வியாழன், 24 அக்டோபர், 2019

அமைச்சர்களின் கடைசி நேர கைங்கர்யம்!- நாங்குநேரியில் அ.தி.மு.க வெற்றி பின்னணி

ADMK candidate Narayanan
Nanguneri boardvikatan.com - பி.ஆண்டனிராஜ் - எல்.ராஜேந்திரன் நாங்குநேரி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்து அ.தி.மு.க வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறது. அ.தி.மு.க-வின் பிரசார வியூகத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இதை அக்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க வேட்பாளராக ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன், காங்கிரஸ் சார்பாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ரூபி மனோகரன் ஆகியோர் களமிறங்கினார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜ்நாராயணன், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹரிநாடார் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் 2,56,414 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,70,624 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். மொத்தம் 66.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்குகளை விடவும் 5 சதவிகிதம் குறைவாகும்.
கடந்த 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றிருந்ததால், இந்தத் தொகுதி காங்கிரஸுக்குச் சாதகமானதாகக் கருதப்பட்டது. அதனால் இந்த முறையும் கூட்டணி பலத்தில் வெற்றியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் களமிறங்கினார்.



Congress candidate Ruby Manoharan



Congress candidate Ruby Manoharan
அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, `நாராயணன் உள்ளூர் வேட்பாளர்’ என்ற கோஷத்தை வலுவாக முன்வைத்தது. ரூபி மனோகரனை `இறக்குமதி வேட்பாளர்’ என்று தீவிரமான பிரசாரத்தை முன்வைத்தார்கள். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அத்துடன், தொகுதி முழுவதும் 15 அமைச்சர்கள் , எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் முகாமிட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்கள்.




காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருந்த இந்தத் தொகுதியில் வெற்றியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அமைச்சர்கள் வியூகம் அமைத்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். ஒவ்வொருவருக்கும் 8 முதல் 20 வாக்குச் சாவடிகள் மட்டுமே பொறுப்பாளர்களாக வழங்கப்பட்டதால் கிராமங்களில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க தரப்பில் பணம் தண்ணீராகச் செலவு செய்யப்பட்டது.



counting center



counting center
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர் ரூபி மனோகரன் தாராளமாகச் செலவு செய்ததால் கூட்டணிக் கட்சியினர் முகம் சுளிக்காமல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.




வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கும் சமயத்தில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் வாக்குக்கு ரூ.1,000 விநியோகிக்கப்பட்டது. அ.தி.மு.க-வினர் ஒரு வாக்குக்கு ரூ.2,000 கொடுத்தார்கள். பிரசாரம் ஓய்ந்த நாளில் தொகுதியை விட்டு வெளியேறிய அமைச்சர்களில் சிலர், தாங்கள் பொறுப்பு வகித்த கிராமங்களில் தங்கள் பங்காக ரூ.1000 வீதம் விநியோகித்து விட்டுச் சென்றார்கள். இது அ.தி.மு.க-வுக்கு பெரும் பலமாக அமைந்தது.

பள்ளர், காலாடி, பண்ணாடி, குடும்பன் உள்ளிட்ட 7 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி, `தேவேந்திரகுல வேளாளர்’ என அறிவிக்க வலியுறுத்தித் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அந்த சமுதாயத்தினர் ஒட்டுமொத்தமாக வாக்குப் பதிவைப் புறக்கணித்தனர். அவர்களின் வாக்குகளில் அநேகம் காங்கிரஸ் கட்சிக்கு விழக்கூடியவை என்பது ரூபி மனோகரனுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்துடன், நாராயணன் சார்ந்த `அய்யா வழி’ வழிபாட்டைப் பின்பற்றும் மக்களின் வாக்குகள் அவருக்கு ஒட்டுமொத்தமாக விழுந்தன.

பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம் முதலாகவே அ.தி.மு.க வேட்பாளர் முன்னணியில் இருந்தார். அதனால் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



counting center



counting center

நாங்குநேரி தொகுதியில் இழுபறி ஏற்படும் என்றே உளவுத்துறையும் அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்ததால், ஆளுங்கட்சியினரும் பரபரப்பான நிலையே இருக்கும் என்கிற எண்ணத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்தனர். ஆனால், தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் முன்னிலை பெற்று காங்கிரஸ் கட்சியின் வசமிருந்த தொகுதியைக் கைப்பற்றியதால் அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்த வெற்றி முகத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக