வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தென் மாவட்ட தொழிலுக்கு ஆபத்து!.. மத்திய அமைச்சரின் உத்தரவால்...

மத்திய அமைச்சரின் உத்தரவு:  தென் மாவட்ட  தொழிலுக்கு ஆபத்து! மின்னம்பலம் : வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வர்த்தகம் தமிழ்நாடு முழுதும் நடைபெறுகிறது. வட மாவட்டங்களில் முந்திரி ஏற்றுமதி நடைபெறும். தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நடைபெறும்.
தென் மாவட்ட ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது மத்திய அரசின் மதுரை மண்டல வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் அலுவலகம். தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் வெளிநாட்டு வர்த்தக மண்டல இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் இருக்கும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குனர்அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைப்பது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல மண்டல அலுவலகங்களைக் குறைத்து ஒன்றோடொன்று இணைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.
அந்த வகையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் மதுரை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இருக்கும் ஃபைல்கள், உட்கட்டமைப்புகள் ஆகியவற்றை சென்னை அலுவலகத்தோடு இணைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் எக்ஸ்போர்ட் தொடர்பான புதிய விண்ணப்பங்களை 16 ஆம் தேதியிலிருந்து சென்னை அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தென் மாவட்டங்களின் ஏற்றுமதி இறக்குமதி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள் தொழிலதிபர்கள்.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியிருக்கிறார்.
செப்டம்பர் 19 ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில்,
“வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குனர் அலுவலகம் மதுரையில் இருப்பதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருக்கும் ஏராளமான தொழில்முனைவோர்களின் தேவைகளை துல்லியமாக பூர்த்தி செய்து வந்தது. தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் தொழில் விவகாரங்களுக்காக சென்னை மண்டல அலுவலகத்துக்கு அலைய வேண்டி அவசியம் மதுரை மண்டல அலுவலகத்தால் இல்லாது போயிருந்தது. இந்த நிலையில் மதுரை மண்டல அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைக்கும் முடிவால் தென் மாவட்ட தொழில் முனைவோர்கள் குறிப்பாக என் தொகுதியான தூத்துக்குடியில் இருக்கும் தொழில் முனைவோர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாவார்கள். அவர்கள் ஏற்கனவே பல்வேறு இடர்களுக்கிடையில் தொழில் நடத்திவரும் நிலையில் மதுரை மண்டல அலுவலகம் சென்னைக்கு போவது அவர்களுக்கு மேலும் ஒரு இடையூறாக அமைந்துவிடும்.
தமிழ்நாட்டின் தென் பகுதி மக்களின் நீதித் தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் அவர்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் திறக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து பல ஆண்டுகளாக மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை இயங்கி வருகிறது. இதேபோல மண்டல ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக அலுவலகமும் இயங்க வேண்டும். எனவே இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக நாம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் ஏலக்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவருமான தக்கலை அப்துல் வாஹித்திடம் பேசினோம்.
“மத்திய அரசின் இந்த முடிவால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். முன்பு இந்த மண்டல அலுவலகம் சென்னையில்தான் இருந்தது. பின் போராடி மதுரைக்குக் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் அதை சென்னைக்கு எடுத்துச் சென்றால், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் அனைவரும் மீண்டும் லைசென்ஸ் வாங்குதல் ரினுவல் செய்தல் என ஒவ்வொரு விஷயத்துக்கும் சென்னைதான் செல்ல வேண்டியிருக்கும். தூத்துக்குடியில் துறைமுகம் இருக்கும் நிலையில் இதுபோன்ற ஏற்றுமதி மண்டல அலுவலகம் மதுரையில் இருப்பதே சரியானது.
மேலும் இது சார்ந்த ஏஜென்சிகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் இப்போது தென் மாவட்டங்களில் இருக்கின்றன. மதுரை மண்டல அலுவலகம் சென்னைக்குப் போய்விட்டால் இந்த ஏஜென்சிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும். ஏற்கனவே தொழிலும் வர்த்தகமும் நலிந்துவரும் நிலையில் தென் மாவட்டத்துக்கு மத்திய அரசின் இந்த முடிவு மேலும் ஒரு இடியாகவே இருக்கும்” என்கிறார் தக்கலை அப்துல் வாஹித்.
தமிழக அரசும், எம்.பி.க்களும் ஒட்டுமொத்தமாகத் திரண்டு இதைத் தடுத்து நிறுத்துவார்களா?
-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக