வெள்ளி, 29 நவம்பர், 2019

இலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்!
18/12/2008 by isoslo - t;என். சரவணன் :
இலங்கையில் முரண்பாடுகளின் நிரல்படுத்தலின் போது தமிழ்த் தேசப்போராட்­டமானது முதன்மை பெற்றதன் பின் ஏனைய சமூக முரண்பாடுகள் அதன் பின்னர் நிரற்படுத்தலின் போது பின்னுக்குத் தள்ளப்படவும் செய்தன. எனவே பெருங்கதையாடலாக தமிழ்த்தேசப் போராட்டத்தோடு மையப்பட்ட கருத்தாடல்கள் அமைந்தன. அவ்வாறு நிரல் ஓழுங்கில் பின்னுக்குத்தள்ளப்பட்டவற்றுள் வர்க்க மற்றும் பெண்களின் பிரச்சி­னைகள், சாதியப் பிரச்சினைகள் என்பனவும் முக்கியமாக அடங்குகின்றன. இந்த நிலையில் சாதியம் குறித்த போதிய ஆய்வுகள், விவாதங்கள் தமிழ்ச் சூழலில் அருகி வருவதையும் இனங்காணலாம்.
சிங்கள சிவில் சமூக கட்டமைப்பில் தமிழ்ச் சமூகம் அளவுக்கு இறுக்கமான சாதிய கட்ட­மைப்பு மோசமாக இல்லாவிட்டாலும் அங்கு பல்வேறு ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக தேர்தற் காலங்களில் சிங்களச் சூழலில் சாதியம் தலைதூக்குவதைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவரும். தேர்தல் ஆரவாரங்களின் போது அது அதிகமாக தலைகாட்டத் தொடங்கும்.
சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் 15ஆம் நூற்றாண்­டிலேயே காணக்கிடைக்கின்ற போதும் இந்த 20ஆம் நூற்றாண்டில் அதுவும் குறிப்பாக 1971இல் ஏற்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சியைத் தொடர்ந்து சாதியம் குறித்த ஆய்வுகள் பல கோணங்களில் பல ஆய்வுகளாக வெளிவரத் தொடங்கின. 71 கிளர்ச்சிக்கு காரணமான அம்சங்களில் சாதிய பிரச்சினை முக்கியமான பாத்திரமாற்றியது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 71 கிளர்ச்சியின் பின் அது பற்றிய புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்ட அரச தரப்­பினர் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் கொல்லப்பட்ட இளைஞர்களிடமிருந்து சாதியவாரியாக தரவுகளை திரட்டியதும் அதன் காரணமாகத் தான். இந்தத் தரவுகள் பின்னர் பல ஆய்வுக­ளுக்கு மூல ஆதாரங்களாக அமைந்தன.

71 கிளர்ச்சியில் ஜே.வி.பி.யின் படைத் துறையின் ஸ்தாபகரும், முக்கிய தலைவர்க­ளில் ஒருவரும் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் மாற்றுப் பத்திரிகைகளில் ஒன்றான ”ராவய”வின் ஆசிரியருமான விக்டர் ஐவன் சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்து இலங்கையில் பல ஆய்வுகளைச் செய்திருப்பவர். அது மட்டுமன்றி இலங்கையின் அரசியலில் எந்த பிரதான நிகழ்வுகளிலும் அதில் உள்ள சாதியத்தின் பங்களிப்பைப் பற்றி தேடித்துருவுபவர்.
இலங்கையில் நிலவுகின்ற சாதிய அமைப்பு முறையானது சிக்கல் வாய்ந்தது. வடக்கு கிழக்குச் சூழலில் நிலவுகின்ற சாதியம், இந்திய வம்சாவழியினர் மத்தியில் நிலவி வரும் சாதியம், மற்றும் சிங்கள சமூகத்தினர் மத்தியில் நிலவுகின்ற சாதியம் ஆகிய மூன்றுவித தமக்கே உரிய கட்டமைப்­பினை கொண்டிருக்கிறது. இவற்றுக்கிடையே உறவுகளும், முரண்பாடுகளும் உண்டு. இவற்றுக்கென்று தனியான பண்புகள் வடிவங்கள் உண்டு. சாதியப் படிநிலை ஒழுங்கிலும் கூட ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.
சாதியம் என்பது பிறப்பால் தீர்மானிக்­கப்­படுவது, அகமணமுறை, சாதிய ரிதியி­லான தொழிற்பிரிவினை, அதிகாரப்­படிநிலையமப்பு, அடையாளப்படுத்தலுக்­கான காரணி ஏன் சில சாதிகளுக்கான தீண்டாமை போன்றன கூட சிங்கள சாதியமைப்பில் காணலாம்.
ஆனால் இந்திய சாதிய கட்டமைப்பு மற்றும் வடகிழக்குக்குள் நிலவுகின்ற சாதிய கட்டமைப்புக்குள் நிலவுகின்ற அதிகாரப் படிநிலை ஒழுங்கு (நிரலொழுங்கு) போல சிங்கள சாதிய கட்டமைப்பில் இல்லை. இங்கு அது மிகவும் சிக்கல் வாய்ந்தது, தவிரவும் சில சாதி­களுக்கு சமமான வேறு சாதிக­ளையும் இதில் காண முடியும்.
பௌத்த சித்தாந்தத்தைப் பொறுத்தளவில் அடிப்படையில் அது சாதியத்துக்கு எதிரான ஒன்று. புத்தரின் போதனைகள் பல சாதிய எதிர்ப்புகளைக் கொண்டவை. ”வசல சூத்திரய” எனும் புத்தரின் போதனையானது சாதியத்தைக் கடுமையாக சாடும் ஒன்று. இலங்கை அரசர்க­ளுக்கும் இந்திய அரசர்க­ளுக்­குமி­டையில் ஏற்பட்ட உறவுகள், ஆக்­கிர­மிப்­­புகள், என்பனவற்றுக்­கூடாகவே இந்திய சாதியம் சிங்கள சமூகத்த­வரிடமும் மெல்ல மெல்ல நிறுவப்பட்டதாக பல்வேறு ஆய்வா­ளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். சிங்கள சமூகத்தில் இச்சாதிய கட்டமைப்புக்கு தோதான படிமங்கள் அதன் கட்டமைப்பில் பிறக்கவில்லை. ஆனால் இந்த சாதிய கட்ட­மைப்பை நிலைநிறுத்துவதை அன்றைய அரசர்­களும் நிலப்பிரபுத்துவ சக்
திகளும் சாதகமாகக் கருதினர். (இலங்கைக்கு இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலா­ளர்களை இறக்குமதி செய்த போது ஆங்கி­லே­யரும் தமது நிர்வாகத்தை செவ்வனே நடாத்த அங்கிருந்த சாதிய கட்டமைப்பை அப்படியே தக்க வைப்பது தமது ஆட்சியதி­கா­ரத்­துக்கு சாதகமானது என கருதியிருந்­ததும் இந்த வகையில் தான்) ஏனெனில் ஏலவே உள்ள அதன் படிநிலை கட்டமைப்­பானது தமது நிர்வாகத்துக்கு சாதகமானது என கருதினர். இலங்கையில் பின் வந்த பல பௌத்த துறவிகள் சாதியத்தையும் சிங்கள பௌத்த கட்டமைப்போடு இணைத்து இலக்­கியங்கள், மற்றும் ஓழுக்கக் கோவைகளை அமைத்துக் கொண்டனர். இவை தான் பின்னர் சாதிய கட்டமைப்புக்கு நிறுவன வடிவம் கொடுப்­பதில் பங்காற்றின. கண்டிய ராச்சிய காலகட்­டத்தின் கீழ் அமைந்த நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் கீழ் தான் சிங்கள சாதியம் வலுப்பெற்றதாக ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெண்களுக்கு எதிராகவும், அடிமட்ட தொழில்களைப் புரிந்த விளிம்புநிலையி­னருக்கு எதிராகவும் சாதிய ஒழுக்கக் கோவைகளை ”பௌத்த முலாம் பூசி” அளித்ததில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக கருதப்படும் அநகாரிக்க தர்மபாலவின் பாத்திரம் முக்கியமானது.
நாவலர் சைவ சித்தாந்த ஒழுக்கக் கோவையை நிறுவுகின்ற பணியைச் செய்­கின்ற போது பெண்கள் குறித்தும், ஒடுக்கப்­பட்ட சாதியினருக்கு எதிராகவும் மோசமான ஒழுக்க விதிகளுக்கு ஒப்பானவற்றை அநகாரிக்க தர்மபாலவின் ஒழுக்கக்கோவை­யிலும் காணலாம். (இது குறித்து பின்னர் தனியாக பார்க்கலாம்.)
மலைநாட்டுச் சிங்கள சாதிய கட்ட­மைப்பை விட கரையோரச் சிங்கள சாதியக் கட்டமைப்பு நெகிழ்ச்சியானது. ஏனெனில் காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கத்தோ­லிக்க மதத்தின் செல்வாக்கு இதில் குறிப்பான மாற்றங்களை ஏற்படுத்தின. என்றாலும் சாதியத்தின் பண்பை அப்படியே குலைக்­காமல் அதன் வடிவத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. காலனித்துவ சக்திகளின் முதல் ஆக்கிரமிப்பாகிய கரையோரங்களில் இருந்து வந்த கராவ (தமிழில் கரையார் சாதியையொத்த மீனவத் தொழிலைச் சார்ந்தோர்) சாதியானது கத்தோலிக்க மதச் செல்வாக்கின் பின் ”கத்தோலிக்க கராவ”, ”பௌத்த கராவ” என்கிற பிரிவுகளாக தம்மை அடையாளப்­படுத்­துகின்ற போக்கெல்லாம் இருக்கின்றன. சிங்கள சமூகத்தில் பிரதான இடத்தையும், பெரும்பாலானவர்களாகவும், ஆதிக்க சாதியாகவும் உள்ள கொவிகம (விவசாய நிலப்பிரபுத்துவத்தைச் சார்ந்த-தமிழ்ச் சூழலில் வெள்ளாளர் சாதிக்கு ஒப்பானவ­ர்கள்) சாதி மற்றும் கராவ சாதி போன்றவற்­றுக்கு தனியான அமைப்புகளும், அச்சாதிகளுக்கான கொடிகளும் கூட இருந்திருக்கின்றன. (பார்க்க படம்)
இலங்கையில் சிங்கள சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்நத மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது.(பார்க்க அட்டவணை) மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகிறார்.
1. நவந்தன்ன – கலைஞர்கள்
2. கராவ – வேட்டையாடல் மீன்பிடி
3. துராவ – கள் இறக்குவோர்
4. ரதா – உயர்சாதியினருக்கு உடைதுவைப்போர்
5. ஹன்னாலி – நெசவு செய்வோர்
6. படஹெல – மட்பாண்டங்கள் செய்வோர்
7. அம்பெட்ட – முடிதிரத்துவோர்
8. ஹாலி – நெசவு, ஐரோப்பியர் காலத்தில் கருவா தொழில்
9. ஹக்குறு – கருப்பட்டி உற்பத்தி
10. ஹணு – சுண்ணாம்பு
11. பண்ண – புல் வெட்டுவோர்
12 பெரவா – தாளவாத்தியம் இசைப்போர்
13 பது – பள்ளக்கு தூக்குவோர்
14. கஹல – கொலைத் தண்டனை நிறைவேற்றுவோர், சுத்திகரிப்போர்
15. ஒலி, பலி – சிரட்டை எரிப்பு, ”குறைந்த” சாதியினரின் உடை துவைப்பு
16. ஹின்ன – மாவு சளிப்போர்
17. கின்னர – பாய் பின்னுவோர்
பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ”இலங்கை மக்கள்” எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.
1. அஹிகுந்தித்த 2. எம்பெட்ட 3. ஒலி 4. கராவ
5. காப்பிரி 6. கஹல 7. ஹாட் 8. கெத்தர
9. கொய்கம 10. ஜா 11. துரய் 12. துராவ 13. நவந்தன்ன 14 நெக்கத்தி 15.பது 16. பன்ன
17. பனிக்கி 18. பட்டி 19. பரவறு 20. பொரோகார
21. பத்கம 22. படஹெல 23. பண்டார 24. பெரவா
25. பெத்தே 26. பாரத்த 27. மரக்கல 28. மிகோ
29. முக்கரு 30. யுரேசியானு 31. ரதா 32. ரொடி
33. லன்சி 34. லோகரு 35. வக்கி 36. வன்னி
37. வக்கும்புர 38. சலாகம 39. ஹக்குரு 40. ஹலாகம
41. ஹின்ன 42. ஹ}ன்னா 43. ஹ}ளவாலி
ரொபர்ட் நொக்ஸ் 12 சாதிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
1. ஹந்துரு 2. ஆச்சாரி-விஸ்வ 3. துருவே எத்தோ 4. பனிக்கியோ
5. கும்பல்லு 6. ரதவ் 7. ஹங்கரவமு 8. பதுவோ
9. ரெதிவியன்னோ 10. கிலியோ 11. கின்னரு 12. ரொடியோ
எவ்வாறிருந்த போதும் சாதிகளின் அளவு மேலும் கீழும் இருந்தாலும் சகலர் முன் வைத்ததிலும் வித்தியாசம் இல்லை. பல சிறிய சாதிகள் வழக்கொழிந்து போய்விட்டன. (”சாதியம், வர்க்கம், மற்றும் மாறிவரும் இலங்கைச் சமூகம்” எனும் காலிங்க டியுடர் சில்வா வின் கருத்தின்படி இவ்வாறு வழக்கொழிந்துபோன சாதியத்தின் எச்சமானது இப்போது 14 இல் தான் இருக்கிறது என்கிறார். அட்டவணையைப் பார்க்க) அவை ஏனைய சாதியினரோடு காலப்போக்கில் கலந்து விட்டன. சிங்கள சாதியமைப்பில் இறுக்கமான சாதிய படிநிலையொழுங்கு இல்லாததும் சில சம அந்தஸ்தான சாதிகள் இருந்ததும் இதற்கான காரணமாக இருக்கலாம்.
என்றாலும் இன்றும் எஞ்சியிருக்கிற வர்க்க நிலையில் பலம்வாய்ந்த ஆதிக்க சாதிகள் பல இன்றும் இலங்கையின் வர்க்க, அரசியல், நிலைகளில் தமது அதிகாரத்துவத்­தைத் தக்க வைத்திருக்கின்றன. இலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாக நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்ட, அதேவேளை இன்று பெரும்பாலும் தரகுமுதலாளித்துவ சக்திகளாக தங்களை நிறுவியிருக்கிற கொவிகம மற்றும் கராவ ஆகிய சாதியினர் தான் அதிகாரத்துவ நிலையில் முக்கியத்துவ இடத்தை வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று கீழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் அகமணமுறை உடைந்து கலப்பை நோக்கிச் செல்வது அதிகரிப்பதனூடாக அடித்தட்டு மக்களிடையே சாதியம் ஓரளவு தகர்ந்து வந்தாலும் மத்தியதரவர்க்க மற்றும் உயர் மத்தியதரவர்க்க மேட்டுக்குடியினரிடம் இந்த அகமணமுறை பேணப்பட்டே வருகிறது. சொத்து வேறு சாதியினருக்கு பிரிந்து செல்லாமலிருக்கவும் அது ஓரிடைத்தைநோக்கி (தம்மை) மையப்படுத்­துவதற்காகவும், இந்த சாதிய அகமணை முறை இறுக்கமாக இந்த வர்க்கத்தினடையே பேணப்படுகிறதெனலாம்.
இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்க­ளும் அடித்தட்டு மக்களிடையே சாதிய கலப்புகளை ஏற்படுத்திவிட்டாலும், மறுபுறம் ஆதிக்க சாதிகள் கேந்திர தளங்களில் தம்மை நிறுவனப்படுத்தவும் செய்திருக்­கின்றன. அதனை இலங்கையில் சகல சாதிய கட்டமைப்புக்குள்ளும் பார்க்கலாம்.
வர்க்க மற்றும் ஏனைய சமூக அந்­தஸ்த்து சார்ந்த விடயங்களில் ஒன்றி­லிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் ஓரளவு இருக்கின்ற போதும் சாதியமானது பிறப்பால் தீர்மானிக்­கப்படுவது என்பது முக்கிய பண்பாகும்.
இலங்கையின் அரசியலில் அன்று இலங்கை தேசிய காங்கிரஸ் தொடக்கம் அதன் பின் வந்த சகல அரசியல் கட்சிகள், அரசியல் நிலைமைகள் அனைத்திலும் சாதியத்தின் செல்வாக்கு இருந்ததை பலர் அறியார். தோற்றப்பாடாக எட்டப்பட்ட நிகழ்வுகள் இந்த உண்மைகளை துலங்க வைக்க வாய்ப்பளிக்கவில்லை. இது தமிழரசியலிலும் சரி சிங்கள அரசிய­லிலும் சாரிபொருந்தும். அதே வேளை இவ்வாறு சாதியம் செல்வாக்கு அந்தந்த சாதிய (சிங்கள, தமிழ்) கட்டமைப்புகளுக்குள் தான் இயங்கின என்றில்லை.
இனங்களுக்கிடையி­லான உறவுகள் முரண்­பாடுகள் என்பனவற்றைத் தீர்மானிப்பதிலும் இந்த சாதியம் பரஸ்பரம் தலையீடு செய்தி­ருக்கிறது. இவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்­ளப்பட வேண்டும். உதிரிகளாக ஆங்காங்கு இவ்வா­றானவற்றுக்கு தகவல்க­ளாக பல ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற போதும் இந்த நோக்கில் அவ்வகை ஆய்வுகள் முறையாக செய்யப்பட்­டதில்லை. அதுவும் முக்கியமாக இலங்கையில் தற்போது நிலவும் தமிழ்த் தேசப்போராட்­டத்தைத் தீர்மானிப்பதில் இவற்றின் பாத்திரம் கண்டறிவது இன்றைய நிலையில் அவசியமானதும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக