சனி, 26 அக்டோபர், 2019

மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி முயற்சி?

சிவசேனாவை அழைக்கும் காங்கிரஸ் -மராட்டிய திருப்பம்!மின்னம்பலம் : சிவசேனாவை அழைக்கும் காங்கிரஸ் -மராட்டிய திருப்பம்! இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் மாறி வரும் அரசியல் மேகங்கள் நாட்டையே கவனிக்க வைத்திருக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 106 இடங்களிலும், அதோடு கூட்டணி வைத்த சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேநேரம் காங்கிரஸ் 44 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. பாஜகவுடன்  சிவசேனா கூட்டணி அமைத்திருந்தாலும் தேர்தல் பரப்புரைக் களத்திலும் சரி, தேர்தலுக்குப் பிறகும் , தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னாலும் பாஜகவை சிவசேனா கடுமையாகத் தாக்கியே வருகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் இன்று வெளிவந்த சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில், ‘பாஜக அரசுக்கு எதிரான மக்களின் கோபம் கடுமையாக வெளிப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேநேரம் அமைய இருக்கும் அரசில் சிவசேனாவும்- பாஜகவும் சம பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லித்தான் கூட்டணி அமைத்தோம். அதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் முடிவுகளுக்குப் பின் தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக தரப்பில் இருந்து இதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. டெல்லி தலைமை ஹரியானாவில் அரசு அமைப்பதில் திவீரமாக இருக்கிறது.
இதற்கிடையில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பாபாசாஹிப் தரோட் இன்று (அக்டோபர் 25) கூறியுள்ள ஒரு தகவல் இந்திய அரசியலையே புரட்டிப் போடும் அளவுக்கு பேசப்பட்டு வருகிறது.
“சிவசேனா கட்சியிடம் இருந்து இதுவரை எங்களுக்கு இதுவரை எந்த ப்ரபோசலும் வரவில்லை. அப்படி ஒருவேளை வந்தால் அதுபற்றி டெல்லி தலைமைக்குத் தெரிவித்து அதற்கேற்ற வகையில் செயல் திட்டங்களை அமைப்போம்” என்று மாநில காங்கிரஸ் தலைவர் கூறியிருக்கிறார். இது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இப்போதைய கணக்குப்படி 288 இடங்கள் கொண்ட மராட்டிய சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 145 பேர் ஆதரவு வேண்டும். பாஜக 106 இடங்களில்தான் வெற்றிபெற்றிருக்கிறது. 56 இடங்கள் வெற்றிபெற்றுள்ள சிவசேனாவின் உறுதியான ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும்.
ஆனால் இதற்கு சிவசேனா சில முக்கியமான நிபந்தனைகளை பாஜகவுக்கு வைத்திருக்கிறது. பால் தாக்கரேவின் பேரனும் சிவசேனாவின் யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரேவை முதல் இரு வருடங்களுக்கு முதல்வர் ஆக்க வேண்டும். மீதியுள்ள பதவிக் காலத்தில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும். இந்த அரசின் ஐந்தாண்டுகளிலும் உள்துறை அமைச்சகம் சிவசேனாவிடம்தான் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவிடம் சிவசேனா வைத்திருக்கும் நிபந்தனை.
< இந்த நிபந்தனைகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றால்... இதே நிபந்தனைகளை முன் வைத்து காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சியையும் திரை மறைவில் சிவசேனா மேற்கொண்டு வருகிறது.
இதற்கான ஒரு சமிக்ஞையாகத்தான், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர், ‘சிவசேனாவிடம் இருந்து ப்ரபோசல் வந்தால் டெல்லி தலைமையிடம் பேசுவோம்’ என்று பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.
ஏற்கனவே ஹரியானாவில் ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காமல் பாஜக சுயேச்சைகளை வளைத்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் மீண்டும் பாஜக ஆட்சி அமையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக