சனி, 28 மார்ச், 2020

சுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்லாம் தேவைப்படுகிறது

Dhinakaran Chelliah : இந்தக் கதைக்கும் கொரோனா பீதியில் காணமற் போன சற்குரு,ஶ்ரீஶ்ரீ,நித்தி,பாபா,தேவ்,ராம்
யாருக்கும் தொடர்பில்லை!
ராமலிங்கம் எனது நெருங்கிய நண்பன்.எங்கள் இருவருக்கும் நிறைய விடயங்களில் உடன்பாடு உண்டு ஆன்மீகம் ஒன்றைத் தவிர.ஆன்மீகத் தேடலில் அவனது சமீபத்திய கண்டுபிடிப்பு "பூஜிய ஸ்ரீ கல்யாண் சுவாமிகள்".
பக்த கோடிகள் மத்தியில் சுவாமிஜி மிகவும் பிரபல்யமானவர்.அவரது ஆன்மீகச் சொற்பொழிவு,வேத பாராயணம்,
இதிகாச விளக்கவுரை,மந்திர உச்சாடனம்,பல மொழிகளில் அவர் எழுதிய ஆன்ம விசார நூல்கள் இவையனைத்தும் உலகமெங்கும் அவருக்கு
சிஷ்யர்களையும், பக்தர்களையும் தேடித் தந்தது.
சுவாமிஜி நடாத்திய "மந்திரம்" பயிற்சிப்
பட்டறைக்குச் சென்றதிலிருந்து ராமலிங்கம்
வெகு உற்சாகமாய் இருந்தான்.
எப்போது பார்த்தாலும் சுவாமிஜி பற்றித்தான் பேச்சு.அவர் செய்த அற்புதங்கள் பற்றி பெரிய பட்டியல் கொடுத்தான்.கொடிய நோய் உள்ளவர்கள்கூட நொடியில் குணமடைந்ததை
நேரில் பார்த்ததாய் கூறினான்.
சுவாமிஜியைச் சந்திக்கும் நாத்திகர்களும் கடவுள் பக்தியுள்ளவர்காக மாறிவிடுவார்களாம்.

சுவாமிஜிக்கு, எல்லா நாடுகளிலும் பக்தர்களும் சீடர்களும் இருந்தார்கள், அவர் விஜயம் செய்யாத நாடே இல்லை.குடும்பம், வீடு வாசல் சொத்துப்
பத்துக்களை விட்டுவிட்டு ஆன்மீக தரிசனத்திற்காக சுவாமிஜியுடன் ஐக்கியமானவர்கள் பலபேர்.பல ஊர்களில் சுவாமிஜியின் பெயரில் ஆசிரமங்கள், பள்ளிகள்,கல்லூரிகள்,இலவச மருத்துவமனைகள்,அநாதை இல்லங்கள்
ஆரம்பமாயின.
அவர் மந்திரம் சொல்லிக் கையை நீட்டினால்
குங்குமமும் திருநீறும் கொட்டுகிறது, அதுமட்டுமா, அவரைப்போல் வாயிலிருந்து
ஸ்வர்ணலிங்கம் எடுப்பது யாரால் முடியும்? இப்படிப் பலரும் பல கதைகள் அவரைப் பற்றிச் சொன்னார்கள்.
ராமலிங்கம் சுவாமிஜியின் பரம பக்தனாகி விட்டான். பிரதான சிஷ்யர்களுக்கு கிடைக்கும் சுவாமிஜியின்
உருவம் பொறித்த சங்கிலி, முதல் சந்திப்பிலேயே ராமலிங்கத்திற்கு கிடைத்துவிட்டது.
ஒரு நாள், சுவாமிஜி எங்கள் ஊரில்
எழுந்தருளியிருப்பதை ராமலிங்கம் ஓடி வந்து
என்னிடம் கூறினான். சுவாமிஜியை வந்து தரிசிக்கும்படி, அவனது நச்சரிப்பும் தொடங்கியது.
நண்பனின் தொல்லை தாங்காமல் சுவாமிஜியைச் சந்திக்க ஒப்புக்கொண்டேன்.
என்னை சுவாமிஜி இருந்த இடத்திற்கு ராமலிங்கம் அழைத்துக் கொண்டு போனான்.அவரைத் தரிசிக்க பெரிய கூட்டம் காத்துக்கொண்டிருந்தது.வரிசையில் பல பேர்
சுவாமிஜிக்கு பாத பூஜை செய்வதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த ஒருவரிடம் ராமலிங்கம் காதருகே
ஏதோ சொல்ல,அந்த நபர் என்னை சுவாமிகளிடம் அழைத்துச் சென்றார்.
சுவாமிஜி சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு பக்தர் அவருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தார்.பாத பூஜை செய்யக் கட்டணம் ரூபாய் பத்தாயிரம் என அருகிலிருந்த
நபர் கிசுகிசுத்தார்.எனது முக மாற்றத்தைக் கவனித்த ராமலிங்கம்,
ஒ! கட்டணமா? சுவாமிஜி பெயரில் பெரிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட உள்ளது, அதற்காகத்தான்
வசூலிக்கிறார்கள் என்றான்.
பாத பூஜை முடிந்தது, சுவாமிஜி தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அன்று பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் பற்றிப் பேசினார்.பிழையில்லாமல் சமஸ்கிருத சுலோகங்களும் பெரும் தத்துவ சிந்தனைகளும் அவர் வாயிலிருந்து சரளமாக வந்தன. "செயல்களின் பலனைத் துறந்தவனே உண்மையான கர்ம யோகி, அப்படிப்பட்டவன் பரிபூர்ண உள்ளார்ந்த பக்தியில் திளைக்கிறான், இன்ப துன்பங்கள் அற்று, அவற்றை சமமாக பாவிக்கும் மன நிலையை பெறுகிறான். 'ஸ்தித ப்ரக்ஞன்' நிலையில் இருந்து கொண்டு செயல்களை செய்கிறான்" என அழகாக விவரித்தார்.உரையாற்றிகொண்டிருக்கும்போதே அவர் பின்னால் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி திடீரென்று நின்று போனது. அவர் பேச்சும் நின்றது. ஒரு சிஷ்யன் அதைச் சரி செய்ய முயன்று முடியாமற் சிறிது நேரம் திணறினான்.சுவாமிஜிக்கு வியர்த்தது, சில நிமிடங்களில் தவித்துப் போன சுவாமிஜி அவனை எரிச்சலுடன் பார்த்தார். வேறொரு சிஷ்யன் ஓடோடி வந்து மின்விசிறியைச் சரி செய்தான்.ஏதோ நடக்கக் கூடாத விபரீதம் நடந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் கூட்டத்தினர் அந்தக் காட்சியைப் பார்த்தனர்.
ஒரு வழியாக மின் விசிறி சுழல அவர் பேச்சும் தொடர்ந்தது. அந்த சமயத்தில் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர் வந்து சுவாமிஜியைப் புகைப் படம் எடுக்கத் துவங்கினார்.அந்த நிருபர் தன் பணியை முடிக்கும் வரை சுவாமிஜியின் பேச்சு கீதையிலும், கண்கள் நிருபர் மீதும் இருந்தன. பின்பு நான்காவது அத்தியாயத்தில் உள்ள சுலோகத்தை அழகாகச் சொன்னார்.
“பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்"என்றார்.
ராமலிங்கம் தன்னை மறந்து உரையைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
சுவாமிஜியின் உரை முடிந்தவுடன் கூட்டத்திலிருந்து பலரும் ஒவ்வொருவராகச் சென்று சுவாமிஜியின் பெருமைகளைப் பேசினார்கள். அவரை ஆன்மீக சிகரம் என்றார்கள்.
மகா யோகி, பிரம்ம முனி,
மகரிஷி என்றெல்லாம் அழைத்தார்கள். சுவாமிஜி மலர்ந்த முகத்துடன் அதை கேட்டுகொண்டிருந்தார்.தன்னைப் புகழ்ந்து பேசிய சில பக்தர்களை அழைத்து தனது உருவம் பதித்த சங்கிலியைத் தந்து ஆசிர்வதித்தார்.
ராமலிங்கம் எதிர்பாராத விதமாக எழுந்து போய் பேசினான். ஒரே சந்திப்பில் தான் சுவாமிஜியின் சிஷ்யன் ஆகியது எப்படி என்று விவரித்தான். அதோடு அவன் நிறுத்தியிருக்கலாம். என்னைச் சுட்டிக்காட்டி,
"இவன் என் நண்பன், அவனையும் தங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்கும்படி சுவாமிஜியை நமஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.
எனக்கு தர்மசங்கடமாய் இருந்தது.எனது தயக்கத்தைக் 'கூச்சம்' என நினைத்து, சுவாமிஜி பெருந்தன்மையோடு என்னைப் பேச அழைத்தார்.
"மன்னிக்கணும். எனக்கு உங்கள் சிஷ்யன் ஆகவேண்டும் என்ற எண்ணமே இல்லை. எனக்கு முன்பு பேசியவர்கள் போல் என்னால் பேச முடியாது. என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன். அது நல்லாயிருக்காது" என்று வெளிப்படையாக சொன்னவுடன், சுவாமிஜி அருகிலிருந்த பத்திரிக்கை நிருபரைப் பார்த்து புன்னகை செய்த படி "பரவாயில்லை. சொல்" என்றார்.எந்த விமரிசனத்திற்கும் வேதங்களில் இருந்தும் ஆன்மீக இலக்கியங்களில் இருந்தும் பல எடுத்துக்காட்டுகள் சொல்லி அந்த நிருபரைப் பிரமிக்க வைக்க ஒரு சந்தர்ப்பமாக இதை அவர் நினைத்திருக்கலாம்.
அதற்கு மேல் நான் தயங்கவில்லை. "சுவாமிஜி, ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான பணம், சௌகரியங்கள், மற்றவர்களுடைய அங்கீகாரம் எல்லாம் உங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இங்கே நானே கண்கூடாகப் பார்த்தேன். ஒரு யோகி,ஞானி அல்லது மகான்
ஸ்தானத்தில் உங்களை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை தவிர தனிமனித வழிபாடு அறிவை விழிப்பு நிலைக்கு கொண்டு செல்லாது".
நான் இப்படிச் சொல்வேன் என்று யாருமே அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிஜி முகம் கறுத்தது. அவரது சிஷ்யர்களில் ஒருவர் பதில் சொல்ல விரைந்து வந்தார்.
"வேதங்களையும் உபநிஷத்துகளையும்,தேவாரம் திருவாசகத்தையும் கரைத்துக் குடித்த சுவாமிஜியை சாதாரண மனிதன் என்று சொல்வது குருடன் ஓவியனைக் குறை சொல்வது போலத்தான். அவர் அளவுக்கு வேண்டாம், அவருக்குத் தெரிந்த இந்த ஆன்மீக நூல்களில் இருந்து கொஞ்சமாவது உன்னால் சொல்ல முடியுமா தம்பி?" கூட்டத்தில் ஒரு பக்தர் குரல் எழுப்பினார்.
சுவாமிஜியின் முகம் மலர்ந்தது. ஒருசிலர் கை தட்டினார்கள்.
"என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவையனைத்தும் என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் குருவாக நினைக்க முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை. இந்த போதனைகளைத் தாண்டி, பலருக்கும் உதாரணமாய் வாழ்ந்து வருபவர் தான் ஞானி. அந்தப் பெயருக்குப் பொருத்தமாய் பலர் இந்த மண்ணில் இருந்தார்கள், இன்னமும் வாழ்ந்துகொண்டும்
இருக்கிறார்கள் அடையாளம் இல்லாமல்...."
மேலே என்னைப் பேச விடாமல் சுவாமிஜியின் சில பக்தர்கள் கத்த ஆரம்பித்தனர். அந்த இடம் கிட்டத் தட்ட ஒரு சட்டசபை போல மாறியது. நான் அமைதியாக அங்கிருந்து வெளியேறினேன்.ராமலிங்கம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ஓரிருவர் என்னைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.
கோபத்தில் முகம் சிவக்க பூஜிய ஸ்ரீ கல்யாண் சுவாமிகள் சொன்னார். "இது போன்ற நாத்திகம் பேசும் மூடர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இனி இது போன்ற ஆட்களை அழைத்து வந்து யாரும் ஆன்மிகத்தைக் களங்கப் படுத்த வேண்டாம்" என்றார்.
எதுவுமே நடவாதது போல் அவரது சிஷ்யர்கள், பாத பூஜைக்கு தயாராய் வந்திருக்கும்
பக்தர்களை குரல் கொடுத்து அழைக்க ஆரம்பித்தார்கள்.அங்கு மக்களின் கூட்டம் அலைமோதியது.
தூரத்தில் ஒரு கவிஞனின் குரல் கேட்டது:
உண்மையான நாத்திகன் என்பவன்
ஆத்திகனே!
அவனே தன்னையும், தன்னைப் போல்
பிறரையும் உணர்ந்தவன்!
ஆத்திகன் இருப்பதை தேடுகிறான்
நாத்திகன் இல்லாததை தேடுகிறான் .
தேடுபவன் மனிதன்!
தேடாதவன் புத்தன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக