சில வருடங்களுக்கு முன் தெகல்காவில் இதைப் படித்தவுடன் இயல்பாகவே எழுதிய சஞ்சீவ் பட் மீது எனக்கு அன்பு பெருகியது. எனது கல்லூரிக் நாட்களில் மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகில் பல்கலைக்கழக படிப்பகமிருந்தது. எதோச்சையாக படிப்பகம் சென்ற என்னை அழகாக அடுக்கப்பட்டிருந்த என்சைக்ளோபீடியாதான் அதிகம் கவர்ந்தது. அதுவரை ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தக விளம்பரத்தில்தான் என்சைக்ளோபீடியாவைப் பார்த்தது. பின்னர், எப்போது போனாலும் கலைக்களஞ்சியத்தை மட்டுமே புரட்டிக் கொண்டிருப்பேன்..

கொரானா பிரச்னை ஆரம்பித்ததும், என் மனதில் தோன்றிய முதல் எண்ண்ம் ‘சஞ்சீவ் பட்’டுக்கு இப்போதாவது பெயில் கிடைத்து விடும் என்பதுதான். ஆனால் ஆசை இதுவரை நிராசையாகத்தான் இருக்கிறது. கடந்த பத்து மாதமாக தொடர்ந்து சிறையிலிருக்கிறார்.
-oOo-
சஞ்சீவ் பட்’டுக்கு என் வயதுதான். மும்பை ஐஐடியில் பட்டம் பெற்றிருந்தாலும், 1988ல் இந்திய காவல்பணியில் சேர்கிறார். 1990ல் அத்வானி ரத யாத்திரைக் கலவரத்தில் ஈடுபட்ட சங்பரிவாரை சேர்ந்த 130 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். எட்டு நாட்களில் பிணை கிடைக்கிறது. ஒன்பது நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறுநீரக கோளாறில் இறக்கிறார்.
இறந்தவரின் அண்ணன் கொடுத்த புகாரில் சஞ்சீவ் பட் மற்றும் சில காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டாலும், 2011 வரை எந்த நடவடிக்கையும் இல்லை. புகாரில் ஆதாரம் இல்லை என்று முடித்து கூட வைக்கப்படுகிறது.
‘கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற குஜராத் கலவரங்களுக்கு மோடியின் ஆசி உண்டு என்று உச்ச நீதிமன்றத்திலும் நானாவதி கமிஷனிலும் சஞ்சீவ் பட் தனது எதிர்காலத்தை பணயம் வைத்து துணிச்சலுடன் கூறிய பிறகு பழைய வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டு இன்று கொலைக் குற்றத்திற்காக சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இறந்தவர் அடித்து துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும், அவரை உட்கார்ந்து எழுதல் அல்லது ஊர்ந்து செல்ல வைத்தல் (Sit up and crawling) போன்ற உடல் ரீதியிலான அழுத்தத்தில் அவருக்கு கிட்னி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர் அளித்த சாட்சியம் சஞ்சீவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. மற்ற காவலர்களுக்கு இரு வருட தண்டனை மட்டுமே.
மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது. இம்மாதிரியான வழக்குகளில் பெயில் எளிதில் வழங்கப்படும். ஆனால் சஞ்சீவ் பட்’டுக்கு கடந்த ஒரு வருடமாக பெயில் வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் பிரயோசனமில்லை.
மற்ற பல ஐபிஎஸ் அதிகாரிகளைப் போல தனது போலீஸ் வேலையை மட்டும் சஞ்சீவ் பார்த்துக் கொண்டிருந்திருப்பராயின் இன்று டிஜிபியாக இருந்திருப்பார். அவருக்கு வேலை போன பின்னரும் தனக்கு நியாயம் என்று தோன்றியதிலிருந்து அதிகம் இல்லை கொஞ்சம் விலகியிருந்திருந்தால் போதும், ஆயுள் தண்டனையிலிருந்தாவது தப்பியிருப்பார். இறுதி வரை தனது புத்திசாலித்தனமான கிண்டல்களால் ட்விட்டரில் மோடியை வறுத்துக் கொண்டிருந்தார்.
கொரோனாவாவது சஞ்சீவை சிறையிலிருந்து காப்பாற்றட்டும்.
-oOo-
தந்தை பெரியார் திருச்சியிலும் சென்னையிலும் இரண்டு பிரிட்டானிகா உலகக் கலைக் களஞ்சியத்தை வாங்கி வைத்திருந்தார்.
க.இராசாராம் ‘ஒரு சாமானியனின் நினைவுகள்’ புத்தகத்தில்.
யாருக்காவது என்றாவது ஒரு நாள் இந்திய நீதித்துறை வெட்கித் தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டால், அது சஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் கண்டிப்பாக இருக்கும்.
Post by Prabhu Rajadurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக