சனி, 26 அக்டோபர், 2019

விக்கிரவாண்டி ..திமுகவுக்கு தலித் வாக்காளர்கள்தான் அதிக வாக்குகளை அளித்திருக்கிறார்கள்

விக்கிரவாண்டி: திமுகவின் கௌரவத்தைக் காப்பாற்றிய தலித் மக்கள்!விக்கிரவாண்டி: திமுகவின் கௌரவத்தைக் காப்பாற்றிய தலித் மக்கள்! மின்னம்பலம் : விக்கிரவாண்டி   சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் ஆய்வுக்கும் விவாதத்துக்கும் உட்ப்டுத்தப்பட்டு வருகின்றன. தொகுதிக்குள் இருக்கும் 275 வாக்குச் சாவடிகளில் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் திமுகவுக்கு வாக்கு அதிகம் விழுந்திருக்கிறது என்ற பட்டியலைத் தயாரித்துவிட்டார்கள் திமுகவினர்.
275 வாக்குச்சாவடிகளில் 21 வாக்குச்சாவடிகளில் மட்டும்தான் திமுக வேட்பாளர் புகழேந்தி கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி நகரம் தவிர வெங்காமூர், சங்கீதமங்கலம், செலவானூர், அன்னியூர், டட் நகர், அரியலூர் திருக்கை, நங்காத்தூர், அகரம் சித்தாமூர், நரசிங்கனூர், வி.சாத்தனூர், தொரவி, ரெட்டிகுப்பம், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 18 வாக்குச்சாவடிகளும் தலித் வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகள் ஆகும்.
21, 35,36,44,59,60,66, 101, 123, 136,155,206,207, 219, 236,243, 245,246,249,250,261,263 ஆகிய வாக்குச் சாவடிகளில் மட்டுமே திமுக அதிக ஓட்டு வாங்கியுள்ளது.
மீதியுள்ள 254 வாக்குச் சாவடிகளிலும் திமுக பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதிலும் சுமார் ஐம்பது சதவிகித வாக்குச் சாவடிகளில் திமுகவை விட அதிமுக கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட திமுக பிரமுகர்கள் சிலர், “எங்கள் தலைவர் ஏதோ வன்னியர்கள்தான் தங்கள் வாக்குகளை திமுகவுக்கு அள்ளிக் கொட்டிவிடப் போகிறார்கள் என்பது மாதிரி வன்னியர்களைப் பற்றியே அதிகம் பேசினார். பிரச்சாரக் களத்திலும் திமுக வன்னியர் பிரமுகர்களை அதிகம் ஈடுபடுத்தினார். இருபது சதவிகித இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி திமுகவுக்கு தலித் வாக்காளர்கள்தான் அதிக வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இதைத்தான் இந்த வாக்குச் சாவடி வாரியான புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. திமுக வன்னியர்கள் பின்னால் போனது. ஆனால் வன்னிய சமுதாயத்தினர் அதிமுக பக்கம் வாக்களித்துவிட்டனர். ஆனால் தலித் மக்கள்தான் திமுகவுக்கு 19 வாக்குச் சாவடிகளில் முன்னிலை அளித்து கௌரவமான இடத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக