சனி, 26 அக்டோபர், 2019

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்: நலமாக இருப்பதாகத் தகவல்- 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் மீட்புப் போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கைவிடப்பட்ட 26 அடி ஆழ ஆழ்குழாய் குழியில் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்தார்.
6 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் குழந்தை நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த இடத்தில் இருந்து வருகிறார், குழந்தை நலமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு தைரியம அளிக்கும் விதமாக உறவினர்கள் பேசி வருகின்றனர், குழந்தையிடமிருந்தும் எதிர்வினை வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
மதுரையிலிருந்து மணிகண்டன் என்பவர் தயாரித்த சிறப்புக் கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிவிட்டரில் =save sujith என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. குழந்தைகாக அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி. இவர்களது மகன் சுஜித் வில்சன் (2).

 .hindutamil.in/:  பிரிட்டோ ஆரோக்கியராஜ் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் வீட்டருகிலேயே வயலும் வைத்துள்ளார். பாசனத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்குழாய் கிணறு தோண்டியுள்ளார். ஆனால், தண்ணீர் கிடைக்காததால் அந்த ஆழ்குழாய் கிணற்றை மூடிவிட்டாராம். கைவிடப்பட்ட அந்த ஆழ்குழாய் கிணற்றைச் சுற்றி தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஆழ்குழாய் குழியில் மூடியிருந்த மண் உள்வாங்கியது தெரியாமல் அந்தப் பகுதியில் மாலை 5.30 மணியளவில் சுஜித் வில்சன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழ்குழாய் கிணறு குழியில் தவறி விழுந்துவிட்டார்.
இதைக் கண்ட கலாராணி கதறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர்.

தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில் மணப்பாறை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஒருங்கிணைந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவ்வப்போது சிறுவன் கைகளை அசைத்த நிலையில், குழாய் மூலம் ஆழ்குழாய்க்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

ஆழ்குழாய் குழியில் 26 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ள நிலையில், ஆழ்குழாய் கிணறு பக்கவாட்டில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டியபோது சுமார் 12 அடி ஆழத்தில் பாறை குறுக்கிட்டதால் பிரத்யேக கருவிகள் மூலம் அதை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 28 அடி ஆழம் வரை பக்கவாட்டில் பள்ளம் தோண்டி சிறுவனை மீட்க முயற்சி நடைபெற்று வந்தது, ஆனால் மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர் வடிவமைத்த பிரத்யேக கருவி வருகையினால் பக்கத்தில் பள்ளம் தோண்டும் முயற்சி கைவிடப்பட்டு கருவியின் மூலம் சுர்ஜித்தை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சிறுவன் பயந்துவிடாமல் இருப்பதற்காக அவரது பெற்றோரும், உறவினர்களும் ஆழ்குழாய் குழிக்கு அருகில் இருந்தவாறு பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

பிரத்யேக மீட்புக் குழு வருகை..
ஆழ்குழாய் குழியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரத்யேக குழுவினர் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து வந்து சிறுவனை மேலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தையை மீட்க மேலும் ஒரு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் இருந்து பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
குழந்தை மீட்கப்பட்டவுடன் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக