சனி, 16 நவம்பர், 2019

பஞ்சமி நிலம்.... உதயநிதிக்கு ஆணை !

மின்னம்பலம் : பஞ்சமி நில விவகாரம்
தொடர்பாக முரசொலியின் நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, தனுஷ் நடித்த அசுரன் படத்தைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அசுரன் படத்திற்கு பாராட்டுக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த பாமக தலைவர் ராமதாஸ், முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டது என்றார். அதை மறுத்த ஸ்டாலின், பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்பதை நான் நிரூபித்தால் ராமதாஸும், அன்புமணியும் அரசியலை விட்டே விலகத்தயாரா? என்றும், அப்படி நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அத்துடன் முரசொலி அலுவலக இடத்தின் பட்டாவை வெளியிட்டார். ஆனால் அதுமட்டும் போதாது வேறு சில ஆவணங்களும் வேண்டும் என ராமதாஸ் அப்போது பதிலளித்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் எதிரொலித்தது. இதனிடையில், அக்டோபர் 22ஆம் தேதி பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, முரசொலி அலுவலகம் ,பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஏழு நாட்களில் பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அக்டோபர் 23 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக, முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒரு சம்மனை அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் பஞ்சமி நில விவகாரம் சம்பந்தமாக வரும் 19ஆம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னை சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணைய துணைத்தலைவர் முருகன் முன்பு ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைக்கு ஆஜராகும்போது நிலம் தொடர்புடைய ஆவணங்கள், கோப்புகள், பத்திரங்கள், கேஸ் டைரி உள்ளிட்டவற்றுடன் விசாரணையை எளிதாக நடத்த உதவிடும் வகையில் ஆஜராகவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக