வியாழன், 9 ஜனவரி, 2020

பெண்களை பதுமைகள் ஆக்கி ஆண்களே ஆட்சி செய்யும் பல ஊரக உள்ளாட்சி ஆண்கள் ...

சாவித்திரி கண்ணன் : அடப்பாவிகளா? உங்கள் ஆணாதிக்கத்திற்கு ஒரு எல்லையே இல்லையோ...!
தற்போது உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இப்படி சரிபாதி இடங்கள் பெண்களுக்கு தருவதற்கான நோக்கம் மக்களாட்சித் தத்துவத்தின்படி அதிகாரம்
ஆண்களிடம் மட்டுமே குவிந்துவிடாமல், பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்!
இதற்காகத் தான் என்னைப் போன்றவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக மாய்ந்து,மாய்ந்து எழுதிவருகிறோம்.
ஆனால்,பெண்களுக்கான அதிகாரத்தை அவர்கள் முழுமையாக கையில் எடுத்துச் செய்ய முடியாத வண்ணம், அவர்களின் கணவர்கள் செய்யும் அளப்பறைகள் தாங்க முடியாத ஜனநாயக அவலமாகவுள்ளது!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பெண்களில் நால்வருக்கு அவர்கள் கணவர் அல்லது உறவினரில் ஒரு ஆண் அப் பெண்களை பதவியேற்பு உறுதிமொழி ஏற்க அனுமதிக்காமல் ,பதவியேற்பு உறுதி மொழியை தாங்கள் ஏற்றுள்ளனர் என்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.
இந்த தவறை சுட்டிக் காட்டிய பத்திரிகையாளர்களிடம்,மாவட்ட முகமை திட்ட இயக்குனர் சி.பெரியசாமி,’’பெண்கள் அருகில் இருந்து என்ன உறுதிமொழி எடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு கையெழுத்திட்டால் போதுமானது.’’ என்று வியாக்கியானம் செய்துள்ளதோடு,இந்த அணுகுமுறையை ஊக்குவித்துள்ளார்!

உள்ளாட்சியின் உன்னத நோக்கத்திற்கு இழிவு தரும் இத்தகைய வியாக்கியானம் சட்டப்படியும்,தார்மீகப்படியும் தவறானது. நாளை பஞ்சாயத்து தலைவர்களுக்கு செக்கில் கையெழுத்திடும் அதிகாரத்தையும் கூட அவர்கள் கணவர்கள் எடுத்துக் கொள்ள இவரைப் போன்றவர்கள் வழிகாட்டினால் என்னாவது..?
இந்தப்படம் வார்டு கவுன்சிலர் எம்.அனிதாவை பக்கத்தில் பதுமை போல நிற்கவைத்து அவரது கணவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் காட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக