வெள்ளி, 1 நவம்பர், 2019

பிகில் வசூல்: அடித்துவிடும் டிராக்கர்கள் - கலங்கும் விநியோகஸ்தர்கள்!

மின்னம்பலம் : அக்டோபர் 25 அன்று ஆர்பாட்டத்துடன் ரிலீஸான பிகில் திரைப்படம், முதல் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக வழக்கம் போல தகவல்கள் வெளியாகத் தொடங்கி, தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வசூல் கணக்குகளை சோஷியல் மீடியா டிராக்கர்கள் கூட்டம் ஒன்று பரப்பி வருகிறது. இதனை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் முதல் லோக்கல் சேனல் வரை பிகில் படம் பற்றிய செய்திகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இதைப் படிக்கும் படத்தை வாங்கியவர்கள், நமக்குத் தெரியாமல் எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சோஷியல் மீடியா டிராக்கர்களைப் பொறுத்தவரை கடிவாளம் கட்டிய குதிரையைப் போன்றவர்கள் என்று கூறலாம். எப்படி என்றால் ரீமேக் செய்யப்பட்ட படத்திற்கு அல்லது அதில் நடிப்பவர்களுக்கு அரசு விருதுகள் வழங்கப்படமாட்டாது என்ற அடிப்படை கூட தெரியாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக அஜித் குமாருக்கு தேசிய விருது கிடைக்குமென்று கூவியவர்கள் தான் பிகில் பட வசூல் பற்றியும் பேசி வருகின்றனர்.
படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் கூறவில்லை. முதல் நாள், படம் சூப்பர் என்று சொல்லி ட்விட்டரில் பெரிய பில்டப் கொடுத்த ரசிகர்கள் அடுத்த நாள், விஜய்க்காக படம் பார்த்ததாகவும், கதையில் அவ்வளவு சுவாரசியம் இல்லை என்றும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
முதல் நாள் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று கூறி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு. இருந்தபோதிலும், ரூ.500 ரூ1000 என அதிக பணம் கொடுத்தே ரசிகர்கள் பிகில் படத்தைப் பார்த்தனர்.
பிகில் படம் லாபமா? நஷ்டமா? என்று ஆராய்ந்தால் அட்லி இதுவரை இயக்கியுள்ள ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்ததாக வரலாறு இல்லை. தாங்கள் தயாரித்த அத்தனைப் படங்களிலுமே அதிக லாபங்களைப் பார்த்த தேனாண்டாள் பிலிம்ஸ் அட்லியின் கைங்கர்யத்தில்(மெர்சல்) அதலபாதாளத்தில் வீழ்ந்து கடனில் சிக்கித் தவிக்கிறது. அந்த வகையில், ஏஜிஎஸ் நிறுவனம் பிகில் படத்தில் வியாபார ரீதியாக தப்பித்துக் கொண்டது என்கின்றனர் வியாபாரத்தை கண்காணித்தவர்கள். போட்ட பணத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்துவிட்டது. ஆனால் படத்தின் விநியோக உரிமை வாங்கியவர்கள் தங்களது முதலீட்டை வசூல் மூலம் மீட்டெடுப்பதற்காக போராடி வருகின்றனர் என்பதே தற்போதைய நிலை.
கடந்த 7 நாட்களில் உலகம் முழுவதும் பிகில் படம் பெற்ற வசூல் 200 கோடி ரூபாய் என்கிறது ஒரு தகவல். பிகில் படத்தின் சர்வதேச வியாபாரம் 200 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. முதல் வார முடிவில் அந்த தொகை மொத்த வசூல் மூலம் கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதன்மூலம் தயாரிப்பாளருக்கு அல்லது விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கக்கூடிய பங்குத் தொகை 100 கோடி ரூபாய் மட்டுமே. அப்படியென்றால் எஞ்சிய 100 கோடி ரூபாய் கிடைப்பதற்கு இன்னும் 200 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆக வேண்டும். இதுதான் எதார்த்த நிலைமை. மொத்த வசூலை சாதனை அளவாக இங்கே குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இதை நம்பி ஏமாறும் ரசிகர்கள், தங்களது நட்சத்திரத்தின் மார்க்கெட்டைப் பற்றிப் பேசி மற்றவர்களிடம் சண்டைக்கு நிற்கின்றனர்.
தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட ரூ.73 கோடி வாங்கி அதனை 83 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்திருக்கிறது ஸ்கிரீன்சென் நிறுவனம். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் பிகில் படம் வசூலித்த மொத்த தொகை சுமார் 120 கோடி என்றாலும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் இல்லை என்பதைக் காட்டிலும் அசல் தேறவில்லை என்பது தான் கள நிலவரம்.
திருநெல்வேலி பகுதியில் சுமார் 5.5 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது. 5.25 கோடி ரூபாய்க்கு இப்பகுதி ஏரியா உரிமையை வாங்கிய வினியோகஸ்தர் நஷ்டம் இல்லாமல் முதலீட்டை எடுக்க வேண்டும் என்றால் சுமார் 9 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆக வேண்டும். முதல் வாரம் கிடைத்தது 5.50 கோடி ரூபாய் மட்டுமே. இரண்டாவது வாரம் திரையரங்குகள் குறையத் தொடங்கும். அப்போது வினியோகஸ்தருக்கான பங்குத் தொகை குறையத் தொடங்கும்.
ஆக, பிகிலுக்காக முதலீடு செய்த பணம் முழுமையாக திரும்ப கிடைக்க வாய்ப்பேயில்லை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இப்போதைய வசூல் நிலவரப்படி, பிகில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சுமார் ரூ.40 கோடி வரை வசூல் மூலம் பங்குத் தொகை கிடைத்தால் நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
இது சம்பந்தமாக தொடர்ச்சியாக இத்தொழிலில் இருந்துவரும் சிலரிடம் கேட்டபோது பிகில் படத்தின் முதல் வார மொத்த வசூல் நியாயமான ஒன்று. நடிகர் விஜய் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் தீபாவளி பண்டிகை இவற்றின் மொத்த அறுவடை தான் சுமார் 110 கோடி ரூபாய் என்கின்றனர்.
படம் படைப்பு ரீதியாக பொதுமக்களை கவர்கின்ற வகையில் இருந்தால், இந்த படம் தியேட்டரில் 4 வாரங்கள் ஓடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அப்போது இவர்கள் எதிர்பார்ப்பது போன்று மொத்த வசூல் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.
ஆனால், இன்றைய கால கட்டத்தில் ஒரு புதிய படத்தின் வசூல் ஆயுள்காலம் முதல் வாரம் மட்டுமே என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அதையும் முறியடித்து சில படங்கள் இங்கு வெற்றி பெறுவதும் வசூலிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பிகில் படத்தைப் பொருத்தவரை அதிக விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியதால் முதலீட்டை மீண்டும் எடுக்க கடுமையான போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். போட்டி மனப்பான்மையை கைவிட்டு இது போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை நியாயமான விலைக்கு வாங்குவதற்கும் முயற்சித்தால் நடிகருடைய சம்பளம் உயராது. பொதுமக்களிடம் முதல் வாரம் அநியாய விலைக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வாங்க வேண்டிய கட்டாயம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படாது.
-இராமானுஜம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக