வெள்ளி, 29 நவம்பர், 2019

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறது. இதனிடையே மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தேர்தலைச் சுமுகமாக நடத்துவது தொடர்பாக நேற்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களது கருத்துகளை அரசியல் கட்சியினர் எடுத்துவைத்தனர். மேலும், ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 28) திமுக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் மனுத் தாக்கல் செய்த திமுக, “புதிதாகத் தொடங்கப்பட்ட மாவட்டங்களுக்கும் வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரவுள்ளது. இந்த நிலையில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் நேற்று நடந்த மாவட்டத் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மாவட்டங்கள் பிரிப்புக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை. 2018ஆம் ஆண்டில் ஏற்கனவே புதியதாக மறுவரையறை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக