வியாழன், 9 ஜனவரி, 2020

கமலஹாசனின் பார்ப்பனீய அரசியலும் ... தீபிகா படுகோனின் JNU ஆதரவும்

சாவித்திரி கண்ணன் : கவலைக்குரிய விஷயம் தான்! கமலஹாசன் மாறப் போவதில்லை!
’கமலஹாசன் அடிப்படையில் இந்துத்துவச் சிந்தனையை ஆழமாக உள்வாங்கியர்’ என்ற என் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்காதா...என்று நானும் ஏங்கித் தவிக்கிறேன்!
காஷ்மீரில் 370 விலக்கி கொள்ளப்பட்ட போது மட்டும் மவுனம் சாதித்தவர் அல்ல,அவர் தொடர்ந்து பல விஷயங்களில் அமைதி காட்டியவர் என்பதும் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.
ஒரு முறை தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில்,பர்மாபஜார், ’’முஸ்லீம்கள் பாகிஸ்தானில் இருந்து வரும் பணத்தை கொண்டு திருட்டு விசிடி வெளியிடுகிறார்கள்’’ என்று சொன்னார். உடனடியாக அப்போதே,தயாரிப்பாளர்கள் தரப்பில்,’’சார்,பிரச்சினையை வேறு கோணத்திற்கு திசை திருப்பாதீர்கள்..! பர்மா பஜாரில் திருட்டுவிசிடி என்பது உண்மை! அதற்கும்,பாகிஸ்தானுக்கும் எப்படி முடுச்சு போடுகிறீர்கள்..ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்...’’ என்றவுடன் அமைதியானார்.
சரி,இப்படி பல சம்பவங்கள் என் நினைவுக்கு வந்து நிற்கிறது என்றாலும் தற்போதைய விஷயத்திற்கு வருவோம்.

குடியுரிமை மசோதாவை எதிர்த்து கமலஹாசன் ஒரு பத்திரிக்கையாளர்சந்திப்புவைத்தார்.அதில்,குடியுரிமை மசோதாவை கடுமையாகச் சாடி அறிக்கை வாசித்தார்.
உடனேஎன்னிடம்நிறையநண்பர்கள், ’’பார்த்தீர்களா.. கமலஹாசனை.. ! நீங்கள் தான் அவரை தவறாக புரிந்து கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்...” என்றனர்.
அப்போது நான் நண்பர்களிடம் சொன்னேன்,’’ நான் அவரை பற்றி கணித்து வைத்திருந்தது பொய்த்துவிட்டால் அதற்கு மகிழ்ச்சியடைவேன். நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைக்கட்டுமே..! ஆனால்,அவர் இந்த குடியுரிமை மசோதாவை ஒப்புக்கு எதிர்த்து அறிக்கையை வாசித்தது போலத் தான் தெரிகிறது. பிரஸ் மீட்டில் அறிக்கையை பத்திரிக்கையாளர்களிடம் தந்து படிக்க கொடுத்துவிட்டு அதற்கு மேல் தேவைப்படும் விளக்கங்களைத்தான் சொல்ல வேண்டும் ஆனால்,இவரோ அறிக்கையை வரிவிடாமல் ஏற்ற இறக்கங்களுடன் சினிமா வசனத்தைப் போல வாசித்து காட்டுகிறார்! எனில், அது சொந்தமாக அவர் மனதில் தோன்றிய கருத்தல்ல, மற்றவர்களை எழுதி தரச் சொல்லி வாங்கி படித்துள்ளார்.
அதிலும் ஈடுபாடில்லை என்பது அவர் எதிர்கட்சிகள் நடத்தும் பேரணியில் முதலில் மக்கள் நீதிமையம் பங்கேற்கும் என்று அறிவித்துவிட்டு, பின்பு பின்வாங்கியதில் வெளிப்பட்டுவிட்டது.
அதாவது அவருக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாவிட்டால்,அவரது தொண்டர்களும் நடக்காமல் முடங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும்...இது எந்த வகை ஜனநாயகம்..!
குடியுரிமை சட்டம் மாபெரும் அநீதி என்று அவர் நம்பி இருந்தால் தொண்டர்களுக்கு அதை எதிர்த்து போராடும் வாய்ப்பை மறுக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
அவருக்கு அடுத்த நிலையில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட அந்த கட்சியில் தலையெடுத்துவிடாதபடிக்கு அந்த ஒற்றை மனிதன் அசைந்தால் தான் மற்றவர்கள் அசையவே வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு சுயநலம்...!
சரி,எதிர்க்கட்சிகளுடன் கலந்து எதிர்க்க விரும்பவில்லை என்றால், தனியாக ஒரு போராட்டம் அறிவித்து செய்ய வேண்டியது தானே! அதையும் இன்று வரை செய்யவில்லை.ஒரு அறிக்கையில் அவரது ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறாரா?
ஜவகர்லால் பல்கலைகழகத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இளம் நடிகையான தீபிகாபடுகோனே நேரடியாக மாணவர்கள் போராட்ட களத்திற்கே சென்று தன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். கமல் இப்போது வரை மவுனம்!
ஆனால்,இப்போது கால்பிரச்சினை சரியாகிவிட்டதென்று அவர் தமிழ் நாடு முழுவதும் சுற்றி பிரச்சாரத்தில் இறங்க உள்ளாராம்.அதற்காக ஒரு பொதுக் குழுவை கூட்ட உள்ளாராம்!
’ரசிகர்களும்,மக்களும்’ ஆட்டு மந்தைகளல்ல!,’ என்பதை கமலஹாசன் உணர்வதற்கு ரொம்ப நாளாகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக