திங்கள், 28 அக்டோபர், 2019

ஜோதிமணி : மக்களை ஏமாற்றும் செயல்!... bbc : சுஜித் மீட்பு: போர்வெல் மூலம் புது முயற்சி, தோண்டி முடிக்க 16 மணி நேரமாகும் ஏற்கனவே 63 மணி நேரம் ...


மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், குழந்தை அதே இடத்தில நீடிப்பதாகவும், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கள்கிழமை) காலையில் மீட்புப் பணி நடக்கும் இடத்துக்கு வந்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்த பகுதி பாறை நிறைந்த பகுதி என்பதால் மீட்புப் பணி பெரும் சவாலை சந்தித்து வருகிறது' என்று தெரிவித்தார்.
குழந்தை சுஜித் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 40 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், முழுமையாக குழி தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும் என்று தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்தில் 500 செ.மீட்டர் ஆழம் செல்வதாக கூறினார் ராதாகிருஷ்ணன். இந்த பணியை கண்டிப்பாக கைவிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். தவறான தகவல்கள் பரவக்கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாகவும் இருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதிய பள்ளத்தால் குழந்தை மீது மண் விழுந்ததாக கூறிய அவர், பலூன் தொழில்நுட்பம் மூலம் மீட்பதிலும் சிரமம் உள்ளது என்று தெரிவித்தார்.
குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற கவனத்தில் மீட்புப்பணி நடந்து வருவதாக ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

சுஜித் வில்சனுக்காக பிரார்த்திப்பதாகவும், மீட்புப் பணகள் குறித்து தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பேசியதாகவு பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார். பிரதமரிடம் மீட்புப் பணிகள் பற்றிப் பேசியதாகவும், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றுடன் மூன்று அமைச்சர்களும் மீட்புத் தலத்தில் இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், 4வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழியை தோண்ட பயன்படுத்தப்பட்ட 'ரிக்' இயந்திரத்தின் செயல்திறன் இதற்கு போதவில்லை என்பதால் நேற்று இரவு இரண்டாவது 'ரிக்' இயந்திரம் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்தது.
இந்நிலையில், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று எமது செய்தியாளர் மு.ஹரிஹரன் களத்தில் இருந்து தெரிவித்தார். இதனால் சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழி தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதிய முயற்சி - சிக்கலான பணி

350 நியூட்டன் திறனுள்ள இரண்டாவது ரிக் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை பகல் 2.30 மணி அளவில் 45 அடிவரை மட்டுமே துளையிட முடிந்தது. குழந்தை விழுந்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் அதிர்வு ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவே ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ஆனால், கடினமான பாறையை ரிக் இயந்திரம் மூலம் துளையிடுவது மிகுந்த நேரம் பிடிக்கிறது என்பதால், மாற்றுத் திட்டத்தில் இறங்கியுள்ளது மீட்புக் குழு.
குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 3 மீட்டர் தூரத்தில் இடப்படுகிற இந்த மீட்புக் குழியின் அகலம் 1 மீட்டர். தற்போது துளையிடும் பணியில் போர்வெல் இயந்திரம் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் 6 அங்குலம் அகலமுள்ள சில குழிகளை இந்த ஒரு மீட்டர் வட்டத்தில் இடும். பிறகு ரிக் இயந்திரம் அந்த 5 அடி ஆழத் துளையில் பாறைகளை நொறுக்கி வெளியேற்றும்.
மீண்டும் போர் வெல் இயந்திரம் 5 ஆழத்துக்கு சில துளைகளை இடும். தற்போதுள்ள 45 அடி ஆழத்தில் இருந்து சுமார் 80 அடி வரை ஐந்து ஐந்து அடிகளாக ஒரு மீட்டர் அகலத்தில் ஓட்டை போட்டுச் செல்லவேண்டும்.
பிறகு ஆட்களை இறக்கி அங்கிருந்து பக்கவாட்டில் துளையிட்டு குழந்தை மாட்டியிருக்கிற இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்க வேண்டும். ஒவ்வொரு ஐந்தடி ஆழத்துக்கும் சில குழிகளைப் போட போர் வெல் இயந்திரம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். பிறகு அந்தக் குழியில் இருந்து பாறையை உடைத்து அகற்ற ரிக் இயந்திரம் அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, குழந்தை இருக்கும் இடத்தை அடைய சுமார் 16 மணி நேரம் ஆகலாம் என்று தெரிகிறது என்கிறார் களத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஹரிஹரன்.

குழந்தை ஆடையை கட்டியணைத்து அழும் தாய்

குழந்தை சுஜித் வில்சனின் தாய் கலா மேரி குழந்தை குழியில் விழும் முன்பு அணிந்திருந்த ஆடையை கட்டிப் பிடித்தவாறே அழுது கொண்டிருக்கிறார். அவர் உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருப்பதால் அவரது உடல் நிலையை கவனிக்கும் பணியும் ஒருபுறம் நடந்துவருகிறது. காலை முதல் குழந்தை சுஜித்திடம் அசைவு இல்லை. என்றாலும் நம்பிக்கையோடு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணி நடந்து வருகிறது.
இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்து வந்தாலும் கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார்.
சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
''தண்ணீர் தேவைக்காக தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறு, நீரின்றி போனதால் முடப்பட்டது. ஆனால், தற்போது மழை பெய்வதால், மண்ணால் மூடப்பட்டிருந்த இந்த ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் அகன்றுள்ளது. அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சுஜித் உள்ளே விழுந்துள்ளான்," என்று சம்பவத்தை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
முன்னதாக, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக