வெள்ளி, 1 நவம்பர், 2019

விக்கிரவாண்டி தோல்வி: ஸ்டாலினோடு உரசும் திருமாவளவன்

விக்கிரவாண்டி தோல்வி: ஸ்டாலினோடு உரசும் திருமாவளவன்
மின்னம்பலம் : அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனிடம் சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணியின் தவறான வியூகத்தால் தோல்வி அடைய நேர்ந்தது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இதை நான் சுயவிமர்சனமாகவே முன் வைப்பது என் கடமை. திமுகவுக்கும் அதிமுகவுக்குமான தேர்தல் அரசியல் எங்கள் கூட்டணியின் தேர்தல் உத்தியால் திமுகவுக்கும் சாதீய சக்திகளுக்கான களமாக மாறிவிட்டது.
திமுக திடுமென வன்னியர் சமுதாயத்துக்கான ஓர் அறிக்கையை வெளியிட்டது. அது வரையிலும் பாமக களத்துக்கே வராத நேரம். இன்னும் சொல்லப் போனால் பாமகவை முன்னிலைப்படுத்தாமல் அதை அமைதியாக வைத்திருக்க அதிமுக ஒரு உத்தியைக் கையாண்டது. திமுக இந்த அஸ்திரத்தைக் கையிலெடுத்தவுடனே பாமக வேகமாக களத்தில் இறங்கியது.
இதன் மூலம் திமுகவா பாமகவா என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் என்பது வன்னியர் அல்லாத தலித் அல்லாத சமூகத்தினரில் ஏற்படுத்திய பாதிப்பும் இந்த தோல்விக்குக் காரணம்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள் வந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்றே, விக்கிரவாண்டி: திமுக வீழ்ந்தது எப்படி? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.
அதில், “அக்டோபர் 7 ஆம் தேதி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதாகவும், திமுக வன்னியர்களுக்கு செய்த சாதனைகள் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டார். இதுதான் விக்கிரவாண்டி தேர்தலை சாதிக் களமாக மாற்றிவிட்டது என்று திமுகவின் அபிமானிகள் பலரும் கவலைப்பட்டார்கள்.
வன்னிய சமுதாய எண்ணிக்கைக்கு சற்றே குறைவாக தலித் சமுதாயத்தினர் இருக்கும் நிலையில், தனது கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தபோதும் வன்னியர்களுக்கு திமுக செய்திருக்கும் நன்மைகள் குறித்து தொடர்ந்து ஸ்டாலின் விவாதித்ததை விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல தொகுதியில் உள்ள தலித் மக்களும் ரசிக்கவில்லை. கூட தலித் அல்லாத, வன்னியர் அல்லாத மக்களும் ரசிக்கவில்லை. தவிர திமுகவின் ஜெகத்ரட்சகன், செல்வகணபதி உள்ளிட்டோர் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது ராமதாஸுக்கு பதில் சொல்வதையே முக்கிய கடமையாக கருதினார்கள். ‘ ஐயா ராமதாஸ் இல்லாமல் என் வீட்டுல ஒரு கல்யாணம் கூட நடந்ததில்ல’ என்றெல்லாம் செல்வகணபதி பேசியதை வன்னியர்களும் நம்பவில்லை, வன்னியர்கள் அல்லாதோர் ரசிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இதே கருத்தையே எட்டு நாட்களுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். இதை சுய விமர்சனம் என்ற சொல்லின் மூலம் மென்மையாக்க முயற்சித்தாலும் திருமாவளவனின் கருத்து திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளை அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் சரிக்கட்டி விட்டார் என்று தேர்தலுக்கு முன்பே செய்திகள் வந்தன. அதேநேரம் தேர்தல் பணிகளில் தங்களை திமுக புறக்கணிப்பதாக சிறுத்தை நிர்வாகிகளும் கூறிவந்தனர்.
இந்நிலையில் பாமகவை எதிர்த்து திமுக பேசப் போய் விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவுக்கு எதிர் நிலை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது விக்கிரவாண்டி இடைத்தேர்தல். இப்போது திருமாவளவனுக்கு பதில் அளித்து திமுகவில் யார் அறிக்கை கொடுப்பார்கள் என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படும் கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக