வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சந்திரலேகாவும் ..சசிகலாவும் .. தொடரும் விசித்திர பந்தம் ..

சாவித்திரி கண்ணன் : அதிர்ச்சியடைவதா? ஆச்சரியப்படுவதா?
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
என்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதா?
சந்திரலேகா கடலூர் மாவட்ட கலெக்டராக இருக்கும்போது அங்கே வேலை பார்த்தவர் நடராஜன்.
நடராஜன் தன் மனைவி சசிகலாவை சந்திரலேகாவிற்கு அறிமுகப்படுத்தியது முதல் சந்திரலேகாவிற்கு சம்பளமில்லா வேலைக்காரியாக தன்னை தகவமைத்து, அவரது மனதில் இடம் பிடித்து அவரது சிபாரிசில் ஜெயலலிதாவிற்கு அறிமுகமானவர் தான் சசிகலா!
அப்படி அறிமுகமான சசிகலா ஒரு அதிகார மையமாக ஆகி, ஜெயலலிதாவுடன் இணைந்து, சட்டத்துக்கு புறம்பாக தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள மறுத்த சந்திரலேகாவை ’ஆசிட்’ ஆபத்துக்கு இரையாக்கியது வரலாறு!
அந்த சோக சம்பவம் மக்களின் மனதில் சந்திரலேகாவிற்கு மிகப் பெரிய அனுதாபத்தை பெற்றுத் தந்தது.
அப்படி பாதிக்கப்பட்ட சந்திரலேகா இன்று சசிகலாவை சந்திக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
ஒரு காலகட்டம் வரை நான் சந்திரலேகா அவர்கள் மீது நல்ல மரியாதை கொண்டிருந்தேன்.
அவர் பிராமணப் பெண்ணாக இருந்தாலும் தலித் இளைஞரை திருமணம் செய்யும் அளவுக்கு முற்போக்கு உள்ளவராக இருந்தார். (அந்த திருமணம் பிற்காலத்தில் முறிவானது வேறு விஷயம்!)

சந்திரலேகாவின் தாயார் ஒரு நல்ல எழுத்தாளர். அவரது பெயர் சாரதா விஸ்வநாதன். எனக்கு நன்கு பழக்கம்! என்னிடம் தாயன்புடன் பழகியவர்.எங்கள் இருவருக்கும் பரஸ்பர அன்பும்,மரியாதையும் உண்டு.
அவர் மூலமாக சந்திரலேகா பற்றியும், அந்த குடும்பம் பற்றியும் நான் நிறைய அறிய முடிந்தது!
சந்திரலேகாவின் சகோதர்கள் அனைவருமே சாதி கடந்து, மதம், நாடு என அனைத்தைம் கடந்து திருமணம் செய்து கொண்டவர்களே!
சந்திரலேகாவின் அப்பா ஆன்மீகம் நிறைந்த ஞானஸ்தர்! அவர் தன் மனைவியிடம்,’’ தான் இந்த நாளில், இந்த மணியளவில் என் உயிரை உடம்பிலிருந்து எடுத்துக் கொண்டு விடை பெறுவேன்’’ என பல வருடங்கள் முன்பே சொல்லி அந்தப்படி அமைதியாக உயிர் நீத்தார் என்று அந்தம்மா சொல்லக் கேட்டு நான் சிலிர்த்துப் போனேன்!
அப்படி ஒரு ஞானத் தந்தையின் மகள் சந்திரலேகா, சுப்பிரமணியசாமி மாதிரியான மனிதரின் கூடா நட்பால் கேடான இடம் நோக்கி செல்வது காலத்தின் கோலம்!
எல்லாம், திமுக மீதான பாஜகவின் துவேஷமே!
திமுகவிற்கு எதிராக பலமான ஒரு கட்சியாக அதிமுகவை நிலைக்கச் செய்ய, ’எந்த அளவுக்கும் கீழாக இறங்கவும் தயார்’ என சமீப காலமாக பாஜக செயல்படுவதின் விளைவே தமிழகத்தில் மக்கள் விரும்பாத ஒரு ஆட்சியை அது தூக்கி சுமப்பது!
உண்மையில் பாஜகவின் இத்தகு அணுகுமுறைகளே திமுகவை உயிர்ப்புடன் வைக்க உதவுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக