செவ்வாய், 12 நவம்பர், 2019

லத்தியை எறிந்து பெண்ணை கொன்ற போலீஸ்காரர் .. ஹெல்மெட் போடவில்லையாம்.... வீடியோ

சாலை மறியல்ஹெல்மெட் போடவில்லை; லத்தியை வீசினர்!”- போலீஸாரால் பறிபோன பெண்ணின் உயிர் .vikatan.com - ஜெ.முருகன் - தே.சிலம்பரசன் : ஹெட்மெட் அணியாமல் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது கீழே விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவரின் மகன் செந்தில். கள்ளக்குறிச்சி
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சுமைதூக்கும் தொழிலாளியான இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தாய் அய்யம்மாளுடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் காவலர்கள் இளையராஜா, சந்தோஷ் மற்றும் செல்வம் ஆகியோர் செந்திலின் வாகனத்தை கைகாட்டி நிறுத்தியிருக்கின்றனர். ஹெல்மெட் போடாமல் சென்றதால் பயந்துபோன செந்தில், காவலர்களிடமிருந்து தப்பிக்க தனது வாகனத்தை வேகமாக இயக்கியிருக்கிறார்.


அப்போது அங்கிருந்த காவலர்கள் தங்கள் கையிலிருந்த லத்தியை செந்திலை நோக்கி வீசியிருக்கின்றனர். செந்தில் அதிலிருந்து விலகிவிட்டதால் அவரது பின்னால் அமர்ந்திருந்த அய்யாம்மாள் மீது பட்டு அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அய்யம்மாளை வாகனத் தணிக்கையில் இருந்த காவலர்களின் உதவியுடன் மீட்ட அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அய்யம்மாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காவலர் சந்தோஷ் தாக்கியதில் கீழே விழுந்ததால்தான் அய்யம்மாளின் தலையில் அடிபட்டு உயிரிழந்தார் என்று அவரது உறவினர்களும் பொதுமக்களும் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அய்யம்மாள் உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி, புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உயிரிழந்த அய்யம்மாளின் மகன் செந்திலிடம் பேசினார். அதற்கு, “செத்துப்போன என் அம்மா எனக்கு உயிரோடு வேணும். நான் புகார் கொடுத்தால் என் அம்மாவை உயிரோடு குடுப்பீங்களா?” என்று கேட்டு செந்தில் கதறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. சிறிது நேரத்தில் அங்கு கூடிய அய்யம்மாளின் உறவினர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். தகவலறிந்ததும் அங்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி பயிற்சி ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் மணி, தலைமைக் காவலர்கள் சந்தோஷ், இளையராஜா, செல்வம் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக