வியாழன், 7 நவம்பர், 2019

முரசொலி அலுவலகம் முற்றுகை என அறிவிப்பு: பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் திமுக மனு

murasoli-office-declared-a-siege-dmk-appeals-to-police-commissionerhindutamil.in :  சென்னை. முரசொலி அலுவலகத்துக்கு 'நாகர் சேனை - மறு உலகப் பேரரசு' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பி வரும் செய்தி குறித்து காவல் ஆணையரிடம் திமுக புகார் அளித்துள்ளது. 'அசுரன்' படத்தைப் பார்த்துப் பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்துப் பதிவு செய்திருந்தார். அதற்குப் பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, முரசொலி அலுவலக தாய்ப்பத்திரத்தை பதிவிட்டு நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார் இல்லாவிட்டால் ராமதாஸும், அன்புமணியும் விலகத்தயாரா என ஸ்டாலின் சவால் விட்டிருந்தார்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் பல இந்துத்துவ அமைப்புகளும் இந்த விவகாரத்தில் குதித்தன. பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன் இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். சமூக வலைதளத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் 'நாகர் சேனை - மறு உலகப் பேரரசு' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் இயங்கும் தளத்தில் முரசொலி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தரப்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அவரது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக திமுக அதிகாரபூர்வ நாளேடான 'முரசொலி' இதழ் அமைந்திருக்கும் இடமானது பஞ்சமி நிலம் என அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதுகுறித்து, சட்டப்படியான நடவடிக்கைகளை திமுக எடுத்து வருகிறது.
இந்நிலையில், 'நாகர் சேனை - மறு உலகப் பேரரசு' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
அதன் விவரம் பின்வருமாறு:-
''அரசே பஞ்சமர் நிலத்தை பஞ்சமரிடம் மீட்டுக் கொடு! ஐந்து முறை ஆட்சி செய்து பஞ்சமர் நிலத்தை அபகரித்த திமுக முரசொலி அலுவலகம் நாகர் சேனை தலைமையில் முற்றுகைப் போர்''.
18.11.2019 திங்கள் காலை 10 மணிக்கு முரசொலி அலுவலகம் கோடம்பாக்கம்-சென்னை,
நாகர் சேனை - மறு உலகப் பேரரசு.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தனியாருக்குச் சொந்தமான நிலங்களுக்கு எதிராக நடத்திட சட்டப்படியாக அனுமதி இல்லை என்பது தாங்கள் அறிந்ததே.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்திடாமல் தடுத்து, 'முரசொலி' அலுவலகத்திற்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளித்திட வேண்டுகிறேன்”.
இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக