வியாழன், 24 அக்டோபர், 2019

நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

Hari Nadarvikatan.com - பி.ஆண்டனிராஜ் -எல்.ராஜேந்திரன் : நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விடவும் சுயேச்சை வேட்பாளரான ஹரி நாடார் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக நாராயணன், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக ராஜநாராயணன், ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பாக ஹரி நாடார் ஆகியோர் களமிறங்கினர்.
இந்தத் தொகுதியில் சுயேச்சைகள் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர். தொகுதியில் பதிவான வாக்குகள், நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. அதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலாகவே அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் முன்னணியிலேயே இருந்தார்.
நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளரான ராஜநாராயணனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 3,489 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரைவிட சுயேச்சை வேட்பாளர் பனங்காட்டுப் படை வேட்பாளர் ஹரி நாடார் 4,243 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஹரி நாடாரிடம் கேட்டதற்கு, ``நாங்கள் கட்சி தொடங்கி ஆறு மாதங்களிலேயே தேர்தலைச் சந்தித்தோம். அதுவும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க மற்றும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான தி.மு.க ஆகிய இரு பெரிய கட்சிகளை எதிர்த்து இடைத்தேர்தலைச் சந்தித்தோம். எங்கள் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்தோம்.
< எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே எங்களை மூன்றாம் இடத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். எங்களை நம்பி வாக்களித்த அனைவருக்கும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். அரசிடம் பேசி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயல்வோம். எங்களின் அரசியல் பயணம் தொடரும்’’ என்றார் மகிழ்ச்சியுடன். நாம் தமிழர் கட்சியினரிடம் பேசியபோது, ``நாங்குநேரி தொகுதியில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் பணத்தைக் கொட்டினார்கள். பணத்தின் மூலமாக வெற்றியை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற செயல் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறோம்’’ என்கின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது நடந்த இரண்டு இடைத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளது சீமானை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக