வியாழன், 3 அக்டோபர், 2019

ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ பதவி பறிபோகும்? நாளை வாக்கு மறு எண்ணிக்கை .. இன்பதுரையின் கோரிக்கை நிராகரிப்பு

admkநக்கீரன் : ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவுகளில் இன்பதுரை 69,590 வாக்குகளை பெற்றார். அப்பாவு 69541 வாக்குகளை பெற்றார். 49 வாக்குகள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவத்தது.  இந்நிலையில் 203 தபால் ஓட்டுகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்த அப்பாவு, அந்த வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. அதை மீறி தர்ணாவில் ஈடுபட்ட அப்பாவு, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரால் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து இன்பதுரை வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 203 தபால் ஓட்டுக்களை எண்ண, வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 19, 20, 21 சுற்றுகளின் வாக்கு பதிவு எந்திரங்களின் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளராக இருந்த இன்பதுரை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அதன் பின்பு, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை  நாளை காலை  11.30 மணிக்கு நடைபெறும் என உத்தரவிட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் அதிமுக எம்.எல்.ஏ பதவி இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக தலைமைக்கு இடைத்தேர்தல் வரும் நேரத்தில் இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக