செவ்வாய், 5 நவம்பர், 2019

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ..... பலவிதமான கருத்து கணிப்புக்கள் .. ஜீவனின் ஆய்வு கட்டுரை!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடக்க இருக்கிறது.  அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்களில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. ஏராளமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பிரதான வேட்பாளர்களாக இருப்பது கோத்தபாயா ராஜபக்ச. சஜித் பிறேதாசா.மற்றும் அனுரா குமார திசநாயக்க ஆகியோரே .. 
கோத்தபாயா ராஜபக்சா  - .சஜித் பிரேமதாசா  -. அனுரா குமார திசநாயக
Jeevan Prasad i : சஜித் 50 யை தாண்டி ஓடத் தொடங்கியுள்ளார்! சந்திரிகாவின் ஆதரவும் -
தமிழரசுக் கட்சியின் முடிவும் சஜித் வெல்வதை
உறுதிபடுத்திவிட்டது. கோட்டாபய பந்தயத்தில் இடம் மாறி தோல்வியை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளார்.
சிங்கள பகுதிகளில் 50க்கு 50 போல ஏட்டிக்கு போட்டியாக நூலிழையாக இருந்த போட்டி சில நாட்களுக்குள் திசை மாறி விட்டது. சந்திரிகா தரப்பு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவோடு அது தொடங்கியது. அதன்பின் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பது எனச் சொன்னதோடு அது மேலும் ஒருபடி முன்னெற்றம் கண்டுள்ளது. தமிழ் கட்சிகள் முடிவெடுப்பதற்கு முன்னரேயே பெரும்பாலான தமிழ் மக்கள் , சஜித்துக்கு வாக்களிக்கும் நிலையே கள மட்டத்தில் இருந்தது. அதை
அவர்களில் அநேகர் வெளிப்படையாக சொல்லவில்லை. மலையக - முஸ்லீம் மக்களில் பெரும்பாலானவர்கள் , சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்து இருந்தார்கள். மலையக - முஸ்லீம்களின் முக்கியமான கட்சிகள் சஜித்துக்கு பக்க பலமாக இருந்தன. ஆனால் வடக்கு - கிழக்கு தமிழ் தரப்பில் ஒரு மௌனமே இருந்தது. ஒரு சிலர் பகிஸ்கரிப்புக்கு தயாராக இருந்தார்கள். சிலர் கோரிக்கைகளை வைத்து விளையாட நினைத்தார்கள். சிலர் வெற்றியடையாத நபர்களுக்கு வாக்களிக்க பரப்புரை செய்தார்கள். அதுவும் பகிஸ்கரிப்புக்கு சமமான ஒன்றாகவே இருந்தது. அது மைதானத்தில் ஓட தயார இருப்பவனை விட்டு படுக்கையிலிருக்கும் நோயாளி கையில் பொல்லைக் கொடுத்து ஓடச் சொல்வதற்கு சமமானதான செயலாக இருந்தது. ஆனால் உண்மையான போட்டி சஜித் - கோட்டா இருவருக்கும் இடையே மட்டும்தான். இப்போது சஜித் பந்தய தடத்தில் முன்னால் ஓடத் தொடங்கி விட்டார் என்பதை அனைவரும் உணருகிறார்கள்.

தமிழ் கட்சிகள் 6 உருவாக்கிய 13 கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி அபேட்சகர்களும் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. கோட்டா ஆரம்பத்திலேயே நிராகரித்து விட்டார். ரணில் பேசலாம் வாருங்கள் என்றதற்கு விக்ணேஸ்வரன் ஜனாதிபதி அபேட்சகரோடு மட்டும்தான் பேசுவோம் என்றார். ரணில் கட்சியின் தலைவர். சஜித் கட்சியின் வேட்பாளர். இப்போது உள்ள காலம் குறுகியது. அதில் சஜித்துக்கு பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. அவர்களே பல பிரிவுகளாக பிரிந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பரிசாரியாரின் மருந்து சீட்டை வைத்து படித்து விவாதித்துக் கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல. இதனால்தான் சுமந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் அபேட்சகரையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பதாக சொல்லியிருந்தார்.
தமிழரசுக் கட்சி சஜித்துக்கு ஆதரவளிப்பதாக சொல்லும் போது பிரதமர் ரணில் , ராஜித்த சேனாரத்ன போன்ற தமிழ் மக்கள் நம்பும் தலைவர்கள் சஜித்துக்காக ஆதரவு திரட்ட வடக்கு - கிழக்கு பயணம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். இந்த நேரத்தில்தான் தமிழரசுக் கட்சியின் நல்லெண்ண ஆதரவு சமிக்கை பெரும் மாற்றமாக எழுச்சியை தந்தது. அதே நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஒருவேளை தமிழரசுக் கட்சி சஜித்துக்கு ஆதரவளிக்காமல் , அதை மீறி வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்தால் , தமிழரசுக் கட்சியி வடக்கில் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது எனும் கருத்து உருவாகியிருக்கும். அதாவது மக்கள் யார் சொல்லையும் கேட்காமல் தனித்து முடிவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள் எனத்தான் எல்லோரும் எண்ணுவார்கள். அதுதான் இன்றைய உண்மை நிலையும் கூட . மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்தும் தமிழ் கட்சிகளால் ஏமாற்ற முடியாது. அதை அனைத்து தமிழ் கட்சிகளும் உணர வேண்டும்.
எது எப்படியோ தமிழரசுக் கட்சி வடக்கு - கிழக்கு தொடர்பாக எடுத்த முடிவு , மனோ ரீதியாக கோட்டாவை குப்பற தள்ளி வீழ்த்தயுள்ளது. இது 2015ல் மகிந்த பெற்ற வாக்குகளை விட குறைந்த வாக்குகளை பெறும் நிலைக்கே தள்ளும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
உண்மையிலேயே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் போது கோட்டா 60 சதவீத ஆதரவுடனும் , சஜித் 40 சதவீத ஆதரவுடனேயே காணப்பட்டார்கள். ஆரம்பத்திலேயே போட்டியில் வேகமாக ஓடிய கோட்டா , இடையே வெற்றியின் பக்கம் மாறி , எதிர்ப்புறமாக ஓடத் தொடங்கினார். அதாவது முதன் முதலாக , அனைத்து ஜனாதிபதி அபேட்சகர்களது சந்திப்பில் கலந்து கொள்ளாமல் விட்ட போதே அவரது ஓட்டத்தின் வேகம் தாமதித்து தடையானது. அதன்பின் கோட்டாவின் முதலாவது ஊடக சந்திப்பில் , அவர் பேச முடியாத , கேள்வியொன்றுக்கு சரியாக பதிலளிக்க முடியாத , கேட்கும் கேள்விக்கு சுற்றி வளைத்து பேசும் , கேள்வியின் போது அண்ணனை உதவிக்காக நோக்கும் , ஏன் என்னிடம் மட்டும் கேள்வி கேட்கிறீர்கள் என கேள்விகளை விட்டுச் செல்ல அச்சப்படும் , தடுமாறும் ஒருவராக சாதாரண மனிதர்களால் கூட பரிகசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த ஊடக சந்திப்பின் பின் அவரது செல்வாக்கில் 5 சதவீதம் அளவு பின் சென்றார் எனலாம். அதை பார்த்து விட்டு எதிர் தரப்பினர் " இன்னொரு ஊடக சந்திப்பு நடத்துவோமா?" என நக்கல் அடிக்கவும் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் ஐதேகவினுள் இருந்த ஜனாதிபதி வேட்பாளர் பூசல் நேரத்தில் ஜேவீபீ , தனது கட்சி நிறத்தை தவிர்த்து , பொது நிறமொன்றில் களமிறங்கியது. அது ஏனையோரை கவரும் ஒரு நோக்காகவே பலராலும் அவதானிக்கப்பட்டது. அன்றைய எழுச்சி நிகழ்வு பலரை வியக்க வைத்தது. ஐதேகக்குள் தெரிந்த பூசல் காரணமாக , பலர் ஜேவீபியோடு இணையலாம் என நினைத்திருக்கலாம். அதுபோல நல்லாட்சியில் முக்கியமான ஒருவராக கருதப்படும் ஜயம்பதி ஜேவீபியில் இணைந்து மீண்டும் சஜித்திடம் திரும்பி வந்தார். அதேபோல இரு பெரிய கட்சிகளின் மேல் அதிருப்தி கொண்டோரினதும் , மிதக்கும் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கலாம் என ஜேவீபீ கணக்கு போட்டனர். அதே சமயம் சஜித் , மைத்ரியோடு இணைந்து தனியாக போய் ஜனாதிபதி தேர்தலில் நிற்கலாம் எனும் கருத்தும் ஜேவீபீ மற்றும் மொட்டு கட்சி ஆகியவற்றின் கணிப்பாக இருந்தது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் நிச்சயம் கோட்டா எந்தவொரு கடினமும் இல்லாமல் வெற்றி பெறும் சாத்தியமே அதிகமாக இருந்தது. இக் காலத்தில்தான் வாசுதேவ நாணயக்கார ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் பேசும் போது " ஐதேகவில் சஜித் வந்தால்தான் கடினம். இல்லாவிட்டால் எங்களுக்கு பிரச்சனையே இல்லை " என்றார்.
இவர்களது எண்ணங்களில் எல்லாம் மண் தூவிய நிகழ்வாக , ரணில் ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் என அறிவித்தார். அதை யாரும் கடைசி வரை எதிர்பார்க்கவில்லை. அப்போது மகிந்த நான் படித்து படித்து சொன்னேன். இவர்கள் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தனர் என சொன்னார். அதுபோதாதென கொழும்பு காலிமுகத் திடலில் அலை மோதும் கூட்டம் நிறைந்த சஜித்தின் ஆரம்ப பிரசார நிகழ்வு எல்லோரையும் வியப்புக்கு உள்ளாக்கியது.
சிங்கள மக்களது பெரும் பிரச்சனை இலங்கையின் பாதுகாப்பு பிரச்சனைதான். ஒரு யுத்தம் மற்றும் பயங்கரவாத தாக்குதலில் அவர்களும் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்துள்ளனர். அச்சம் , சாவு என்பது அனைவருக்கும் ஒன்றுதான்.எனவே கோட்டா அல்லது மகிந்தவால்தான் நாட்டின் பாதுகாப்பு தமது இனத்துக்கு நிரந்தரமாக கிடைக்கும் என்பது சிங்கள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. அதைவிட இன்னொருவர் என மக்கள் ஓரளவாவது நம்பியது பீல்ட் மாசல் சரத் பொண்சேகாவைத்தான். அந்த சந்தேகத்தை சஜித் தீர்த்து வைத்து, தான் ஜனாதிபதியாகும் போது நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை சரத் பொண்சேகா வசம் ஒப்படைப்பேன் என பகிரங்கமாக அறிவித்தார். அந்த அறிவிப்போடு ஐதேக மேல் இருந்த பாதுகாப்பு தொடர்பான அச்சம் சற்று நீங்கியது எனலாம். அது முழுமையாக நீங்கிய நாள் , கோட்டாவின் ஊடக சந்திப்பில்தான். அங்கு மீரா ஶ்ரீனிவாசன் , காணாமல் போன மக்களுக்கு என்ன நடந்தது என ஒரு இடி போன்ற ஒரு கேள்வியை கேட்டாவிடம் கேட்டார். அதை சற்றும் எதிர்பாராத கோட்டா, நானோ அல்லது மகிந்தவோ யுத்தத்தை செய்யவில்லை. யுத்தத்தை செய்தது இராணுவ தளபதிதான் என்றார். அதாவது பீல்ட் மாசல் சரத் பொண்சேகாதான் யுத்தத்தை செய்தார் என தப்ப முயன்றார். அதாவது காணாமல் ஆக்கப்பட்வர்கள் சரத் பொண்சேகாவால்தான் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என பந்தை பொண்சேகா மேல் போட்டார். போச்சுடா .... 2009ம் ஆண்டு முதல் போரின் நாயகனாக ஒரு விம்பத்தை சிங்கள மக்கள் முன் உருவாக்கி, மகிந்த கட்டி வைத்து பாதுகாத்து வந்த அந்த பெயரை , அமெரிக்க கோபுரம் தகர்த்ததை போல கோட்டா , ஒரே ஒரு நொடியில் ஒரு வாக்கியத்தில் தகர்த்து நாசம் செய்தார். அது இலகுவான ஒரு வீழ்ச்சியல்ல. அந்த வார்த்தைகளில் எல்லாமே நாறிப் போனது. போரின் வெற்றியின் நாயகன் சஜித்தோடு இருக்கும் போது, மக்கள் என்ன நினைப்பார்கள். அதோடு பெருவாரியான மக்களது ஓட்டங்கள் திசை மாறி பயணிக்கத் தொடங்கியது. அமெரிக்காவில் நடந்த வழக்கிலும் கோட்டா தன்னைக் காப்பாறிக் கொள்ள , லசந்த விக்ரமதுங்க கொலையை இலங்கை அரசே கொன்றது. நான் அரிசில் சம்பளத்துக்கு வேலை செய்த ஒரு அதிகாரி மட்டுமே என தெரிவித்ததும் மக்களுக்கு கோட்டா மேல் இருந்த மதிப்பை குறைத்தது.
இந்த நிலையில்தான் அனுர மற்றும் கோட்டாவுக்கு ஆதரவாக திரும்பியிருந்த அநேகர் , சஜித்தின் பக்கம் சரியத் தொடங்கினார்கள். இதில் இன்னொரு முக்கிய பிரச்சனை , நல்லாட்சி , திருடர்களை கைது செய்யவில்லை எனும் பேச்சு ஒரு மாபெரும் குற்றச்சாட்டாகும். இத்தருணத்தில்தான் நல்லாட்சியில் நீதி துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சரான விஜேதாச ராஜபக்ச மற்றும் FCID யின் பொறுப்பதிகாரியான ரவி வைத்தியாலங்கார ஆகியோர் கோட்டாவோடு இணைந்தார்கள். அதோடு சும்மா இருந்தார்களா? இல்லை , தாங்கள்தான் கோட்டாவை கைது செய்யவிடாமல் நல்லாட்சிக்குள் இருந்து கொண்டு தடுத்ததாக பகிரங்கப்படுத்தி மேன்மையடைய முயன்றார்கள். அது ஐதேக மேல் இதுவரை காலமும் இருந்த பழிச் சொல்லை ஓரளவு குறைந்தது. அந்த பினாத்தல்கள் கோட்டாவுக்கு மேலும் சேதத்தை உருவாக்கியது. திருடர்களும் , சட்டத்தை வளைத்தவர்களும் , கோட்டாவுக்கு ஆதரவானவர்கள். அவர்கள்தான் கோட்டாவோடு மீண்டும் வந்து இணைந்திருக்கிறார்கள் எனும் பார்வையை மக்களுக்கு கொடுத்து விரக்தியடைய வைத்தது.
அதற்கு அடுத்ததாக சஜித் பெண்களுக்கு இலவசமாக கொடுப்பதாக PAD எனும் சானட்டரி நெப்கின் விடயத்தை ஒரு மேடையில் வைத்து சொன்னார். அதைஅவர் சொல்வார் என ஐதேகவினரே எதிர்பார்க்காத விடயம்தான். அவற்றை பெண்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என பகிரங்கமாக சொன்னார். அதைக் கேட்டு மேடையில் இருந்த சிலர் முகம் சுழித்தாலும் அது பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் ஆதரவை சஜித்துக்கு தேடிக் கொடுத்தது. அதற்கு காரணம் அந்த பேச்சை வைத்து கோட்டாவின் சமூக வலைத் தளங்கள் , சஜித்தை PAD MAN என நையாண்டி செய்து ஒன்று இல்லாமல் செய்தன. ஐயோ! அவர்கள் செய்த நக்கல் அவர்களுக்கு எதிராக திடீரென மாறியது. பல பெண்கள் பகிரங்கமாக அந்த பிரச்சனை குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் சஜித்துக்கு ஆதரவாகவும் , கோட்டா தரப்பை எதிர்த்தும் , அதன் தேவை குறித்தும் பேசத் தொடங்கினார்கள். இதனால் மத்திய தர மற்றும் ஏழை மக்களுக்கு மொட்டு வெறுத்து போனது.
அடுத்து சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் , பெரும்பாலோனரது நன் மதிப்பை பெற்றது. அது ஏழை மக்களை ஈர்க்கும், நாட்டு பிரச்சனைகளை தீர்க்கும் ,சரளமாக அடிதட்டு மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு தேர்தல் விஞ்ஞாபனமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது குறித்த விமர்சனங்களை விட , ஈர்ப்பே அதிகமானது. சிலர் அது ஜேவீபி போன்ற இடதுசாரிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கூட கீழே தள்ளி வீழ்த்தி விட்டது என தெரிவித்திருந்தார்கள். ஆட்சிக்கு வர முடியாதவர்களால் எதை வேண்டுமானாலும் சொல்ல முடியும். ஆனால் ஆட்சிக்கு வரக் கூடிய சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம், மிக பலமானது என மக்கள் பேசிக் கொண்டார்கள். அது சஜித்துக்கு இன்னொரு மாபெரும் வெற்றியாகும்.
பொதுவாக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் , பொதுவான விடயங்களையும் , தமது தேர்தல் கருத்தை மட்டுமே அனைத்து மேடைகளிலும் பேசுகிறார்கள். அதில் சஜித் மிக வித்தியாசமான ஒரு நடைமுறையைக் கையாண்டார். அதாவது தான் போகும் இடத்துக்கு தேவையான பிரச்சனைகளை கணக்கிட்டு சொன்னார். பொதுவான அடிப்படை விடயங்கள் குறித்து , அப்பகுதி மக்களது அடிப்படை பிரச்சனைகளை அக்குவேறு ஆணிவேராக பிரித்து அலசி பேசினார். இவை மக்களை மிகவும் ஈர்த்துள்ளது எனச் சொல்லலாம். இது குறித்து சஜித்துக்கு இந்த அறிவு எப்படி என அவரது உதவியாளரான எனது நண்பர் ஒருவரிடம் கேட்டேன். சஜித் மற்றவர்கள் போல் இல்லை . கிராமங்கள் தோறும் போய் வந்துள்ளார். இலங்கையின் அனைத்து பகுதியின் விபரங்களையும் கோப்புகளாக்கி வீட்டு அலுமாரியில் வைத்துள்ளார். அவர் அந்த பகுதிகளுக்கு போகும் போது , அது குறித்த அறிவோடுதான் போகிறார். அந்தவகையில் சஜித் ஒரு இலங்கையின் நூலகம் என்றார். அவர் வெகு காலமாக ஹோம் வேர்க் செய்து வந்துள்ளார் என அதிலிருந்து ஊகிக்க முடிந்தது.
கடந்த தேர்தல்களின் போது அன்னத்தின் பொது அபேட்சகர்களாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு , ஜேவீபியின் ஆதரவு நேரடியாக பொண்சேகாவுக்கும் , மறைமுகமாக மைத்ரிக்கும் கிடைத்தது. இம்முறை அது ஜேவீபி சார்பில் அநுரகுமார திசாநாயக்க கேட்பதால் இல்லாமல் போயிற்று. அதேபோல தயாசிரி போன்ற மைத்ரி ஆதரவாக இருந்த சுதந்திரக் கட்சியினர் கோட்டாவின் மொட்டு கட்சியில் இணைந்ததால் குறைந்தது போல ஒரு நிலை தெரிந்தது. ஆனால் சந்திரிகா - வெல்கம சார்ந்த சுதந்திரக் கட்சியின் இன்னொரு பிரிவினரில் 80 சதவீதத்துக்கும் அதிகமான சுதந்திரக் கட்சியினர் உள்ளனர். அவர்கள் மொட்டை வெறுப்பவர்கள். மொட்டினால் சுதந்திரக் கட்சி அழிந்து போகப் போகிறது எனும் கருத்தை கொண்டவர்கள். இவர்களது வாக்குகளும் மகிந்தவின் ஆரம்பகால ஆதரவு வாக்குகள் என்பதை நாம் மறக்கலாகாது. சந்திரிகா தரப்பு , சஜித்தை ஆதரிக்க தொடங்கியதும் சஜித் "மனிதனின் முக்கிய கடமை மனிதனுக்கு சேவை செய்வதே" எனும் பண்டாரநாயக்காவின் கருத்தை பகிர்ந்தார். அதனால் இதுவரை பரம எதிரிகளான சுதந்திரக் கட்சியும் , ஐதேகவும் முதல் முறையாக தேர்தல் மேடையில் கைகோர்த்துள்ளது. இந்த உறவு மைத்ரி காலத்தில் உருவானது என்பதை மறுக்க முடியாது. எனவே சுதந்திரக் கட்சியின் ஆதரவினால் , ஜேவீபியின் தாக்கம் சஜித்துக்கு குறைந்து போனது.
கொடுக்கும் போது கொட்டிக் கொடுப்பான் என்பது போல , இந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு கிடைப்பதான செய்தி வெளியாகிறது. இதுவரை வடக்கு - கிழக்கின் வாக்குகளை கணக்கிலிடாமல் சிங்கள பகுதிகளின் வாக்குகளை மட்டும் கணிக்கப்பட்ட கருத்துகளில் , கோட்டா - சஜித்தின் 50க்கு 50 ஆக இருந்த ஆட்டம் , சஜித் 51 சதவீதத்தை இப்போதே தாண்டியுள்ளதாக தெரிகிறது. கோட்டாபய 47 சதவீதத்துக்கு குறைவாக இறங்கியுள்ளார். தமிழ் - முஸ்லீம் வாக்குகள் இல்லாமல் வெல்வதாக இருந்தால் , கோட்டாவுக்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளில் 67 சதவீத சிங்கள வாக்குகளை கோட்டா பெற வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. அது இன்று வெறும் கனவு மாத்திரமேயாகும். எனவே அன்னத்தின் சின்னத்தில் சஜித்தின் வெற்றி உறுதியாகியுள்ளதாக கருத்து கணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
- ஜீவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக