சனி, 16 நவம்பர், 2019

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது கேரளா அரசு!


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் தினத்தந்தி :சபரிமலையில் அய்யப்பன் கோவிலுக்கு ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்துவந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.
இந்த நிலையில் 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி சாமி தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பெண்கள் ஆர்வலரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து உள்ளார்.


இந்த சூழ்நிலையில் சபரிமலைக்கு வரும் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் உள்ள குழப்பங்கள் பற்றி அரசு தலைமை வக்கீலுடன் ஆலோசனை நடத்திய பிறகு இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது பற்றி முடிவு செய்வோம் என தெரிவித்தார்.

சபரிமலை வரும் பெண்களுக்கு இந்த முறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது. இந்த முடிவை கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார். 

சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வந்தால் அவர்களை நிலக்கல்லிலேயே போலீசார் தடுத்து நிறுத்த முடிவு செய்து உள்ளனர். அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி திருப்பி அனுப்பவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதனால் நிலக்கல்லில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த  நிலையில் சபரிமலையில் அய்யப்பன் கோவிலுக்கு தரிசிக்க ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பம்பையில் தடுத்து நிறுத்திய கேரள போலீசார் சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்து கூறி திருப்பி அனுப்பி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக