திங்கள், 30 மார்ச், 2020

‘வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்’: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு - எல்லை தாண்டி சென்றால் 14 நாள் தனிமைப்படுத்தாவும்

தினத்தந்தி : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவ்வாறு எல்லை தாண்டி செல்பவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் கட்டளையிடப்பட்டு இருக்கிறது. புதுடெல்லி,பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே உள்ள சமுதாய நல கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.


இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இப்படி ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் குகா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நேற்று முன்தினம் மாலையும், நேற்று காலையும் மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, ஊரடங்கு நடவடிக்கையை மீறி வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பின்னர் இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நாட்களில் மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு இருப்பதையும், போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதையும், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறாமல் இருப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மாநில எல்லை தாண்டி செல்லும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி குறைந்த பட்சம் 14 நாட்கள் தனிமைப் படுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உறுதி செய்ய வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு தொடர்பான வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை மாநில பேரிடர் மீட்பு நிதியில் (எஸ்.டி.ஆர்.எப்.) இருந்து பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்களிடம் இருந்து உரிய நேரத்தில் பிடித்தம் இல்லாமல் சம்பளம் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த கால கட்டத்தில் தொழிலாளர்களிடம் இருந்து வாடகை கேட்கக்கூடாது. வாடகை செலுத்தாதற்காக தொழிலாளர்களையும், மாணவர்களையும் வெளியேற்ற முயற்சிக்கும் வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை திறம்பட அமல்படுத்துவதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக