செவ்வாய், 5 நவம்பர், 2019

கீரீஸ்: குளிரூட்டப்பட்ட வாகனத்தில் இருந்து 41 அகதிகள் மீட்பு

கீரீஸ்: குளிரூட்டப்பட்ட வாகனத்தில் இருந்து 41 அகதிகள் மீட்பு தினத்தந்தி :  கிரீஸ் நாட்டில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 41 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏதென்ஸ், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவதற்காக வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அந்த நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் பல நாடுகள் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.
இவற்றை மீறி சட்டத்துக்கு புறம்பான வகையில் கன்டெய்னர்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்குள் அகதிகள் மறைத்து வைக்கப்பட்டு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு கடத்தப்படுகிறார்கள். பல மணி நேரம் அல்லது நாள் கணக்கில் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அகதிகள் இறந்துவிடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் கண்டெய்னர் லாரிக்குள் 39 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் கிரீஸ் நாட்டில் இதே போன்ற குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றில் 41 அகதிகள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு கிரீஸ் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனம் ஒன்றில் அகதிகள் கொண்டு செல்லப்படுவதை கண்டுபிடித்தனர்.

அவர்களில், சிலரின் உடல்நிலையை பரிசோதனை செய்ய அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மற்றவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக