வியாழன், 3 அக்டோபர், 2019

செல்போன் திருட்டுக்குப் பயிற்சி: சென்னையில் சிக்கிய வெளிமானில கும்பல்

ரவி, நானி, ராகுல், ஏசு, துர்கா, சாயி, ஸ்ரீனு, ராகேஷ், ஆலா மகேஷ், வெங்கடேஷ், பிண்டி ராஜூ ஆகிய அந்த 10பேர் கும்பல்
செல்போன் திருட்டுக்குப் பயிற்சி: சிக்கிய கும்பல்!மின்னம்பலம் : சென்னையில் செல்போன்களைத் திருடுவதற்குப் பயிற்சி அளித்த கும்பலைக் காவல் துறை கைது செய்துள்ளது பொதுமக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் சாலையில் நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறித்துச்செல்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலையுயர்ந்த போன்களைப் பறிகொடுப்பது மட்டுமின்றி அதில் இருக்கும் விவரங்களையும் பறிகொடுக்கும் நிலை உருவாகும். இந்தச் சூழலில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபடும் நபர்களை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
அதன்படி சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆந்திர கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூக்கடை பகுதியில் சந்தேகப்படும்படியாகச் சுற்றித் திரிந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை போலீசார் கண்காணித்துப் பின்தொடர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்தே ஒட்டுமொத்த கும்பலும் சிக்கியிருக்கிறது.

அந்த நபரை பின் தொடர்ந்து சென்று பார்த்ததில், சோழவரத்தில் ஒரு வீட்டில் தன்னிடம் இருந்த செல்போன்களை இன்னொருவரிடம் ஒப்படைக்கும்போது போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அந்த வீட்டைச் சோதனை செய்ததில் பல செல்போன்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்தக் கும்பல் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், சென்னையில் செல்போன்கள திருடி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக சுமார் 10 பேர் திருட்டு செல்போன்களை எடுத்து வந்திருக்கின்றனர். இதையடுத்து ரவி, நானி, ராகுல், ஏசு, துர்கா, சாயி, ஸ்ரீனு, ராகேஷ், ஆலா மகேஷ், வெங்கடேஷ், பிண்டி ராஜூ ஆகிய அந்த 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இந்தக் கூட்டத்துக்குப் பயிற்சி அளிப்பது விஜயவாடாவைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்திருக்கிறது.
ரவி தலைமையில் இந்தக் கும்பல் சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்தக் கும்பலுக்கு ரவி ஆறு மாதங்கள் பயிற்சி அளித்திருக்கிறார். கூட்ட நெரிசலில் நின்றுகொண்டு செய்தித்தாள் படித்துக்கொண்டே செல்போன் திருடுவது, கைக்குட்டையை உதறி தோள்மீது போடுவது போல் அருகில் இருப்பவரின் செல்போனைத் திருடுவது என எப்படி செல்போன்களைத் திருடுவது எனப் பயிற்சி அளித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்தக் கொள்ளை கும்பலுக்கு ரவி விடுமுறையும் அளித்துள்ளார். வார நாட்களில் திருட்டில் ஈடுபடும் இந்தக் கும்பலுக்கு வார இறுதியில் விடுமுறையாம். மேலும் வாரத்துக்கு இத்தனை செல்போன்கள் திருட வேண்டும் என்று இலக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் போனஸ் வேறு. முன்கூட்டியே சம்பளம் கொடுப்பது மட்டுமின்றி திருட்டு செயலில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் திருடும் போன்களில் இரண்டு அல்லது மூன்று போன்களை போனஸாகக் கொடுப்பது ரவியின் வழக்கம். குறைந்தபட்சம் வாரம் 50 செல்போன்கள் என கடந்த இரண்டு வருடங்களில் 5,000 செல்போன்களை இந்தக் கும்பல் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 2) பிடிபட்டபோது அவர்களிடம் இருந்து சுமார் 40 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்க யானை கவுனி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரைத் தேடி வரும் போலீசார், சாலைகளில் செல்லும்போது செல்போன்களைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக