திங்கள், 28 அக்டோபர், 2019

சசிகலா தூதை ஏற்றுக்கொண்டேன்: எடப்பாடி பழனிசாமி! தினகரன் தவிர்ந்த ஏனைய அதிமுக கோஷ்டிகள் ஒற்றுமை?

சசிகலா தூதை ஏற்றுக்கொண்டேன்: எடப்பாடி பழனிசாமிமின்னம்பலம் : அதிமுக-அமமுக அரசியல் உள்விவகாரங்களை தொடர்ந்து மின்னம்பலத்தில் பதிவு செய்துவருகிறோம். இதைத் தொடர்ந்து, சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவுக்குள் சேர்ப்பது குறித்து பொதுக்குழு தீர்மானிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இணைப்பின் முக்கியமான கட்டமாகக் கடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அமமுக போட்டியிடாவிட்டாலும் அதிமுகவுக்கு ரகசிய ஆதரவு அளிக்கச் சொல்லி சசிகலா உத்தரவிட்டதையும், தினகரன் அதை நிறைவேற்றியதையும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 28) காலை 7 மணிப் பதிப்பு டிஜிட்டல் திண்ணையில் எடப்பாடி வலையில் மூவர் - அமமுக மீது அடுத்த அட்டாக் “அதிமுகவையும் அமமுகவையும் இணைப்பதற்கான பல அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில், ஒருவேளை இரு கட்சிகளும் இணைந்துவிட்டால் அப்போதும் தனக்குரிய முக்கியத்துவம் குறையக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் உறுதியாக இருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து இருவருமே சில காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும், பல முக்கிய தகவல்களையும் அதில் சொல்லியிருந்தோம்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் மாரடைப்பால் நேற்று மாலை உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான தேவூர் அம்மாபாளையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்றிரவே அனைத்து அமைச்சர்களும் விரைந்து சென்று முதல்வரின் மாமனாருக்கு அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் கே.பி.அன்பழகன் மகனுக்கு திருமணம் வைத்துள்ளதால், துக்க வீட்டுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அவர் மட்டும் செல்லவில்லை. நேற்றிரவு 11 மணியளவில் காளியண்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று வர முடியாத பலரும் துக்கம் விசாரிப்பதற்காக இன்று தேவூர் அம்மாபாளையத்திலுள்ள முதல்வரின் மாமனார் வீட்டுக்குச் சென்றனர். முதல்வரும் அங்கேயே இருந்தார்.
மதியம் 1 மணியளவில் தமாகா தலைவர் வாசன் துக்கம் விசாரிக்க வந்தார். அவரிடம் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என எடப்பாடி கூற, துக்க வீட்டில் நான் சாப்பிடுவதில்லை என்று வாசன் சொன்னார். இதனால் வாசன் மற்றும் அவருடன் வந்த 50 பேருக்கு ஹோட்டலில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்பிறகு முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை ஆகியோர் எடப்பாடியுடன் அமர்ந்து பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசினர். அப்போது, எடப்பாடியிடம் பொன்னையன், ‘புகழேந்தி வந்து பார்த்துவிட்டுப் போனாரே? ஏதாவது விஷயமா’ என்று கேட்டார்.
அதற்கு எடப்பாடி அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாகவே, “சின்னம்மா (சசிகலா) சொல்லித்தான் என்னைப் பாக்க வந்ததா சொன்னாரு. தகுதி நீக்கம் பண்ணுன எம்.எல்.ஏ.க்கள மறுபடியும் அதிமுகவுல சேர்த்துக்கணும் . அவங்களுக்கு கட்சியில பொறுப்பு கொடுக்கணும். 2021 எலெக்‌ஷன்ல அவங்க எல்லாருக்கும் சீட் கொடுக்கணும்னு சசிகலா சொல்லி அனுப்பியதா புகழேந்தி சொன்னாரு. இதுபற்றி நான் ஓபிஎஸ்கிட்டயும் பேசினேன். அவரும் சரிதான், பண்ணிடலாம்னு சொல்லிட்டார். அதனால, நானும் புகழேந்திகிட்ட உத்தரவாதம் கொடுத்து அனுப்பிருக்கேன்” என்று சொன்னார்.
அப்ப தினகரனும் நம்மகூட சேர்ந்துடுவாரா என்று அவர்கள் கேட்க, “தினகரனை மட்டும் சேர்த்துக்க முடியாதுனு நான் கண்டிப்பா சொல்லிட்டேன். புகழேந்தியும் உங்களுக்கு வேண்டாம்னா சரிதான். நான் சின்னம்மாகிட்ட சொல்லிடுறேன்னு போயிருக்காரு” என்றிருக்கிறார் எடப்பாடி.
சுற்றியிருந்து கேட்டவர்கள் திரும்பவும் தயக்கத்துடன், இதெல்லாம் நடந்தா நமக்கு நல்லதாண்ணே என்று கேட்க, கட்சிக்கு நல்லதுனா, நமக்கும் நல்லதுதானே என்று சிரித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக