வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை

நீட் தேர்வுநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைமாலைமலர் : நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மாணவன் உதித் சூர்யா மற்றும் ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படம்!
தேனி: சென்னை தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா (வயது 21). மும்பையில் உள்ள ஒரு மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். இவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதும், மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததும் தெரிய வரவே தேனி க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டுள்ளதால் அருகில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்து வெங்கடேசன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டது தெரிய வந்துள்ளது.

 இந்த ஆள் மாறாட்ட புகாரில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த உதித் சூர்யா மும்பையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.


அந்த மையத்தின் சார்பிலேயே நீட் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளார். எனவே அந்த மையத்தின் நிர்வாகிகளுக்கும் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் வேறு எந்த தேர்வுக்கும் இல்லாத அளவில் நீட் தேர்வுக்கு கடுமையான கெடுபிடிகள் இருந்தது. எனினும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்தது வரை எப்படி யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை? என்பது புதிராக உள்ளது. மும்பையைச் சேர்ந்த ஒரு மாணவரை தேர்வு எழுத வைத்து அவரையே கலந்தாய்விலும் பங்கேற்க வைத்து அதன் பின்னர் உதித் சூர்யா தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

கல்லூரியில் சேரும்போது மாணவன் பிளஸ்-2 தேர்வில் வாங்கிய மதிப்பெண் சான்றிதழ், நீட் தேர்வு ஹால்டிக்கெட், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை ஆய்வு செய்திருந்தாலே முறைகேட்டை கண்டுபிடித்திருக்க முடியும். கல்லூரியில் சேர்ந்த பல மாதங்கள் கழித்து ஆள் மாறாட்ட விவகாரம் வெளிவந்துள்ளது பேராசிரியர்களையும் மற்ற மாணவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே இந்த சம்பவத்தில் பல அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உதித் சூர்யாவின் நீட் தேர்வு ஹால்டிக்கெட், கவுன்சிலிங் கடிதம், கல்லூரி சேர்க்கைக்கான அனுமதி கடிதம் ஆகியவற்றில் ஒரே விதமான புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. சேர்க்கை ஆணைக்கு பிறகு கல்லூரியில் சேர 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அப்போதுதான் உதித் சூர்யா தனது புகைப்படத்தை மாற்றி கல்லூரியில் சேர்ந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதே போல வேறு மாணவர்கள் யாரேனும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதால் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்ய சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

மாணவன் தங்கி இருந்த விடுதியில் வேறு ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா? என்றும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அவருடன் நெருங்கிய நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்களிடையே நடந்த ஜாலியான உரையாடலின்போது, உதித் சூர்யாவிடம் எங்கு நீட் தேர்வு எழுதினாய்? என மாணவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு மும்பை என கூறியபோது எதற்காக அங்கே எழுதினாய்? என தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த உதித் சூர்யா தான் ஆள் மாறாட்டம் செய்து பணம் கொடுத்துதான் நீட் தேர்வு எழுதினேன். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

அதன் பிறகு மாணவர்கள் உதித் சூர்யாவின் ஹால்டிக்கெட்டை சோதனை செய்தபோது வேறு மாணவனின் புகைப்படம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகியோரின் செல்போன் எண்களை சேகரித்து அவர்கள் எங்கே தங்கியுள்ளனர்? என தேடி வருகின்றனர். மேலும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் எங்கு உள்ளனர்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் மும்பையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவிக்கையில், இந்த வழக்கு தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, டெல்லி என பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால் தமிழக போலீசாரால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. எனவே சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

தேர்வு எழுதிய மாணவரை பிடித்தால் மட்டுமே இந்த வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழும். மேலும் மும்பையில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் உண்மை குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்? என்ற பரபரப்பு நிலவி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக