ஞாயிறு, 26 ஜனவரி, 2020

வரலாறையும், அறிவியலையும், சமூகத்தையும் ஆழ்ந்து படியுங்கள். இல்லையேல் குடியரசு என்பதும் அபத்தகனவு தான்.

Karthikeyan Fastura :
பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து விடுதலை பெற்று இந்த நாடு உருவாகிய போது இந்தியா என்பது கிட்டத்தட்ட ஏழுநூறு நாடுகளின்/சமஸ்தானங்களின் கூட்டமைப்பு. எல்லா தேசிய இனங்களையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற நாடாக தன்னை பிரகணப்படுத்தியதால் தான் மெட்றாஸ் மாகாணம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் அதனுடன் ஒத்துழைக்கவும் ஒரு நாடாகவும் இருக்க ஒத்துக்கொண்டனர். காந்தி, நேரு, அம்பேத்கார் போன்ற ஆளுமைகள் அதற்கு முக்கிய காரணிகளாக இருந்தனர். தென்னிந்தியாவில் பெரியார் முற்போக்கு சிந்தனையில் எல்லோருக்கும் ஒரு படி முன்னே சென்ற காரணத்தினால் காங்கிரஸ் உள்ளேயும் இருந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை உணர்ந்தவரானதால் இந்திய விடுதலையை கடுமையாக எதிர்த்தார். குரங்கு கையில் பூமாலையை கொடுத்துவிட்டு செல்கிறது பிரிட்டிஷ் அரசு என்று கருப்பு தினமாக அறிவித்தார். அன்று தேசிய மயக்கத்தில் இருந்த மக்களுக்கு பெரியாரின் கூற்று எந்தளவிற்கு உண்மை என்பதை உணரவில்லை. இன்று நாம் அனைவரும் அதை அனுபவிக்கிறோம்.
இன்று 130 கோடி பேர்களின் வாழ்வில் ஒரு சிலர் எடுக்கும் அபத்தமான முடிவுகள் பெரும் பாதிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. அம்பேத்கார் இதன் தாக்கத்தை உணர்ந்தே கவனமாக எழுதியபோதும் அதிகாரங்களை பல தளங்களில் பரவலாக்கிய போதும் இன்று அது அத்தனையும் உடைக்கப்பட்டு வருகிறது.

மனித வரலாற்றில் எல்லா பேரரசுகளின் கதைகள் அனைத்தையும் படிக்கும்போது அதில் உள்ள மிகப் பெரும் ஒற்றுமை அதிகாரம் குவிந்திருக்கும் இடங்கள் அதை சுற்றிய பகுதிகள் மட்டும் வளர்ச்சியில் அதிகமாகவும் மற்ற பகுதிகள் கல்வி வேலைவாய்ப்பு கலை திறன் என்று எல்லாவற்றிலும் பின்தங்கியும் இருந்திருக்கிறது. 20ஆம் நூற்றாண்டில் மாநிலங்களுக்கும் அதிகார பரவலாக்களால் இந்த பிரச்சனை தீரும் என்று நம்பினார்கள் . அந்த நம்பிக்கை பொய் என்று எல்லா பெரிய நாடுகளும் மெய்ப்பிக்கின்றன.
பல தேசிய இனங்களை உள்ளடக்கிய பெரும் நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட மத்திம மற்றும் சிறிய நாடுகளில் மனித வளமும், ஆற்றலும் சீரான அளவில் எல்லா பகுதிகளிலும் இருக்கிறது. ஒரு சதுர கிமீ உள்ள நிலத்தில் சுரண்டப்படும் இயற்கைவளத்தின் அளவானது பெரிய நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. அதாவது தேவைக்கு அதிகமாக சுரண்டுகிறார்கள். எளிமையாக சொல்வதென்றால் பெரிய நாடுகள் இயற்கைக்கு முற்றிலும் எதிரானது, மனிதர்களுக்கும் எதிரானது என்கிறது சமீபகால புள்ளிவிவரங்கள்.
இந்திய தேசம் என்பது ஒரு பெரும் கற்பனையான ஒழுங்குமுறை. அது எல்லோருக்கும் ஒரே மாதிரியானது, சமமானது, சரிவிகிதத்தில் வளங்களை பகிர்ந்தளிக்க கூடியது, மனிதப் பன்முகத்தன்மையை ஏற்கிறது என்ற நம்பிக்கையில் கட்டப்பட்டுள்ளது. அதை இன்றைய நவீன ஆட்சியாளர்கள் உடைப்பார்கள் என்றால் தேசமும் உடைந்தே தீரும். அதை புரிந்துகொண்டு CAA, NRC போன்ற அபத்தங்களை கைவிட்டு, இந்தி மொழித் திணிப்பை கைவிட்டு, GST போன்ற பொருந்தா வரிகளை கைவிட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டு, தேசிய இனங்களை அவர்களின் பண்புகளை ஏற்று நடந்தால் மட்டுமே இந்த தேசம் என்ற கட்டுக்கதை ஒரு நூற்றாண்டையாவது தொடும். ஆயுதங்கள், அதிகாரத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைத்தால் அதைவிட அபத்தம் வேறில்லை. வரலாறையும், அறிவியலையும், சமூகத்தையும் ஆழ்ந்து படியுங்கள். இல்லையேல் குடியரசு என்பதும் அபத்தகனவு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக