திங்கள், 18 நவம்பர், 2019

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார்!'- சிதம்பரத்தில் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

போலீசார் விசாரணை
கைது செய்யப்பட்ட சக்திவேல்vikatan.com - ஜி.சதாசிவம் - எஸ்.தேவராஜன் :  சிதம்பரம் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலியைக் கத்தியால் குத்திய காதலனை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் சக்திவேல்(23). இவர் சிதம்பரம் கீழவீதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் கடலூர் மாவட்டம் கடாம்புலியூர் அருகே உள்ள குட்டியாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண் ஒருவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலை அறிந்த கடை உரிமையாளர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரையும் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார். இதனால் அந்தப் பெண் சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கினார்.
தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார் சக்திவேல். இந்நிலையில் நேற்று காதலியைப் பார்ப்பதற்காக வடமூர் கிராமத்துக்கு வந்த சக்திவேல் அவருடன் வழக்கம்போல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திருமணம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்துவைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் நெஞ்சிலும் கழுத்திலும் குத்திவிட்டுத் தப்பியோடிவிட்டார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், அவரைக் காப்பாற்றி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த அப்பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து சக்திவேலைக் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால், காதலன் கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக