திங்கள், 27 ஜனவரி, 2020

அய்யனார் சிலைக்கு போடப்பட்ட பூணூல் மாலையாக மாற்றப்பட்டதா.. 71வது குடியரசு தின விழா –

அய்யனார் சிலைக்கு போடப்பட்ட பூணூல் மாலையாக மாற்றப்பட்டதா?
BBC :  ;71வது குடியரசு தின விழா – அய்யனார் சிலைக்கு போடப்பட்ட பூணூல் மாலையாக மாற்றப்பட்டதா? இந்தியா முழுவதும் 71வது குடியரசு தின கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றன. தலைநகர் புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 10 மணியளவில் டெல்லி ராஜ்பத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரேசில் அதிபர் பொல்சனாரூ, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முப்படைகளின் தலைவர்கள், முப்படை தளபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
முப்படைகள் உள்ளிட்ட பல மாநிலங்களின் வண்ணமயமான அலங்கார அணிவகுப்புகளும் இதில் இடம்பெற்றன.
அந்த அணிவகுப்பில் தமிழக பாரம்பரிய கலையான கிராமியக் கலைகளை வெளிபடுத்தும் வகையில், கிராமிய கலைஞர்கள் ஆடல் பாடலுடன் நடனமாடினார்கள்.

மாலையாக மாறிய பூணூல்?

இதற்கான ஒத்திகைகள் நேற்று முன்தினம் நடைபெற்ற போதே தமிழக அரசு சார்பாக இருந்த வாகனத்தில் உள்ள அய்யனார் சிலைக்கு பூணூல் போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தமிழகத்தில் விவாதப் பொருளானது.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்வில் இந்த பூணூல் மாலையாக மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற்றிருந்த அய்யனார் சிலை செய்த குழுவினரில் இருந்த ஒருவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
அவர் கூறுகையில், “இந்த அய்யனாரானது, சிவன் அம்சம் கொண்டது. கையில் உடுக்கையுடன் காணப்படுவது இதன் தனிச்சிறப்பு. இது சிவன் அம்சம் என்பதால், இந்த சிலைக்கு பூணூல் அணிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.

குடியரசு தின விழா நிகழ்ச்சி

முன்னதாக, காலை சுமார் 9:30 மணி அளவில் காலை இந்தியா கேட் அருகில் உள்ள போர் நினைவிடத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.


பிரதமர் மோதி மரியாதை செலுத்தினார்படத்தின் காப்புரிமை DD News

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரேசில் அதிபர்

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ பங்கேற்றார்
பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டின் போது பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வர அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்க பொல்சனாரூ இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் குடியரசு தின விழா

சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறைக்கான பல்வேறு விருதுகளையும் வழங்கினார்.

17,000 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

லடாக்கில் 17,000 அடி உயரத்தில் இந்திய திபெட்டிய எல்லை பாதுகாப்புப் படையினர் தேசியக் கொடியை ஏந்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர். அங்கு தற்போது -20 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது
bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக