வெள்ளி, 29 நவம்பர், 2019

சோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிறது

பாரதீய ஜனதா கட்சி மீது சோனியா பரபரப்பு குற்றச்சாட்டு தினத்தந்தி :  மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது என சோனியா காந்தி குற்றச்சாட்டு சுமத்தினார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கிப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் ஜனநாயகத்தை தகர்த்தெறிய நடந்த வெட்கமற்ற முயற்சிக்கு பின்னர் நாம் இங்கே கூடி இருக்கிறோம். கவர்னர் இதுவரை இல்லாத வகையில், மிகவும் கண்டிக்கத்தக்க விதத்தில் நடந்து கொண்டுள்ளார். அவர் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியின் அறிவுறுத்தலின்படிதான் செயல்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. மராட்டியத்தில் பாரதீய ஜனதா கட்சி தேர்தலுக்கு முன்பாக அமைத்த கூட்டணி, அந்த கட்சியின் ஆணவத் தாலும், அதீத நம்பிக்கையாலும்தான் நிலைத்து நிற்காமல் போய் விட்டது.


மராட்டியத்தில் நமது 3 கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பதில் இருந்து தடுப்பதற்கு பாரதீய ஜனதாவால் எல்லா முயற்சிகளும் அப்பட்டமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நாம் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டோம். மோடி, அமித்ஷா அரசு மொத்தமாக அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

பாரதீய ஜனதா கட்சியின் கையாளுதல்களை தோற்கடிக்கும் தீர்மானத்துடன் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி-அமித்ஷா அரசு கண்ணியம் இல்லாத ஒன்று. நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று இந்த அரசு திக்கு தெரியாமல் இருக்கிறது.

பொருளாதார நெருக்கடி, நாளுக்கு நாள் மோசம் ஆகி வருகிறது.

பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பதிலாக மோடி, அமித்ஷா அரசு புள்ளி விவரங்களை திரிப்பதில் அல்லது அவற்றை முழுமையாக வெளியிடாமல் இருப்பதில் தீவிரம் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை அவர்களுக்கு சாதகமான ஒரு சிலருக்கு விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் வேலை செய்கிற ஆயிரக்கணக்கான பணியாளர்களின் கதி என்னாகும்?

சம்பளம் வாங்குகிற லட்சக்கணக்கானோரும், சாதாரண குடும்பங்களும் தாங்கள் வங்கியில் வைத்துள்ள டெபாசிட்டுகள் பற்றி கவலை கொண்டுள்ளனர்.

இந்த அரசுக்கு சட்டமும் தெரியாது, கடைப்பிடிக்கவும் செய்யாது. இந்த அரசு அதிகார போதையில் இருக்கிறது. நமது சிவகுமார், ப.சிதம்பரம் போன்ற அரசியல் எதிரிகள் மீது ஜனநாயக அமைப்புகளை பயன்படுத்துகிறது. ப.சிதம்பரத்தை 100 நாட்களாக சிறையில் வைத்திருப்பது பழிவாங்கும் செயல்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக